internet

திருப்பூர் பின்னலாடை வர்த்தகத்தின் நிலை

திருப்பூர் ஏற்றுமதி பின்னலாடை நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதியில் ஏறத்தாழ 28 சதவீதம் மற்றும் நாட்டின் மொத்த பின்னலாடை ஏற்றுமதியில் 48 சதவீதம் என்றளவில் பங்களிப்பை கொண்டுள்ளது. இங்கிருந்து நமது பாரம்பரிய சந்தையான ஐரோப்பாவிற்கு 60 % என்றளவிலும் மற்றபடி அமெரிக்கா, ஐக்கிய அரபு நாடுகள், ஜப்பான், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி மேற்கொள்ளப்படுகிறது

தொடர்ந்து ஏற்றுமதி வர்த்தகம் 7 -8 ஆண்டுகளாக சிறுக சிறுக சரிவை சந்தித்து வருகிறது அதற்கான காரணங்கள் பல ,சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கத்தில் ஏற்பட்ட சலுகை குறைப்பு, அமலாக்கத்தின் குளறுபடிகள் ஒரு குறிப்பிடத்தக்க சரிவை ஏற்படுத்தியதை மறுக்கவியலாது. ஐரோப்பிய மற்றும் அமெரிக்க சந்தைகளுக்கான ஏற்றுமதியில் 7 -8 % வரை சரிவு ஏற்பட்டுள்ளது அரபு நாடுகளுக்கான ஏற்றுமதியில் 15 % வரை சரிவு ஏற்பட்டுள்ளது. பொத்தாம்பொதுவாக சரிவு என்பதை விட அதற்கான காரணத்தை பார்ப்போம்.

உலகளாவிய அளவில் நமக்கு நேரடியான போட்டி என்பது அண்டை நாடுகளான வங்கதேசம், ஸ்ரீலங்கா, பாகிஸ்தான், கம்போடியா, தாய்லாந்து ,வியட்நாம், இந்தோனேஷியா மற்றும் மியான்மார். இதில் அதிகப்படியான போட்டியை கொடுப்பது வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் ஸ்ரீலங்கா, இந்த நாடுகள் நமது பாரம்பரிய சந்தையான ஐரோப்பாவுடன் வரி இல்லா வர்த்தக ஒப்பந்தத்தை செய்துள்ளன இதனால் அந்த நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஆயத்த ஆடைகளுக்கு வரி இல்லை , இந்தியாவிலிருந்து செல்லும் ஆடைகளுக்கு சராசரியாக 10 % வரி விதிக்கப்படுகிறது. இதனால் எந்த ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை இங்குள்ள ஏற்றுமதியாளர்கள் பெறவேண்டுமெனில் அண்டை நாடுகளை காட்டிலும் குறைந்தது 10 % விலை குறைவாக கொடுக்கவேண்டும். தொடர்ந்து ஏறிய மூலப்பொருட்களின் விலை, ஊதிய உயர்வு, உற்பத்தி செலவீனங்கள், எரிபொருள் மற்றும் மின்சார கட்டண உயர்வு , உள்ளிட்டவை கிடைத்துக்கொண்டிருந்த லாபத்தின் பெரும்பகுதியை காணாமல் செய்த நிலையில் பெரும்பாலான நிறுவனங்கள் அரசு அளித்த டூட்டி ட்ராவ்பக் எனப்படும் சலுகையை கொண்டே இயங்கி வந்தது.

இந்த நிலையில் சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கம் சலுகை குறைப்பை ஏற்படுத்தியது அதோடு மட்டுமல்லாமல் கட்டிய வரிகளை திரும்ப பெறுவதற்கான சரியான வழிமுறைகளை வடிவைமைக்க தவறி, ஜாப் ஒர்க் பணிகளுக்கான வரி மற்றும் போக்குவரத்துக்கு ஆவணங்கள் குறித்த குளறுபடிகள் நாளொரு வண்ணம் பொழுதொரு மேனியும் ஏரளமான சிக்கல்களை உண்டாக்கியது, ஒரு கட்டடத்தில் நிறுவனங்களின் முதலீட்டில் பெரும் பகுதி வரியாக அரசிடம் செலுத்தப்பட்டு அதை திரும்ப பெறுவதில் மாதக்கணக்கில் தாமதம் ஏற்பட்டது.

