india

img

விவசாயிகள் மீது மீண்டும் பாஜக எம்பி கார் மோதிய சம்பவத்தால் அதிர்ச்சி; விவசாயிகளை குறிவைத்து பாஜகவினர் தாக்குதல்!

உத்தர பிரதேசத்தைத் தொடர்ந்து ஹரியானாவிலும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது பா.ஜ.க எம்.பியின் கார் மோதியதில் விவசாயிகள் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விவசாயிகளுக்கு விரோதமான வேளாண் சட்டங்களை கண்டித்து கடந்த ஒரு வருடமாக விவசாயிகள் தலைநகர் தில்லியிலும், பல்வேறு மாநிலங்களிலும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அப்போது, அவ்வழியே காரில் வந்த ஒன்றிய பாஜக அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா விவசாயிகள் மீது காரை ஏற்றியதில் 2 பேர் கொல்லப்பட்டனர். பின்னர் மாநில பாஜக அரசின் காவல்துறையினர் விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 4 விவசாயிகள், ஒரு பத்திரிகையாளர் உட்பட 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். விவசாயிகள் கொல்லப்பட்ட வீடியோ சமூக வலைத் தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

இக்கொடூரச்சம்பவத்தை நிகழ்த்திய முதல்வர் யோகி தலைமையிலான பாஜக  அரசை ராஜினாமா செய்யக்கோரியும், விவசாயிகளைக் கொன்ற ஒன்றிய அமைச்சரின் மகனை கைது செய்யக் கோரியும் நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது.

இந்நிலையில், ஹரியானா மாநிலம் அம்பாலா மாவட்டம் நாராயண்கர் பகுதியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி கொண்டிருக்கும் விவசாயிகள் மீது பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் நயாப் சைனியின் கார் மோதியுள்ளது. 
இச்சம்பவத்தில் விவசாயி ஒருவர் பலத்த காயத்துடன் அம்பாலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே, லக்கிம்பூரில் விவசாயிகள் பேரணியில் ஒன்றிய இணையமைச்சரின் மகன் ஓட்டி வந்த கார் புகுந்து, விவசாயிகள் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், மேலும் ஒரு பாஜக எம்.பியின் கார் விவசாயிகள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது போராடும் விவசாயிகளை குறிவைத்து பாஜகவினர் நடத்தும் திட்டம் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டிவருகின்றனர்.

;