politics

img

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு--மேற்குவங்கத்தில் வன்முறை; கண்ணீர்ப்புகை குண்டுவீச்சு

கொல்கத்தா, ஏப். 18-மக்களவை தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 18 (வியாழக்கிழமை) நடைபெற்றது. மேற்கு வங்கத்தில் டார்ஜிலிங், ராய்கஞ்ச் மற்றும் ஜல்பைகுரி ஆகிய மூன்று தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது. இத்தொகுதிகளில் பல பகுதிகளிலும் வன்முறை வெறியாட்டங்கள் நடைபெற்றுள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலை மைக்குழு உறுப்பினரும், ராய்கஞ்ச் தொகுதி வேட்பாளருமான முகமது சலீம், ராய்கஞ்ச் தொகுதியில் தன் வாக்குரிமையைச் செலுத்துவதற்காக சென்றுகொண்டிருந்த போது அவரது கார் மீது கற்கள் வீசப்பட்டன.முகமது சலீம், காங்கிரஸ் எம்.பி. தீபா தாஸ்முன்ஷியை எதிர்த்துப்போட்டியிடுகிறார். அவருக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரும் தீபாவின் தந்தையுமான பிரிய ரஞ்சன் தாஸ்முன்ஷி அங்கே எம்பியாக இருந்தார்.“இஸ்லாம்பூரின் பட்டகரா வாக்குச்சாவடி முன்பு திரிணாமுல் காங்கிரசைச் சேர்ந்த குண்டர்கள் வாக்காளர்களை மிரட்டிக் கொண்டிருந்தனர். நான் அங்கே போக முயற்சித்தபோது என் வாகனத்தின்மீது தாக்குதல் தொடுத்தார்கள்’’ என்று முகமது சலீம் கூறினார். “திரிணாமுல் குண்டர்கள் மீது போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை,” என்று அவர் மேலும் கூறினார்.


“எங்கெல்லாம் மத்திய ரிசர்வ் போலீசார் பாதுகாப்புப்பணியில் இல்லையோ அங்கெல்லாம், திரிணாமுல் காங்கிரசார் வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றி தாங்களே அனைத்து வாக்குகளையும் பதிவு செய்திட திட்டமிட்டிருந்தனர். அவர்கள் வாக்களிக்க வந்த உண்மையான வாக்காளர்களை மிரட்டித் தடுத்து நிறுத்திக் கொண்டிருந்தனர்” என்றும் சலீம் கூறினார்.கிர்பார் அருகில் இருந்த வாக்குச்சாவடி ஒன்றில் வன்முறை வெறியாட்டங்கள் நடந்ததாலும், குண்டர்கள் தங்களை வாக்களிக்க அனுமதிக்க மறுத்ததாலும், அந்தப் பகுதி வாக்காளர்கள் அதனைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்தப்பகுதியில் போலீசார் தடியடி நடத்தினர்.புருலியா பகுதியிலும் வன்முறை வெடித்துள்ளது. அங்கே சேனபானா கிராமத்தில், பாஜக இளைஞரணியைச் சேர்ந்த சிசுபால் சாஹி ஒரு மரத்தில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்திருக்கிறார். இதுதொடர்பாக காவல்துறையினர் புலன்விசாரணை மேற்கொண்டி ருக்கிற அதே சமயத்தில், திரிணா முல் காங்கிரஸ் குண்டர்களால் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று பாஜகவினர் கூறுகின்றனர்.(ந.நி.)