ஏடிஎம்மில் பணம் எடுக்கும்போது, பணம் வராமலேயே வங்கிக் கணக்கில் பணம் கழிக்கப்பட்டதாக, கடந்த நிதியாண்டில் மட்டும் 16,000 புகார்கள் பதிவாகியுள்ளதாக, ஏடிஎம்கள் பற்றிய ரிசர்வ் வங்கியின் அறிக்கை தெரிவித்துள்ளது. வங்கிகள் பற்றிய புகார்களில் இவையே முதலிடத்தில் இருப்பதாகவும், கடந்த ஆண்டில் பதிவான மொத்த புகார்களில் இவை மட்டுமே 10 சதவீதம் அளவுக்கு இருந்ததாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. இத்தகைய புகார்கள் முந்தைய ஆண்டைவிட 50 சதவீதம் அதிகரித்திருக்கின்றன.பெரும்பாலான இத்தகைய பரிவர்த்தனைகள் ஒரு நாளுக்குள் சரி செய்யப்பட்டுவிடுவதாக வங்கிகள் கூறுகின்றன. அதன்பின்னும் இவ்வளவு புகார்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது.பணமதிப்பு நீக்க நடவடிக்கை அனைவரையும் வங்கியையும், ஏடிஎம்மையும் நோக்கி விரட்டிய நிலையில், ஏடிஎம்களின் எண்ணிக்கை அதிகப்படுத்தப் பட்டதே இதற்குக் காரணம் என்று வங்கிகள் தெரிவித்துள்ளன. ஆனால், மின்சாரம், இணைய இணைப்பு ஆகியவை தொடர்ச்சியாகக் கிடைக்காமல் அடிக்கடி துண்டிக்கப்படுவதுதான் காரணம் என்று ஏடிஎம் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது, டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு இந்தியா தயாராகவில்லை என்பதையே இவை உணர்த்துகின்றன.புகார் செய்வதற்கான தொலைபேசி எண், ஏடிஎம் மையத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், இந்தப் புகார்கள் ஏழு நாட்களுக்குள் தீர்க்கப்படவேண்டும் என்றும் ரிசர்வ் வங்கியின் விதிகள் கூறுகின்றன. அவ்வாறு தீர்க்கப்படாதவற்றை, ஆம்புட்ஸ்மேன் என்னும் மேல்முறையீட்டு அலுவலரிடம் புகார் செய்து தீர்வு பெறலாம்.
எகனாமிக் டைம்ஸ்