india

img

2016-2020 காலகட்டங்களில் 14,295 பேர் மின்னல் பாய்ந்து உயிரிழப்பு - ஒன்றிய அரசு தகவல்  

2016-2020 ஆண்டுகளில் மொத்தம் 14,295 பேர் மின்னல் பாய்ந்து உயிரிழந்துள்ளதாக ஒன்றிய அரசு மக்களவையில் தெரிவித்துள்ளது.  

இதுகுறித்து மக்களவையில் ஒன்றிய அரசு வெளியிட்ட தரவின்படி, கடந்த 5 ஆண்டுகளில் 14,295 பேர் மின்னல் பாய்ந்து உயிரிழந்துள்ளனர். 2016ல் 3,315 பேரும், 2017ல் 2,885 பேரும், 2018ல் 2,357 பேரும், 2019ல் 2,876 பேரும், 2020ல் 2,862 பேரும் உயிரிழந்துள்ளனர்.  

அதனைதொடர்ந்து 2020ல் பீகார் மாநிலத்தில் 436 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 429 பேரும், ஜார்க்கண்டில் 336 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 304 பேரும், ஒடிசாவில் 275 பேரும், சத்தீஸ்கரில் 246 பேரும் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளது.  

உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்தபோதிலும், அது உண்டாக்கிய சேதத்தைக் கருத்தில் கொண்டு இதனை இன்னும் தேசியப் பேரிடராக ஒன்றிய அரசு அறிவிக்காததற்கான காரணத்தை கனிமொழி கேள்வியாக எழுப்பினார்.  

இதற்கு பதிலளித்த ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங், தேசிய பேரிடர் மற்றும் மாநில பேரிடர் மீட்பு நிதியை குறிப்பிடப்பட்டுள்ள 12 பேரிடர்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும். ஏற்கெனவே உள்ள பேரிடர் பட்டியலில் புதிதாக பேரிடர்களை இணைப்பது குறித்து 15ஆவது நிதி ஆணையம் பரிந்துரைத்தது. தேசிய மற்றும் மாநில பேரிடர் நிதி, மாநிலங்களின் தேவையைப் பெருமளவில் பூர்த்தி செய்வதால், புதிதாக பேரிடர்களை பட்டியலில் இணைப்பதற்கானப் போதிய காரணங்கள் ஏதும் இல்லை என ஆணையம் குறிப்பிட்டுள்ளது.  

மேலும் மாநில அளவில் பேரிடர் எனக் கருதப்படும் ஒன்றிய அரசின் பட்டியலில் இடம்பெறாத சில பேரிடர்களுக்கு மாநில பேரிடர் மீட்பு நிதியின் ஆண்டு ஒதுக்கீட்டில் 10 சதவிகிதம் வரையிலான நிதியை விதிகளுக்குட்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணமாக மாநில அரசு வழங்கலாம் என்று தெரிவித்தார். 

;