ஏற்றுமதியை பொறுத்த வரை குறித்த காலத்தில் ஆடைகளை அனுப்ப இயலாவிட்டால் அதன் ஏற்றுமதி மதிப்பில் கிட்டத்தட்ட 50 -60 % விமான கட்டணம் அல்லது தள்ளுபடி அல்லது ஆர்டர்கள் மறுக்கப்பட்டு ஏற்றுமதி நிறுவனம் இழக்கும். இந்த இழப்பானது தொடர் சங்கிலி போல் அடுத்தடுத்த ஆர்டர்கள் தயாராவதில் சிக்கலை உண்டாக்கி ஒரு கட்டத்தில் நிறுவனம் கடும் நஷ்டத்தில் மூடவேண்டிய சூழலுக்கு தள்ளப்படும். ஓரளவு பெரும் நிறுவனங்கள் சமாளித்துவிட்டன சிறு, குறு நிறுவனங்கள் பெருமளவு எழ இயலாத நிலையை அடைந்தது. இந்த நிலையில் பல தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் வராக்கடன்கள் அதிகரிப்பு காரணமாக கடும் நஷடத்தை சந்தித்ததால் PCA என்ற நிலைக்கு தள்ளப்பட்டு புதிய கடன்களை வழங்க முடியாத நிலையை எட்டியது, அதுமட்டுமல்ல ரிசர்வ் வங்கி டெக்ஸ்டைல் துறையை ஸ்ட்ரெஸ்ஸெட் செக்டர் அதாவது அழுத்தத்தில் உள்ள தொழில் என்ற வகையில் சேர்த்து அனைத்து வங்கிகளும் உதவி செய்ய இயலாத ஒரு நிலையை ஏற்படுத்தியது. ஆக மொத்தத்தில் அனைத்து திசைகளிலுருந்தும் கடும் நெருக்கடியை இந்த தொழில் சந்தித்தது.

ஒரு நிறுவனத்தின் தலைவர் தனது தினத்தை அன்றாடம் உற்பத்தியில் உள்ள ஆர்டர்கள், அடுத்த மாதத்திற்கான திட்டமிடல், தொழில் மேம்பாடு , புதிய வாடிக்கையாளர்களை தேடுவது உள்ளிட்ட பணிகளை பார்த்தால் தொழில் வளரும், அதை விடுத்து ஒரு கட்டத்தில் ஏறத்தாழ பெரும் நிறுவனங்களும் சரி சிறு நிறுவனங்களும் சரி அன்றடம் நிதி பற்றாக்குறையை சமாளிக்கவும், தேவையான நிதியை கடனாக பெரும் முயற்சிலும், சலுகை குறைப்பின் காரணமாக லாபம் இல்லாத நிலை ஏற்பட்டு அடுத்தடுத்த ஆர்டர்களை பெறமுடியாமல் தவிப்பதிலுமே ஏரளமான மாதங்களை கடந்தார்கள்.

அடுத்த பிரச்னை பின்னலாடை உற்பத்தி என்பது பல்வேறு நிலைகளை கொண்டது, ஒரு ஆடை உற்பத்தி செய்ய குறைந்தது 7 சார்பு நிறுவனங்களின் பங்களிப்பு தேவை, 80 % திருப்பூர் நிறுவனங்கள் இந்த முறையில்தான் இயங்குகிறது இந்த கூட்டுமுயற்சியின் காரணமாக தான் திருப்பூர் எல்லா தரப்பு மக்களாலும் தொழிலில் ஈடுபட்டு முன்னேற முடிந்தது. இங்குதான் குறைந்தது 2 லட்சம் முதலீட்டில் தொழில் துவங்கி வளரலாம் , இங்கு வளர்ந்து நிற்கும் ஒவ்வொரு நிறுவனத்தின் வரலாறுகள் இந்த உண்மையை சொல்லும். ஏற்றுமதியாளர்களுக்கு சிக்கல் ஏற்படாத வரை அனைத்தும் நலமே , சங்கிலி தொடரில் எந்தவொரு இடையூறும் இன்றி தொழில் பயணிக்கும் , ஏற்றுமதியில் பாதிப்பு ஏற்படும்பொழுது இந்த சங்கிலி தொடரின் கன்னிகள் அறுபட துவங்கும் இந்த வகையில்தான் பல்வேறு சிறு மற்றும் குறு நிறுவனங்கள் மூடப்பட்டு வேலை இழப்பு மற்றும் வங்கிகளில் வாங்கப்பட்ட கடன்கள் அடைபடாமல் வராகடனாக மாறத்துவங்கியது. 2019 செப்டம்பர் மாத காலாண்டின் இறுதியில் திருப்பூர் வங்கிகளின் வராக்கடன் 1000 கோடி ருபாய் என அறியப்பட்டது, முடிந்த 2019 மார்ச் முழுஆண்டு முடிவில் நிச்சயம் அதை காட்டிலும் அதிகமாகவே இருக்கும்.

