internet

img

பொதுத்துறைகளை காவு கொடுத்து கார்ப்பரேட்டுகளுக்கு கதவைத் திறக்கிறார் மோடி

புதுதில்லி, செப்.24- இந்தியாவில் 5-ஜி சேவை வருகிற அக்டோபர் 1-ஆம் தேதி புதுதில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் நடைபெறும் இந்திய மொபைல் மாநாட்டில் தொடங்கி வைக்கப்பட உள்ளது. 5-ஜி சேவையை பிரதமர் மோடி தொடங்கிவைப்பார் என தேசிய பிராட்பேண்ட் ஆணையம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள ட்வீட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.  கடந்த சில நாட்களுக்கு முன்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், அக்டோபர் மாதத்திற்குள் 5-ஜி சேவைகளை வழங்க இந்தியா தயாராகி வருவதாகக் கூறியிருந்தார்.  பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ, அதானி டேட்டா நெட்வொர்க் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்களிடமிருந்து  5-ஜி அலைக்கற்றை ஏலம் மூலம் சுமார் ரூ.17,876 கோடி வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. இதில் முகேஷ் அம்பானியின் ஜியோ, ரூ.87,946.93 கோடி பெறுமானமுள்ள அலைக்கற்றை வரிசைகளை பெற்றுள்ளது. ஆனால் பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் போன்ற பொதுத்துறை நிறுவனங்களை மோடி கை கழுவிவிட்டார்.  பொதுத்துறை நிறுவனங்களை ஒழித்துக்கட்டுவதில் மும்முரமாய் இருக்கிறது ஒன்றிய அரசு.  மோடியின் நடவடிக்கை குறித்து பிஎஸ்என்எல் ஊழியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், எம்டிஎன்எல், பிஎஸ்என்எல் நிறுவனங்கள் சந்தாதாரர்களை இழப்பதற்கு ஊழியர்கள் காரணமல்ல. மோடி தலைமையிலான ஒன்றிய அரசு தான். இதுவரை பொதுத்துறை நிறுவனங்களுக்கு 4-ஜி, 5-ஜி சேவைகளை வழங்கவில்லை. 4-ஜி-க்கான அலைக்கற்றை மட்டும் ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால் அதற்கான கருவிகள் வாங்கப்படவில்லை.

இந்தியா முழுவதும் 49,300- 3-ஜி டவர்கள் உள்ளன. இதற்கு ஓரளவு செலவு செய்தால் அவற்றை 4-ஜி டவராக மாற்ற முடியும். இவற்றில் சுமார் 30 ஆயிரம் டவர்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. சீனாவிலிருந்து கருவிகளை வாங்கக் கூடாது என மோடி அரசு முடிவு செய்துவிட்டது. எஞ்சியுள்ள 19 ஆயிரம் டவர்கள் நோக்கியோ நிறுவனத்திற்கு சொந்தமானது. இந்த டவர்களையாவது மாற்றுங்கள் என்றால் அதற்கும் ஒன்றிய அரசு தயாராக இல்லை. குறிப்பாக இந்த 19 ஆயிரம் கோபுரங்கள் தமிழ்நாடு, ஆந்திரம், கேரளம், கர்நாடகம், பஞ்சாப், இராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ளன. பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் வருமானத்தில் சுமார் 65 சதவீதத்தை மேற்கு, தெற்கு மண்டலங்கள் தான் அளித்துவருகின்றன.  19 ஆயிரம் டவர்களை மாற்றுவதற்கு வெளிநாட்டுக் கருவிகளை வாங்கக்கூடாது. உள்நாட்டுக் கருவிகளைத்தான் வாங்கவேண்டுமென கூறிவிட்டார் மோடி. ஆனால் 3-ஜி, -4-ஜி,-5-ஜி சேவைக்கான கருவிகள் எதுவும் உள்நாட்டில் தயாரிக்கப்படுவதில்லை. கடைசியாக டிசிஎஸ் நிறுவனம் தயாரிப்பதாகக் கூறியது. ஆனால் இதுவரை எந்தக் கருவியும் கிடைக்கவில்லை என்றார்.

;