தேர்தலில் பண விநியோகத்தை தடுப்பதில் தேர்தல் ஆணையம் தோல்வியடைந்துவிட்டது என்றே கூறத் தோன்றுகிறது. மத்திய ஆளுங் கட்சியான பாஜக, மாநில ஆளுங்கட்சியான அதிமுகஇடம் பெற்றுள்ள கூட்டணியினர் தமிழகம் முழுவதும் பணத்தை வெள்ளமாக பாய விடுகின்றனர். வாக்காளர்களை விலை கொடுத்து வாங்க பலஇடங்களில் பண விநியோகம் தாராளமாக எவ்விதத்தடையுமின்றி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.தேர்தல் அதிகாரிகளும் ஆங்காங்கே வாகனசோதனை என்ற பெயரில் வேடிக்கை காட்டிக் கொண்டிருக்கின்றனர். அவ்வப்போது பணம் மற்றும் நகை கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகின்றன. ஆனால் ஆளுங்கட்சியினர் சர்வசாதாரணமாக பண விநியோகம் செய்து கொண்டிருக்கின்றனர். குறிப்பாக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மகன் போட்டியிடும் தேனி மக்களவைத்தொகுதியில் ஒரே நாள் இரவில் கனகச்சிதமாக பண விநியோகம் நடந்து முடிந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
தமிழக எம்எல்ஏக்கள் விடுதியில் உள்ள இரண்டு அமைச்சர்கள் அறைகள் உட்பட வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். ஆனால் இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் ஆவணங்கள் குறித்து எந்ததகவலும் வெளியிடப்படவில்லை. மாறாக எதிர்க்கட்சி வேட்பாளர்களுக்கு எந்த வகையிலும் சம்பந்தமில்லாத சிலரிடம் சோதனை நடத்தப்பட்டாலும் வருமான வரித்துறையே அதுகுறித்து பெருமளவு செய்திகளை வெளியிட்டு பிரச்சாரம் செய்கிறது. ஆளுங்கட்சியினரின் பண விநியோகம் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் தேர்தல் பார்வையாளர்களிடம் புகார் செய்தால்பெயரளவுக்கு போலீசாரே அனுப்பி விசாரிக்கிறார்கள். அவர்கள் உடனடியாக பணத்தை இடமாற்றம் செய்து விடுகின்றனர். இதற்குதான் இந்தவிசாரணை நாடகம். மறுபுறத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் எதிர்க்கட்சியினரை பண விநியோகம் செய்ய முயன்றதாக பிடித்து காவல்நிலையத்தில் உட்கார வைக்கும் காரியங்களும் நடந்து கொண்டிருக்கிறது.
அடுத்த நாட்களும் பண விநியோகம் ஆளுங்கட்சியினரால் முழு வீச்சில் நடைபெறுவதற்கான வாய்ப்பு உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் என்ன செய்யப் போகிறது என்பதுதான் கேள்வி. பல்வேறு நவீன உத்திகளை பயன்படுத்தி ஆளுங்கட்சியினர் பண விநியோகம் செய்யதிட்டமிட்ட நிலையில், காவல் துறை வாகனம், ஆம்புலன்ஸ் போன்றவையும் இதற்காக பயன்படுத்தப்படுவதுதான் கொடுமையிலும் கொடுமை.சாதாரண வியாபாரிகள், விவசாயிகளிடம் சோதனை என்ற பெயரில் ஆவணமில்லை என்றுகூறி பணத்தை பறிமுதல் செய்தவர்கள் தற்போது ஆளுங்கட்சியினரின் அத்துமீறலையும் அராஜகத்தையும் வேடிக்கை பார்ப்பதோடு துணை போவதும் தேர்தல் நடைமுறைகுறித்த நம்பகத்தன்மையையே பாதிப்படையச்செய்துள்ளது. இனியாவது பண விநியோகத்தைதடுக்க தேர்தல் அதிகாரிகள் கடுமையான நடவடிக்கைஎடுக்க வேண்டும். இல்லையென்றால் தேர்தல் ஆணையமும் ஆளுங்கட்சிகளின் ஒரு பிரிவு என்றே புரிந்து கொள்ளப்படும்.