கடந்த சில நாட்களாக வாட்ஸாப்களிலும் , முகநூலிலும் திருப்பூர் பின்னலாடை வர்த்தகத்தில் எந்தவித சரிவு இல்லை, அது கட்டமைக்கப்பட்ட கதை என்றொரு உள்ளபடியே கட்டமைக்கப்பட்ட பதிவொன்றை கண்டேன். பணமதிப்பிழப்பு மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கம் உள்ளிட்ட காரணங்களால் நாடு முழுவதும் பல்வேறு சிறு, குறு, நடுத்தர தொழில்கள் சரிவை சந்தித்தது. அதில் ஆயத்த ஆடை துறையும் ஒன்று. இது குறித்து கடந்த 2 ஆண்டுகளில் பல்வேறு கட்டுரைகளை இங்கே பதிவு செய்துள்ளேன். திருப்பூர் ஏற்றுமதி பின்னலாடை பாதிப்புகளை பற்றிய விவரங்களை அதில் காணலாம்,

அந்த கட்டுரையில் குறிப்பிட்டது போல் அரபு நாடுகளுக்கான ஏற்றுமதியில் டூட்டி ட்ராவ்பக் சலுகையை தவறாக பயன்படுத்தி குறைந்த விலை ஆடைகளுக்கு அதிகளவு மதிப்பிட்டு சலுகைகள் பெறப்பட்டு அயல்நாட்டு பணம் இந்தியாவிற்குள் முறையாக கொண்டுவரப்பட்டது என்ற விபரங்களை கண்டேன். நூறு சதவீதம் அந்த கருத்தில் உடன்படுகிறேன், ஏரளமான வழக்குகள் பதியப்பட்டு மத்திய அரசின் விசாரணைகள், கைது என்றளவில் சென்றதும் உண்மை, அதே சமயம் முற்றிலும் அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட அனைத்தும் அந்த வகை என கூற இயலாது ஏனெனில் அரபு நாட்டு வர்த்தகத்தை பற்றி சிறிது விரிவாக காணலாம். சோவியத் யூனியன் சிதறுண்ட பிறகு சிதறிய நாடுகள் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லாத காரணத்தால் அரபு நாடுகளின் வாயிலாக தான் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்துவருகிறது, கடந்த சில வருடங்களாக ரஷ்யா நாட்டுடன் நேரடியாக ஏற்றுமதி வாய்ப்புகளை பெற்றுள்ளோம், அதே போல் ஆப்ரிக்க கண்டத்தின் பல நாடுகள் அரபு நாடுகளை நுழைவாயிலாக கொண்டுதான் இயங்குகிறது, எனவே அரபு நாடுகளின் வாயிலாக நான் இந்த பத்தியில் குறிப்பிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் செய்தியை அறிவீர்களாக. மற்றபடி அரசை ஏமாற்றி செய்ப்பட்ட வர்த்தகம் தடுக்கப்பட்டது என்பது பாராட்டப்படவேண்டிய அம்சமே. இங்கே இன்னொன்றையும் குறிப்பிடவேண்டும் ஏற்றுமதி செய்யப்படும் ஒவ்வொரு பொருளையும் சுங்கத்துறையின் பரிசோதனைக்கு உட்படுத்துவார்கள், அங்கே விற்பனை பில்லில் குறிப்பிட்ட தொகைக்கு அந்த பொருள் உரிய மதிப்புடையது என்ற சோதனையும் பிரதானம் ஆக ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழைய இயலாது என்பதை வசதியாக கடந்துவிட வேண்டாம் .

ஐரோப்பிய மற்றும் அமெரிக்க வர்த்தகத்தில் மாற்றம் இல்லை என்ற வாதத்தை என்னவென்று சொல்வது, ஏற்றுமதி என்பது அந்நிய கரன்ஸியில் நடப்பது ஆக வளர்ச்சியோ, வீழ்ச்சியோ அந்த அளவீட்டில் தான் பார்க்கவேண்டும் அந்த வகையில் கடந்த 5 வருட அந்நிய கரன்சி மதிப்பை கொண்டு ஏற்றுமதி தரவுகளை நோக்கினால் சரிவு என்னவென்பதை காணலாம்.

