பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு, பணமில்லா பரிவர்த்தனையை அதிகரிக்க வங்கிகள் மூலமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. ஏடிஎம் வழியாக பணம் எடுப்பதற்கு மாதத்திற்கு 5 முறை என்றும், ஒரு வாரத்தில் இவ்வளவு தொகைதான் எடுக்கமுடியும் என்பது போன்ற கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. தற்போது, பணம் டெபாசிட் செய்வதும் மாதத்திற்கு 3 முறைதான் என்பது போன்ற கட்டுப்பாடுகளை சில வங்கிகள் அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளன.
பணமில்லா பரிவர்த்தனைக்காக, ஆன்லைன் வங்கி அல்லது ஏடிஎம்/டெபிட் கார்டு/கிரெடிட் கார்டு பயன்படுத்தியோ அல்லது மொபைல் பேங்க் சேவைகள் மூலமாகவோதான் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவேண்டிய சூழல் இதன்மூலம் உருவாக்கப்பட்டு வருகிறது. மக்கள் முழுமையாக இந்த மாற்றத்திற்கு தயாராகி விட்டார்களா? இதில் ஏற்படும் தவறுகளுக்கு எளிமையான உடனடித் தீர்வுகள் இருக்கின்றனவா? என்று பார்த்தால் அது இன்னும் தொடங்கிய இடத்திலேயே இருப்பது போன்ற தோற்றத்தையே தருகிறது.
இந்திய ரிசர்வ் வங்கியிடம் 50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கு அனுமதி பெற்றிருக்கின்றன. ஆன்லைன் எனும்போது அதில் ஸ்மார்ட்போன் ஆப் வழியாக மேற்கொள்ளும் பணப் பரிவர்த்தனையை மட்டுமே குறிப்பிடுகிறோம். அரசின் பீம் யுபிஐ முதல் கூகுள் பே, எஸ்பிஐ யோனோ, பேடிஎம், போன்பே, வோடாஃபோன் எம்பிளேஸ், ஏர்டெல் பேமண்ட்ஸ் பேங்க், ஜியோ மணி எனப் பல ஆப்கள் நம் பயன்பாட்டில் உள்ளன.
இத்தனை ஆப்கள் இருந்தாலும் சரியான வழிமுறைகள் மற்றும் முறையான பாதுகாப்பு அம்சங்கள் குறித்த விபரங்கள் தெரியாமலிருப்பதாலும், தவறுகள் நேர்ந்தால் அதற்கு தீர்வுகள் உடனடியாக கிடைக்காமல் போவதுமே பெரும்பாலான மக்கள் ஆன்லைன் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கு தயங்குகின்றனர்.
பாதுகாப்பு அம்சங்களைப் பொறுத்தவரை தொடர்ந்து மேம்படுத்தப்பட்டுக் கொண்டேதான் இருக்கிறது. அதுகுறித்த தெளிவான வெளிப்படையான அறிவிப்புகள் மக்களை முழுமையாக சென்றடைவதில்லை என்பதுதான் முக்கியமான பிரச்சனை, அத்துடன், தவறுதலாக அனுப்பப்பட்ட பணம் திரும்பப் பெறுவதும் உடனடியாக செய்ய முடியாத நிலை உள்ளது. இதற்கான காத்திருப்பு நாட்கள் கணக்கில் என்பதால் மக்கள் இருக்கும் பணத்தை இழந்துவிட்டு என்ன செய்வது என்று தவிக்கும் நிலைக்கு ஆளாகிவிடுவோம் என்று அச்சப்படுகின்றனர். ரீச்சார்ஜ் செய்தல், மின்கட்டணம் போன்ற சிறு தொகைகளுக்கு டிஜிட்டல் வாலட்கள், யுபிஐ (UPI Payment) வசதிகளைப் பயன்படுத்துபவர்கள் கூட பெரிய தொகையை அனுப்பும்போது தயக்கத்துடன்தான் ஆப்களை அணுகுகின்றனர்.
டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள நினைப்பவர்கள் சில பாதுகாப்பு குறிப்புகளை கவனத்தில் கொண்டால் பெரும்பாலான பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கமுடியும். அதற்கு இங்குள்ள வழிமுறைகளை கவனத்தில் கொண்டு பயன்படுத்திப் பாருங்கள் உபயோகமாக இருக்கும்.
