டுவிட்டரில் ”நேசமணி” என்ற ஹேஷ்டாக் தற்போது இந்தியா அளவில் முதல் இடத்திலும், உலகளவில் இரண்டாம் இடத்திலும் டிரெண்டாகி வருகிறது.
இந்தியாவில், பிரதமர் மோடி இன்று பதவியேற்கிறார். இந்நிலையில், காலை முதல் டுவிட்டரில் ’மோடி சர்கார்2’ என்ற ஹேஷ்டாக் டிரெண்டாகி வந்தது. ஆனால் தற்போது அதனை பின்னுக்கு தள்ளியது ”நேசமணி” என்ற ஹாஷ்டாக். இந்த ஹேஷ்டாக், இந்தியா அளவில் முதல் இடத்திலும், உலகளவில் இரண்டாம் இடத்திலும் டிரெண்டாகி வருகிறது.
யார் இந்த நேசமணி என்று பார்த்தால், கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ஃபிரண்ட்ஸ் என்ற திரைப்படத்தில் வரும் வடிவேலுவின் கதாபாத்திரத்தின் பெயர் தான் நேசமணி. இந்த படத்தில் கிருஷ்ணமூர்த்தி என்ற கதாபாத்திரத்தின் கையில் இருந்து எதிர்பாராத விதமாக நேசமணியின் தலையில் சுத்தியல் விழுவது போன்ற நகைச்சுவை காட்சி இடம்பெற்று இருக்கும்.
கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு இடம்பெற்ற இந்த காட்சி, தற்போது ஏன் டிரெண்டாகி வருகிறது. இதற்கு காரணம், சமூக வலைத்தளத்தில் சிவில் இன்ஜினியரிங் லேன்னர்ஸ் என்ற குரூப்பில், சுத்தியல் படத்தை வெளியிட்டு இந்த கருவியின் பெயர் என்ன என்ற கேள்வி பதியப்பட்டது. இதன் கீழ் விக்னேஷ் பிரபாகர் என்பவர் ’இதற்கு பெயர் சுத்தியல். இதை எதன்மீதாவது அடித்தால் ‘டங்க் டங்க்’ என சத்தம் வரும். ஜமீன் மாளிகையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது பெயிண்டிங் காண்ட்ராக்டர் நேசமணியின் தலையில் இது விழுந்தது. இதனால் அவரது தலை உடைந்துவிட்டது. அதனால் நேசமணிக்காக பிராத்தனை செய்ய வேண்டும்’ என்று பதிவிட்டார்.
இவ்வாறு நேசமணியின் இந்த கதையை உண்மையான சம்பவம் போல் பதிவிட்ட ஸ்கிரீன் ஷாட்கள் சமூக வலைத்தளத்தில், வைரலாக பரவி வந்தன. அதன் தாக்கம் தான் இன்று டுவிட்டரில், இந்திய அளவில் ’மோடி சர்கார்2’ என்ற ஹேஷ்டாகை பின்னுக்கு தள்ளி ’நேசமணி’ என்ற ஹேஷ்டாக் டிரெண்டாகி முதலிடம் பிடித்துள்ளது.