ஒவ்வொரு மாதமும் கணினி மற்றும் மொபைல் சார்ந்த தொழில்நுட்ப மாற்றங்கள் புதுமைகளைப் பற்றி இப்பகுதியில் வெளியிட்டு வருகிறோம். அந்த வகையில் சமீபத்தில் வந்துள்ள புதிய வசதிகளைப் பற்றிய அப்டேட் தகவல்களைப் பார்ப்போம்.
டிவிட்டர்
கீச்சொலிகளைப் பேரொலியாக்கிக் காட்டும் டிவிட்டர் ரசிகர்களுக்கு சமீபத்திய அப்டேட்டாக டெஸ்க்டாப் கணினிகளில் டிவிட்டர் தள வடிவமைப்பில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதுதான். தொழில்நுட்ப நிறுவனங்கள் தற்போது அறிமுகப்படுத்தி வரும் இருண்ட திரை (டார்க்மோட்) வசதியையும், லைட்ஸ் அவுட் என்ற வசதிaயையும் டிவிட்டரும் கொண்டு வந்துள்ளது. இது இரவு நேரங்களில் அதிக வெளிச்சத்தால் கண்கள் பாதிப்படையாமல் பாதுகாக்கும் வசதியாகப் பார்க்கப்படுகிறது. அத்துடன் மேலும் சில புதிய வசதிகளும் பயனருக்கு வழங்கப்பட்டுள்ளன.
பயனர் தனக்கு வரும் டுவிட்களில் முக்கியமானதை புக்மார்க் செய்துகொள்ளும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. டிரெண்டிங்கை எளிதாக அறிந்து கொள்ள எக்ஸ்புளோரர் உதவும். முகப்பு படத்தில் (கவர் போட்டோ) வண்ணங்களை மாற்றிக் கொள்ளும் வசதி, தேவையற்ற ரிப்ளையை பயனாளர்கள் லாக் செய்து கொள்ளும் வசதி, அதேபோல் ரிப்ளையைப் படிக்க விரும்புபவர்கள் அன்லாக் செய்து படிக்கும் வசதி ஆகியவையும் தரப்பட்டுள்ளன. இந்த வசதிகள் பயனர்கள் மற்றும் பின்தொடர்பவர்கள் என இருவருக்கும் சமமான வாய்ப்பை வழங்கும் என டிவிட்டர் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்த வசதிகள் சோதனை அடிப்படையில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இன்னும் சில நாட்களில் அதிகாரப்பூர்வமாக அனைவருக்கும் முழுமையாகக் கிடைக்கும் என்று தெரிகிறது.
வாட்ஸ்அப்
குயிக் எடிட் மீடியா என்ற புதிய வசதியை வழங்குகிறது வாட்ஸ்அப். இந்த வசதி எதற்காக என்றால், தற்போது நாம் எடுக்கும் படங்கள் வீடியோக்களை எடிட் செய்வதற்கு தனியாக ஆப்களை நிறுவிப் பயன்படுத்தி வருகிறோம். அதற்குப் பதிலாக வாட்ஸ்அப் மூலமாகவே இந்த வேலையையும் செய்து கொள்ளலாம் என்பதுதான். வாட்ஸ்அப் பீட்டா பதிப்பில் அறிமுகமாகியுள்ள இந்த வசதி அனைவருக்கும் விரைவில் கிடைக்கக்கூடும் என்று தெரிகிறது.
அடுத்ததாக, மற்றொருவரது செய்தியை பகிரும்போது அது ஃபார்வார்ட் என்று காட்டும் வசதி சமீபத்தில் அறிமுகப்படுத்துப்பட்டது. தற்போது அதில் கூடுதலாக எத்தனை பேருக்கு ஃபார்வார்ட் செய்யப்பட்டது என்பதைக் காட்டும் வகையிலான Forward info என்ற வசதியும் அறிமுகமாக உள்ளது. வாட்ஸ்ஆப்பில் புதிய காண்டாக்ட்டுகளை உருவாக்கிக் கொள்ள QR code பயன்படுத்தும் வசதி வரவுள்ளது. இது இன்ஸ்டாகிராம் செயலியில் நேம் டேக்ஸ் (Name Tags) வசதி போலவே செயல்படும் எனத் தெரிகிறது.
வாய்ஸ் மெசேஜ் பதிவு செய்ததும் உடனே அனுப்பிவிட்டு பிறகு கேட்கக் கூடிய நிலை தற்போது உள்ளது. அடுத்து வரும் அப்டேட்டில் அனுப்புவதற்கு முன் அதனை ஒரு முறை கேட்டுவிட்டு சரியாக இருந்தால் பகிரலாம் அல்லது நீக்கிவிட்டு மீண்டும் பேசி அனுப்பலாம் என்ற புதிய வசதி ஆப்பிள் ஐஓஎஸ் போன்களில் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. விரைவில் இந்த வசதியும் அனைவருக்கும் கிடைக்கக்கூடும்.
தொகுப்பு : என்.ராஜேந்திரன்