1. ஒரே பெயர் தோற்றத்தில் போலி ஆப்களும் வலம் வருவதால், புதிதாக ஆப்கள் பதிவிறக்கம் செய்பவர்கள் சரியான ஆப்தானா என்பதை கவனமாக படித்துப் பார்த்துவிட்டு இன்ஸ்டால் செய்யவும். வங்கி ஆப்கள், நிறுவன ஆப்கள் எதுவானாலும் தயாரிப்பாளர் விபரத்தில் அவர்களுடைய பெயர் இருக்கிறதா என்பதை கவனிக்கவேண்டும். முடிந்தால் ஆப் பயன்படுத்தியவர்கள் பதிவிட்டுள்ள கருத்துரைகளைப் படித்துப் பார்த்து விபரங்கள் தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.
2. ஆப்கள் நிறுவிய பின்னர் பாஸ்வேர்ட் அல்லது பின் எண் அமைக்கும்போது, வழக்கமான பயன்பாட்டில் இருப்பதாக இல்லாமல் நினைவில் கொள்ளக்கூடிய புதுமையான ஒன்றாக இருக்கும்படி அமைத்துக் கொள்ளுங்கள். நம்முடைய பிறந்த தேதி, வாகன எண், குழந்தைகள் பெயர் உள்ளிட்ட சுய விபரத் தகவல்களைத் தவிர்த்து மாறுபட்ட ஒன்றை தேர்வு செய்து பயன்படுத்துங்கள். ஒரே பாஸ்வேர்டை பல ஆண்டுகள் வைத்திருப்பதைத் தவிர்த்து குறைந்தது 3 அல்லது 6 மாதத்திற்கு ஒருமுறையாவது மாற்றுங்கள்.
3. உங்கள் பாஸ்வேர்டு, பயனர் பெயர், மின்னஞ்சல் பாஸ்வேர்டு, வங்கிக் கணக்குடன் இணைந்த மொபைல் எண் போன்றவற்றை எப்போதும் பாதுகாப்பாக வைத்திருங்கள். மொபைல் எண் / ஏடிஎம் கார்டு/ கிரெடிட் கார்டு எது தொலைந்தாலும் உடனடியாக, சம்பந்தப்பட்ட நிறுவன சேவை மையத்தை தொடர்பு கொண்டு பிளாக் செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுங்கள்.
4. வாலட் ஆப்கள், வங்கி ஆப்கள் பதிந்து வைத்திருப்பவர்கள் ஃபோனுக்கும் தனியாக ஸ்கிரீன் லாக் பயன்படுத்துங்கள். கைரேகை வசதி இருந்தால் அதனை ஆக்டிவேட் செய்து கொள்ளலாம்.
5. ஆப்களை எப்போதும் அப்டேட் செய்து வைத்திருங்கள். அப்படி முடியாதவர்கள் பரிவர்த்தனைக்கு முன்பாக ஆப் அப்டேட் இருக்கிறதா என்பதை பிளே ஸ்டோரில் சரிபார்த்து - அப்டேட் செய்துவிட்டு அதன்பிறகு பரிவர்த்தனையை மேற்கொள்ளுங்கள்.
6. ஆப்களை பயன்படுத்திய பிறகு அவற்றை முழுமையாக மூடிவிட்டீர்களா என்பதை பரிசோதித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.
7. இலவசமாகக் கிடைக்கும் வை-ஃபை சிக்னல்களைப் பயன்படுத்தி, பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளாதீர்கள். வெளியிடங்களில், வை-ஃபையை அணைத்து வைப்பது நல்லது.
8. பரிவர்த்தனையின் போது SMS தகவல்கள் முக்கியமானவை. வங்கி OTP வசதிகளை கவனத்துடன் கையாளுங்கள். அடிக்கடி உங்களுடைய கணக்குவிபரங்களைச் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
9. கணக்கு விபரங்களை உள்ளிடும்போது இருமுறை சரிபார்த்து பிறகு உள்ளிடவும். சில ஆப்களில் கணக்கு எண் அல்லது மொபைல் எண் உள்ளிட்டவுடன் பெயர் காட்டும் வசதிகள் உள்ளன. அவற்றை சரிபார்த்துக் கொள்ளுங்கள். பரிவர்த்தனை வெற்றிகரமாக நிறைவடைந்ததற்கான SMS தகவல் கிடைத்துவிட்டதா என்பதையும் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
10. வணிக தளங்கள் அல்லது ஆப்களில் பரிவர்த்தனை மேற்கொள்ளும்போது உங்களுக்கு நம்பிக்கை ஏற்படாத பட்சத்தில் பரிவர்த்தனையை மேற்கொள்ளாதீர்கள்.
====என்.ராஜேந்திரன்====