ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் அனைவரும் கவலை கொள்ளும் விஷயமாக இருப்பது தங்களுடைய ஃபோனை யாராவது ஹேக் செய்து விடுவார்களோ, கண்காணிப்பார்களோ என்பதுதான்.
ஃபோன் லாக் பயன்படுத்தவும்
இதுபோன்ற சிக்கல்களைத் தவிர்க்க ஃபோன்களிலும் ஆப்களிலும் சில வசதிகள் ஏற்கனவே வழங்கப்பட்டிருக்கின்றன. கைரேகை அடையாளம் (Finger Print Lock), முக அடையாளம் (Face Lock), பேட்டர்ன் லாக் (Pattern Lock), நெம்பர் லாக் போன்ற ஆண்ட்ராய்ட் ஃபோன்களில் வழங்கப்படும் பாதுகாப்பு அம்சங்களில் ஏதேனும் ஒன்றையாவது உங்கள் ஃபோனில் பயன்படுத்தவும்.
ஆப் லாக் அவசியம்
வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் வங்கிக் கணக்கு ஆப்கள், வாலட் ஆப்கள் பயன்படுத்துபவர்கள் அவற்றுக்குத் தனியாக உள்ள லாக் அம்சங்களை இயக்கிப் பயன்படுத்தவும். ஆப்களுக்கு தனியே லாக் அமைக்கும் வசதியைப் பயன்பாட்டில் வைத்துக் கொள்வதும் நல்லது.
இணைய முகவரிகளை கிளிக் செய்யவேண்டாம்
அத்துடன் வாட்ஸ்அப், ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் பயன்படுத்துகிறவர்கள் அதில் பகிரப்படும் இணையதள முகவரி இணைப்புகளை (Web Address link) உடனே கிளிக் செய்வதைத் தவிர்க்க வேண்டும். நமக்கு வரும் இணைப்புகள் சரியானவைதானா என்பதை அதன் முகவரியைப் பார்த்து உறுதி செய்து பிறகுதான் திறக்க வேண்டும். உங்களுக்கு அதுகுறித்த விபரம் தெரியவில்லையென்றால் கிளிக் செய்யவே வேண்டாம். அதேபோல உங்களைக் கவரும் விதமான ஆஃபர்களைத் தருவதாகக் கூறி பகிரப்படும் இணைய இணைப்புகளை கிளிக் செய்வதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும்.
ஆப்களுக்கு பிளே ஸ்டோர் பயன்படுத்துங்கள்
உங்களுக்கு அவசியமான ஆப்கள் தவிர்த்து மற்ற ஆப்களை இன்ஸ்டால் செய்வதைத் தவிர்க்கவும். அதேபோல வேறு நபர்களிடமிருந்தோ, கூகுள் பிளே ஸ்டோர் தவிர்த்து வேறு இணையதளங்கள் மூலமாகவோ ஆப்களைப் பதிவிறக்கி பயன்படுத்துவது நல்லதல்ல. இவ்வாறு பதிவிறக்கும் ஆப்களில் வைரஸ், மால்வேர், ஹேக்கிங் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். எந்த ஆப் டவுன்லோட் செய்வதாக இருந்தாலும் கூகுள் பிளே ஸ்டோர் மூலமாகவே பதிவிறக்கவேண்டும். ஆப்பிள் ஃபோன் பயன்படுத்துபவர்கள் ஆப்பிள் ஸ்டோரில் வழங்கப்படும் ஆப்களை மட்டுமே பதிவிறக்க வேண்டும்.
அப்டேட் அவசியம்
ஃபோன் இயங்குதளத்திற்கு (Operating System) கிடைக்கும் அப்டேட்களை அவ்வப்போது புதுப்பித்துக் கொள்வது நல்லது. இதனை போன் செட்டிங்ஸ் சென்று (System Update) என்பதைத் தேடி அதனை கிளிக் செய்வதன் மூலம் அப்டேட்களைப் பெறலாம். அதேபோல ஆப்களை அடிக்கடி அப்டேட் செய்து கொள்வதும் அவசியமாகும்.
ஃபோன் பயன்பாட்டில் கவனம்
உங்கள் மொபைலை அறிமுகமில்லாத நபர்களிடம் தருவதைத் தவிர்க்கவும். பழுது நீக்குவதற்கு கொண்டு செல்லும்போதும் அறிமுகமான அல்லது அங்கீகரிக்கப்பட்ட நபர்களிடமே தரவேண்டும். பழுது நீக்குதல் சர்வீஸ் போன்ற சமயங்களில் முடிந்தால் டேட்டாக்களை பேக்கப் செய்துவிட்டு தரவும். மெமரி கார்டு, சிம்கார்டு மற்றும் வங்கி, வாலட் தொடர்பான ஆப்களை அன்இன்ஸ்டால் செய்துவிடுவது நல்லது.
உங்கள் பாதுகாப்பு உங்கள் கைகளில்
ஃபோன் அழைப்புகள் வழியாக உங்கள் வங்கிக் கணக்கு விபரங்கள், வாலட் விபரங்கள், மின்னஞ்சல் முகவரிகள், கடவுச் சொற்கள், ஃபோன் லாக் அம்சங்கள் பற்றி விசாரிப்பவர்களுக்கு பதில் அளிக்கவேண்டாம். அவர்கள் ஆஃபர்கள் தருவதாகக் கூறி ஏதேனும் ஆப்களை உங்கள் மொபைலில் நிறுவச் சொன்னால் அவற்றை பதிவிறக்கம் செய்யவும் வேண்டாம்.உங்கள் பாதுகாப்பு உங்கள் கைகளில்தான் உள்ளது. ஒரு மொபைல் உங்கள் மொத்த தகவல்களையும் சொல்லிவிடக்கூடிய அளவு திறன் வாய்ந்தது. அதனை கவனமாகவும், எச்சரிக்கையாகவும் பயன்படுத்துவது உங்கள் பொறுப்புதான். இங்கு கூறியுள்ள எச்சரிக்கை குறிப்புகளை சரியாகப் பின்பற்றினாலே உங்களது பெரும்பாலான பாதுகாப்பு உறுதியாகிவிடும்.