சமையல் பொருட்கள், டிவி உள்ளிட்ட 143 பொருட்களின் மீதான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்திலிருந்து 28 சதவீதம் உயர்த்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
18 சதவீத ஜிஎஸ்டி விகிதாச்சாரத்தில் உள்ள 92 சதவீத பொருட்களை 28 சதவீத விகிதாச்சாரத்துக்கு மாற்றுவதற்கு ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைத்துள்ளது. இதனால் சில அத்தியாவசிய பொருட்கள் முதல் பல்வேறு சரக்குகள் மீதான ஜிஎஸ்டி உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் 2017,2018 ஆகிய ஆண்டுகளில் வரிக் குறைப்பு செய்யப்பட்ட பொருட்களுக்கு தற்போது வரியை உயர்த்த அரசு திட்டமிட்டு வருகிறது.
அந்தவகையில் அப்பளம், வெல்லம், பவர் பேங்க்கள், கைக்கடிகாரங்கள், சூட்கேஸ்கள், வாசனைத் திரவியங்கள், கலர் டிவி செட்கள், சாக்லேட்டுகள், கண்ணாடிகள், லெதர் ஆடைகள் உள்ளிட்ட 143 பொருட்கள் மீதான ஜிஎஸ்டியை 18 சதவீதத்திலிருந்து 28 சதவீதமாக அதிகரிக்க மாநில அரசுகளிடம் ஒன்றிய அரசு கருத்து கேட்கப்பட்டுள்ளது.
இவை தவிர உலர் பழங்களான வால் நட் மீதான ஜிஎஸ்டி வரி 12 சதவீதம் வரை உயர்த்தப்படலாம். மேலும், ஐஸ் கிரீம் தயாரிக்க பயன்படும் கஸ்டர்ட் பவுடரின் ஜிஎஸ்டி வரி 5 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக அதிகரிக்கப்படவுள்ளது. மேலும் சமையல் பொருட்களின் ஜிஎஸ்டி வரியும் 12 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக உயர்த்தப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.