ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவத் தலைவர்களில் ஒருவரான உமர் காலித் கைது செய்யப்பட்டது தொடர்பான வழக்கில்,நீதிமன்றம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக அவரது பேச்சின் அசல் வடிவம் எங்கே உள்ளது என்ற கேள்விக்கு போலீசாரிடம் பதில் இல்லை. அவர்கள், (பாஜக ஆதரவு தொலைக்காட்சியான) ரிபப்ளிக் டிவி மற்றும் நியூஸ் 18 செய்தி சேனல்களை கைகாட்டுகிறார்கள். அந்த செய்திச் சேனல்கள் பாரதிய ஜனதா கட்சியின் ஐடி பிரிவை கைகாட்டுகின்றன. உண்மையில் இதுதான், தேசவிரோத செயல்கள் என்று முத்திரைகுத்தி கைது செய்யப்படும் சமூக செயற்பாட்டா ளர்கள் தொடர்பான வழக்குகளின் உண்மையான நிகழ்வுத் தொகுப்பாக இருக்கிறது. யுஏபிஏ, என்எஸ்ஏ, தேசதுரோகச் சட்டம் ஆகியவற்றின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள இந்த அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
*****************
அமெரிக்காவில் பிறந்த இந்தியரான கல்வியாளர் கெய்ல் ஓம்வேத் தமது 81 வயதில் ஆகஸ்ட் 25 அன்று காலமானார். பகுஜன் இயக்கத்தில் பங்கேற்று பட்டியலின மக்களுக்காக குரல் கொடுத்த ஒரு சிறந்த அறிவுஜீவிஅவர், தனது கணவரும் சமூக செயற்பாட்டாள ருமான பாரத் பட்நாகருடன் இணைந்து ஷ்ரமிக் முக்தி தள் எனும் இயக்கத்தை நிறுவியவர். ‘மேற்கு இந்தியாவில் பிராமணரல்லாதோர் இயக்கம்’ என்ற பொருளில் ஆராய்ச்சி மேற்கொண்டவர். எளிய மக்களுக்கான தனது உறுதிப்பாட்டில் சமரசம் செய்து கொள்ளாத கெய்ல் ஓம்வேத், நமது சமூக நிலைமைகள் குறித்து ஆழமாக புரிந்துகொள்வதற்கு உதவும் வகையில் பல படைப்புகளை அளித்தவர். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
*****************
முதல் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசியை மே 2ம்தேதிக்கு முன்பு செலுத்திக் கொண்டவர்கள் 16 வாரங்கள் கழித்தும் இரண்டாவது டோஸ் கிடைக்காமல் அல்லல்படுகிறார்கள் என்கிற செய்திகள் வந்துகொண்டு இருக்கின்றன. மே மாதத்தில் சுமார் 4.3 கோடி பேருக்கு முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. ஜுன் முதல் இரண்டு வாரங்களில் 5 கோடி பேருக்கு முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. இன்னும் முதல் டோஸ்தான் ஓடிக்கொண்டிருக்கிறது. இரண்டாவது டோஸ் செலுத்த வேண்டிய காலம் கடந்தபின்பும் கோடிக்கணக்கான மக்கள் காத்திருக் கிறார்கள். நாளொன்றுக்கு சுமார் 50லட்சம் டோஸ்கள்தான் செலுத்தப்படுகிற நிலையில் இரண்டாவது டோசுக்காக காத்திருப்ப வர்களுக்கு எப்போது செலுத்தப்படும் என்ற கேள்வி துரத்துகிறது. தடுப்பூசி செலுத்துவதில் எந்த திட்டமிடலும் இல்லாமல் மிக மோசமான முறையில் அரசாங்கம் கையாள்வதன் விளைவாக பெருந்தொற்று துயரத்திற்கு இணையாக குழப்பங்களும் உருவாகியுள்ளன. இதன் விளைவு, மூன்றாவது அலை உருவாகும் வாய்ப்பு; கொரோனா வைரசின் புதிய வகைகளும் உருவாகும் அபாயம். எனவேதான் மீண்டும் மீண்டும் சொல்கிறோம், மோடி அரசு அதிவேகமாக தடுப்பூசிகொள்முதல் செய்ய வேண்டும்; தடுப்பூசி செலுத்தும் வேகத்தை தீவிரப்படுத்த வேண்டும்.
*****************
ஒன்றிய நிதி அமைச்சர் அறிவித்துள்ள தேசிய பணமாக்கல் திட்டத்தின்கீழ் 400 ரயில்நிலையங்கள், 150 ரயில்கள், 26700 கிமீ. நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகள், 25 விமானநிலையங்கள் என ஒட்டுமொத்த தேசிய வளங்களும் விற்கப்பட இருக்கின்றன. தேசிய பணமாக்கல் திட்டமென்பது இந்தியாவையே விற்பது என்பதைத் தவிர வேறல்ல. தேசத்தின்வளங்களைச் சூறையாடுவது, மக்களைத் துயரத்தில் தள்ளுவது என்ற இரட்டைக் கொடியதாக்குதலை மோடி அரசு கட்டவிழ்த்து விட்டுள்ளது. நமது சாலைகளையும் ரயில்வேயை யும் கார்ப்பரேட்டுகள் தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ளப்போகிறார்கள். அவர்கள் புதிய கட்டணவிகிதங்கள், வரி விகிதங்களை அமலாக்குவார்கள். மக்களை கசக்கிப் பிழிவதன் மூலம் தங்களது கொழுத்த லாபத்தை உறுதி செய்வார்கள்.