internet

img

பழைய சொல், புதிய தேடல் ‘ஒள்ளி’

சென்னையின் முதல் கலங்கரை விளக்கம் 1796 ஆம் ஆண்டு புனித ஜார்ஜ் கோட்டையில் மரங்களாலான கோபுரமாக அமைக்கப்பட்டு பிறகு அது கேப்டன் ஸ்மித் என்பவரால் எஸ்பிளனேடு ( பாரிமுனை) பகுதியில் கட்டுமானமாக நிறுத்தப்பட்டது.   இதேபோன்று 1892 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்ட மற்றொரு விளக்கம் இன்று சென்னை உயர்நீதி மன்றம் வளாகத்திற்குள் அமையப்பெற்றுள்ளது. இந்த இரண்டாவது கலங்கரை விளக்கம் கட்டப்பட்டு 175 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு சிறப்பு அஞ்சல் தலை,  சென்னை தினம் உருவான நாளான  ஆகஸ்ட் 22, 2019 அன்று வெளியிடப்பட்டது. 
கலங்கரை விளக்கம் - இதன் சங்கப் பெயர் என்ன? 
இன்று Lighthouse என அழைக்கப்படும் கலங்கரை விளக்கம் முன்பு BEACON என அழைக்கப்பட்டது. கிமு 280 இல் எகிப்து அலெக்ஸாண்டிரியா கடற்கரையில் அமைக்கப்பட்ட BEACON LIGHT உலகின் முதல் கலங்கரை விளக்கம் என்கிறது வரலாறு. இதற்கு நாதீ, குன்றின் மேலிட்ட விளக்கு, வழிகாட்டொளி, தீப்பந்தம், குறிவிளக்கு எனப் பல பொருளுண்டு. இதற்கு முன்பே தமிழகத்தில் கலங்கரை விளக்கம் இருந்ததாக சங்கப் பாடல்கள் உண்டு. 
சங்க காலத்தில் தெற்கிலிருந்து வடக்காக அமையப்பெற்ற துறைமுகங்கள் முறையே 
கொற்கை (பாண்டியநாடு), பூம்புகார் (சோழநாடு), எயிற்பட்டினம் (ஒய்மாநாடு), நீர்ப்பெயற்று (தொண்டை நாடு). இவற்றில் பெரும்பாணாற்றுப்படை தொண்டை  கலங்கரை விளக்கத்தையும் சிலப்பதிகாரம் பூம்புகார் விளக்கத்தையும் பாடியுள்ளன.
கடியலூர் உருத்திரங்கண்ணனார் காஞ்சி தலைநகர் தொண்டையில்  அமையப்பெற்ற நீர்ப்பெயற்று  கலங்கரை விளக்கம் குறித்து ‘
இரவின் மாட்டிய இலங்குசுடர் ஞெகிழி/ உரவுநீர் அழுவத்து ஓடுகலம் கரையும் துறை’ எனப் பாடியுள்ளார்.  இதன்படி, இரவில் எரியும் விளக்கால் கடற்பரப்பிலே உலாவும் கலம் கரை வந்து சேரும் துறை. 
சிலப்பதிகாரம் - புகார் காண்டம் கடலாடு காதை -காவிரிபூம்பட்டினத்தில் ஒளிர்ந்த பல்வேறு விளக்குகள் குறித்துப் பாடுகிறது. பகர்வோர் விளக்கம், கைவினை விளக்கம், மோதகம்(பிட்டு) விளக்கம், காரகல் (அப்பம்) விளக்கம், கடைகெழு விளக்கம், மீன்விலைப் பகர்வோர் விளக்கம், கலங்கரை விளக்கம், மீன்திமில் விளக்கம்,  விடி விளக்கம்,
காவலர் விளக்கம். இதில் கலங்கரை விளக்கத்தை சிலப்பதிகாரம்
‘இலங்கு நீர் வரைப்பிற் கலங்கரை விளக்கம் ‘ என்கிறது. கலம் - கப்பல்; கரைதல் - அழைத்தல் எனப் பொருள் தருகிறார் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார்.
மதுரை மருதனிளநாகனார் இயற்றிய அகநானூறு பாலைத் திணை ‘கலங்கரை விளக்கு’ என்பதை ‘மாடவொள்ளெரி’ எனக் குறிப்பிடுகிறது. ‘புலவுத்திரைப் பெருங்கடல் நீரிடைப் போழ/இரவும் எல்லையும் அசைவின் றாகி/விரைசெலல் இயற்கை வங்கூழ் ஆட்டக்/கோடுயர் திணிமணல் அகன்துறை/ நீகான் மாட வொள்ளெரி மருங்கறிந்து ஒய்ய’( அகநானூறு -255).
‘மாட ஒள்எரி - கலங்கள் துறையறிந்து வருதற் பொருட்டு உயரிய மாடத்தின்மீது அமைக்கப்பெற்ற ஒள்ளிய விளக்கு( நாவலர் ந.மு.வே)
‘துள்வேர்ப்பர் ஒள்ளி யவர்’ என்கிறது  திருக்குறள்.  இங்கு ஒள்ளி என்பது தெளிந்த அறிவு. ஒள்ளி என்பதே வெள்ளி என்றானது. வெள்ளி கோளிற்கு ஒள்ளி என்றொரு பெயருண்டு;
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கண்டறிந்த ஒளிமின் விளைவு, ராண்ட்ஜன் கண்டறிந்த எக்ஸ் கதிர் இவற்றின் அடிப்படை அலகு - photon(ஒள்ளி). கொள்ளி, ஒள்ளியுடன் தொடர்புடைய ஒரு சொல். ஒள்ளி என்பதற்கு ஒண்மை, நுண்ணறிவு, அறிவு ஒளி, செம்பொன் என பலப் பொருளுண்டு.
கலங்கரை விளக்கம் - கலம் + கரை + விளக்கம். அதாவது, கலம் - மரக்கலம், நாவாய்; கரை - அழைக்கிற, கூவுகிற; விளக்கம் - விளக்கு நிலையம். 
விளக்கம் என்பதற்கு ஒளி அல்லது வெளிச்சம் எனப் பொருளாகும்.  ஒளி என்பதன் வேர்ச்சொல் ஒள். 
ஒள் - அழகு, உண்மை, ஒளி, நல்ல அறிவு, மேன்மை ( பாலூர் கண்ணப்ப முதலியார்  தமிழ் இலக்கிய அகராதி) 
ஒள்ளியன் - ஒளி செய்வோன்; 
ஒள்ளிமை - அறிவு விளக்கம்; ஒள்ளொளி - மிகுந்த ஒளி ( வேமன் தமிழ்ச்சொல் அகராதி)
ஒள் - ஒள்ளி - ஒளி
Lighthouse என்பதற்கு கலம் அழைக்கும் ஒளி என்றும் Beacon Light என்பதை ஒள்ளி, அதாவது தூரத்திலிருந்து வரும் ஒளி எனவும் பொருள் கொள்ளலாம்.