ஜிமெயிலில் வழங்கப்படும் அட்டாச்மெண்ட் வசதியில், மின்னஞ்சல்களை இணைக்கும் வசதியை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
உலகளவில் மின்னஞ்சல் சேவையை தரும் நிறுவனங்களில் கூகுளின் ஜிமெயில் முன்னணி வகிக்கின்றது. இதில் ஒரே நேரத்தில் பலருக்கு மின்னஞ்சல் அனுப்பும் வசதி ஏற்கனவே காணப்படுகின்றது. எனினும் தற்போது ஜிமெயில் சேவையில் புதிய வசதி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, பல மின்னஞ்சல்களை அட்டாச்மெண்ட் முறையில் அனுப்ப முடியும். இதனை இரண்டு முறைகளில் மேற்கொள்ள முடியும்.
முதலில் புதிய மின்னஞ்சல் ஒன்றை அனுப்புவதற்கு தயார் செய்து, இணைக்க வேண்டிய (Attach) மின்னஞ்சல்களை தேர்வு செய்து, அவற்றை Drag and Drop முறையில் அனுப்புவதற்கு தயார் செய்யப்பட்டுள்ள மின்னஞ்சலினுள் கொண்டுவர வேண்டும். அனைத்து மின்னஞ்சல்களும் அட்டாச்மெண்ட் முறையில் இணைக்கப்பட்ட உடன் Send பொத்தானை கிளிக் செய்து அனுப்ப முடியும். அதே போல், மற்றொரு முறையிலும் இதனை அனுப்ப முடியும். அதன்படி, Attachment முறையில் அனுப்பப்பட வேண்டிய மின்னஞ்சல்களை தேர்வு செய்து, பின்னர் மேல் மூலையிலுள்ள (மூன்று புள்ளிகள்) மெனுவினை கிளிக் செய்து Forward as Attachment என்பதை கிளிக் செய்தும் அனுப்ப முடியும்.