அதெல்லாம் கிடையாது இதெல்லாம் உண்மையில்லை என்றால், தற்போதய திருப்பூர் தொகுதி நாடளுமன்ற உறுப்பினர் திருமதி.சத்தியபாமா அவர்கள் நாடாளுமன்றத்தில் இந்த சரிவை குறித்து பதிவு செய்துள்ளார்கள், மாண்புமிகு நிதி அமைச்சர் திரு.அருண் ஜெட்லீயை சந்தித்து மனுக்களை அளித்துள்ளார்கள். மாண்புமிகு தமிழக முதல்வர் ஒருமுறை அல்ல மூன்று முறை மத்திய அரசின் தொடர்ப்புடைய துறைகளுக்கும், பாரத பிரதமருக்கும் கடிதம் எழுதியுள்ளார்கள். கடந்த இரண்டரை வருட நாளிதழ்கள் அனைத்திலும் அன்றாடம் செய்திகள் வந்துள்ளன.

சரி எல்லாமே கட்டமைக்கப்பட்ட கதைகள் என வைத்துக்கொண்டால் ஏன்

1 .சிறு குறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் அவற்றை மறுசீரமைக்க பெரும் தொகையை மத்திய நிதி அமைச்சகம் ஒதுக்கியுள்ளது, பாதிப்பில்லாத நிலையில் ஏன் இந்த ஒதுக்கீடு

2 .தேர்தல் அறிவிப்பிற்கு சில நாட்களுக்கு முன்னர் ஏன் 6000 கோடி ரூபாய் அளவில் சலுகைகள் அளிக்கப்பட்டது , ஆரோக்கியமான குழந்தைக்கு ஏன் மேலும் ஊட்டச்சத்தை ஊட்டினார்கள்?.

வளரும் நாட்டிற்கு வரி சீர்திருத்தங்கள் மிகவும் அவசியம் அதில் எள்ளளவும் மாற்றுக்கருத்தில்லை, தொழில் முனைவோர்கள் அதற்கான சிரமங்களை ஏற்பதற்கு தயாராகவே இருந்தனர் ஏனெனில் கட்டப்படும் வரிகள் ஏற்றுமதி செய்யப்பட்ட 9 நாட்களில் திரும்ப வங்கி கணக்கில் வந்து சேரும் என்ற உறுதி கொடுக்கப்பட்டு இன்றளவில் நடைமுறைப்படுத்தவில்லை ஏரளமான நிறுவனங்கள் கட்டிய வரிகளை திரும்ப பெற இன்னும் தத்தளிக்கின்றனர் எனபதே நிதர்சனம்.

எளிதான செயல்பாடுகளினால் இந்த நிலை ஏற்படாமல் தவிர்த்திருக்கலாம், கடந்த மாதம் அறிவித்த சலுகைகளை சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கத்தின் பொழுது கொடுத்து அடுத்த 2 வருடங்களுக்குள் இந்த சலுகையும் பறிபோகும் அதற்கு ஏற்றாற்போல் வர்த்தக நிலைப்பாடுகளை மாற்றி கொள்ள அறிவுறுத்தி அரசு எந்த முறையில் உங்களுக்கு உதவினால் தடை இல்லாமல் சீரான வளர்ச்சியோடு தொழிலை முன்னெடுக்க இயலும் என்று விவாதித்திருக்கலாம்.

காலம் கடந்த செயல்பாடுகள், பேசி பயனில்லை ஏனெனில் அரசிற்கு நாடு முழுவதும் உள்ள பிரச்சனைகளில் இதுவும் ஒன்று ஆனால் இங்கு ஒவ்வொரு தொழில் முனைவோர் மற்றும் தொழிலாளர்களின் எதிர்காலம் மற்றும் கனவு கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளதே நிதர்சனம்

இழந்தவை இழந்தவையாக இருக்கட்டும் இனி நடப்பது நன்மை பயக்கட்டும் என்ற பிராத்தனையும், முயற்சியும், மனஉறுதியும், தன்னம்பிக்கையும் அடுத்த கட்டத்திற்கு நம்மை முன்னேற்றம் அடைய செய்யட்டும்.

-Kumar Duraiswamy