இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், முத்ரா திட்டத்தின் கீழ் மொத்தம் 43 கோடி முறை கடன் கொடுத்துள்ள தாகவும் இதில் 30 கோடி முறை பெண்களுக்கு கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் மக்கள் தொகை பிப்ரவரி 2, மாலை 4.34 மணிக்கு 144,53,49,940. இதில் வயதுவாரி கணக்கெடுப்பின்படி 15 வயது முதல் 64 வயது வரை உள்ளவர்களின் விகிதம் 64.9 சதவிகிதம். அதாவது, முத்ரா கடன் பெறுவதற்கு வாய்ப்புள்ள இந்தியர்களின் எண்ணிக்கை 93,80,32,111. இந்த எண்ணிக்கையை 43 கோடியால் வகுத்தால் 2.18 அதாவது ஒவ்வொரு 2 இந்தியர்களில் ஒருவருக்கு முத்ரா கடன் கிடைத்திருக்க வேண்டும். ஒருவேளை, ஒரே நபர் சராசரியாக இரண்டு முறை கடன் வாங்கியிருப்பார் என்று வைத்துக் கொண்டால் ஒவ்வொரு 4 இந்தியரில் ஒருவர் முத்ரா கடன் பெற்றிருக்க வேண்டும். ஒருவேளை, முத்ரா லோன் எடுத்த ஒவ்வொருவரும் நான்குமுறை எடுத்தவராக இருந்தால் 8 இந்தியரில் ஒருவர் முத்ரா லோன் பெற்றவராக இருக்க வேண்டும்.
இதை இன்னொரு விதமாகவும் யோசிக்கலாம்.\இந்திய மக்கள் தொகை 144,53,49,940. இந்தியாவில் சராசரி குடும்ப உறுப்பினர் எண்ணிக்கை 4.44. இதனடிப்படையில் இந்திய குடும்பங்களின் எண்ணிக்கை 32.55 கோடி. அதாவது அதானி, அம்பானி, டாட்டா, பிர்லா உள்ளிட்ட பெருமுதலாளிகள் குடும்பங்கள் உட்பட எல்லோரையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் இந்த 32.55 கோடி வீடுகள். இந்த வீடுகளில் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு முறை முத்ரா லோன் பெற்றிருந்தால் 32.55 கோடி முத்ரா லோன்கள் பெற்றிருக்க வேண்டும். ஆனால், நிதியமைச்சர் முத்ரா லோன் பெறுவோர் எண்ணிக்கை 43 கோடி என்கிறார். அதாவது, ஒவ்வொரு குடும்பமும் 1.32 முறை முத்ரா லோன் பெற்றிருக்க வேண்டும் என்று கூறுவதாக பொருள். ஒருவேளை, முத்ரா லோன் எடுத்த அனைவரும் இரண்டு முறை எடுத்திருந்தால் இந்தியாவில் உள்ள வீடுகளில் 66.05 சதவிகித வீடுகளில் முத்ரா லோன் பயனாளிகள் இருக்க வேண்டும். அதாவது, 3ல் 2 வீடுகளில் முத்ரா லோன் பயனாளிகள் இருக்க வேண்டும். இல்லை, இன்னும் கூடுதலாக ஒரே நபர் கூடுதல் முறைகளில் லோன் வாங்கியிருக்க முடியும் என்று வைத்துக் கொண்டு லோன் வாங்கிய அத்தனை பேரும் 4 முறை லோன் வாங்கியதாக கொண்டால் 3ல் ஒரு வீட்டில் முத்ரா லோன் பயனாளி இருக்க வேண்டும்.
நாம் வசிக்கிற பகுதிகளில் அல்லது ஊர்களில் இது உண்மையா என்று பார்த்தால் அப்படியில்லை என்பதை சங்பரிவார் ஆட்களே கூட ஒப்புக்கொள்வார்கள்.
அப்படியானால் இரண்டு வாய்ப்புகள் தான் இதில் உண்டு.
1 நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொய் சொல்கிறார் என்று பொருள். அல்லது
2 ஒரே தொலைபேசி எண்ணை அடிப்படையாகக் கொண்டு 7.5 லட்சம் ஆயுஷ்மான் பாரத் பயனாளிகளுக்கு பணம் அனுப்பி முறைகேடு நடந்ததாக சிஏஜி அறிக்கை சொன்னது போல, முத்ரா லோன் திட்டத்திலும் ஊழல் நடைபெற்றிருக்க வேண்டும்.
இந்த இரண்டில் எது உண்மை என்பதை நிதியமைச்சர் தான் விளக்க வேண்டும்.
இது ஒருபுறமிருக்க இந்த லோன்களில் பலவும் முறையற்றவர்களுக்கு கொடுக்கப்பட்ட தாகவும், வராக்கடன் என்று கணக்கிடப்படாமல் இருப்பதற்காக அவ்வப்போது சம்பந்தப்பட்ட வங்கிகளே முத்ரா கடன் அக்கவுண்டில் ஒரே நேரத்தில் ஒரு சிறிய தொகையை வரவு வைத்து பின்னர் அதிலிருந்து அதே தொகையை கழித்து விடுவதாகவும் சொல்கிறார்கள். அதன் உண்மைத் தன்மையை அறிய வேண்டியுள்ளது. ஆனால், அப்படியெல்லாம் இவர்கள் செய்ய மாட்டார்கள் என்று நம்புவதற்கு எந்த காரணமும் இல்லை.