india

img

வெளிநாடு வாழ் இந்தியர் அஞ்சல் மூலம் வாக்களிக்கும் பிரச்சனை.... அனைத்துக் கட்சிக் கூட்டத்தை உடனடியாக கூட்டுக.... தலைமைத் தேர்தல் ஆணையருக்கு சீத்தாராம் யெச்சூரி வேண்டுகோள்...

புதுதில்லி:
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை கொடுப்பது சம்பந்தமாக ஏற்பட்டுள்ள சிக்கலான பிரச்சனைகள் தொடர்பாக விவாதித்து, தீர்வு காண்பதற்கு ஏற்றவிதத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தைகூட்ட வேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோராவிற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரிவேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

அசாம், மேற்கு வங்கம், கேரளம் ஆகிய மாநிலங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் விரைவில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் வாக்களிப்பதற்கு வசதி செய்து தரும் விதத்தில் ஒரு சட்ட வடிவத்தைத் தேர்தல்ஆணையம் ஏற்படுத்தியிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருப்பது கண்டு ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைந்தோம்.

தூதரகங்களில் வாக்குச்சாவடி
நாட்டில் நடைபெறும் தேர்தல் நடைமுறையில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பங்கேற்பதற்காக அவர்களுக்கு வாக்குரிமை அளிப்பதற்கு ஆதரவாகவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இருக்கிறது என்பதைத் திட்டவட்டமாக ஆரம்பத்திலேயே தெரிவித்துக் கொள்கிறோம்.இதற்காக வாக்குச்சாவடிகளையும், இதர வசதிகளையும் வெளிநாடுகளில் உள்ள நம்முடைய தூதரகங்களில் அமைத்திடலாம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பரிந்துரைத்திருந்தது. வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் அங்கே சென்று தங்கள் வாக்குரிமையை அளித்திடலாம். இந்த நடைமுறையை உலகில் உள்ள பல நாடுகள் பின்பற்றிக்கொண்டிருக்கின்றன. இதன்மூலம் வாக்காளர்களை நேரடியாக சரிபார்த்து உறுதிப்படுத்தப்படுவதும் சாத்தியமாகிறது.
நடைமுறையிலிருந்து 

அப்பட்டமான விலகல்
இவ்வாறு தேர்தல் ஆணையம் மிக முக்கியமான முடிவுகளை மேற்கொள்வதற்கு முன்பு, அரசியல் கட்சிகளுடன் கலந்தாலோசனை செய்து பின்னர் முடிவுகளை இறுதிப்படுத்துவது என்பதுதான் இதுநாள்வரையிலும் நடைமுறையாக இருந்துவந்தது. இந்த நடைமுறையிலிருந்து இப்போதைய தேர்தல் ஆணையம் அப்பட்டமான முறையில் விலகிச் சென்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்திஇருக்கிறது.வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்கள் வாக்குரிமையைச் செலுத்துவதற்கு அனுமதிக்கவேண்டும் என்கிற முன்மொழிவை, தேர்தல் ஆணையம் 2014இல்தான் முதன்முதலாக எடுத்துக்கொண்டது. அந்த சமயத்தில் இது தொடர்பாக தேர்தல் ஆணையம்,வெளிநாடு வாழ் இந்தியர்களைப் பொறுத்தவரை ஒரு ‘நேர்மையான மற்றும் நியாயமான’ தேர்தலை உத்தரவாதப்படுத்துவதற்கான நடைமுறையை எவ்வாறு ஏற்படுத்தலாம் என்பது குறித்து, அனைத்துக் கட்சிகளையும் கலந்தாலோசனை செய்தது. பின்னர், உச்சநீதிமன்றமும், இந்தியாவில் தேர்தல்கள் நடைபெறும் சமயத்தில் இந்தியக் கடவுச்சீட்டுகளை வைத்திருக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் அர்த்தமுள்ள விதத்தில், தேர்தல் நடைமுறைகளில் ஜனநாயகப்பூர்வமான முறையில்பங்கேற்பதற்கான உரிமைகளை உயர்த்திப் பிடித்தது.

பதிலி நபர் வாக்களிப்பு சட்ட முன்வடிவு காலாவதி
வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்களுக்குப்பதிலாக பதிலி நபர்கள் வாக்களிப்பதற்கு வசதிசெய்து தருவதற்காகக் கொண்டுவரப்பட்ட ஒரு சட்டமுன்வடிவு, 16வது மக்களவை கலைக்கப்பட்டபோது காலாவதியாகிவிட்டது.இப்போது தலைமைத் தேர்தல் ஆணையம், சட்ட அமைச்சகத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு, பதிலிகளுக்குப் பதிலாக, அவர்கள் அஞ்சல் வாக்குரிமையை அனுமதித்திடும் விதத்தில் முன்மொழிவினை அனுப்பியிருக்கிறது. இதன் பொருள், 1961 தேர்தல் நடத்தை விதிகளைத்திருத்துவதற்கு அரசாங்கம் மட்டும் முடிவெடுத்தால் போதுமானது, நாடாளுமன்றத் தின் ஏற்பளிப்பு தேவை இல்லை என்பதாகும்.

வல்லுநர் குழு முன்மொழிவுகள் புறக்கணிப்பு 
இவ்வாறு தலைமைத் தேர்தல் ஆணையம் எடுத்துள்ள தற்போதைய முன்மொழிவு தொடர்பாக, இயல்பாக நடைபெறக்கூடிய, நன்கு நிறுவப்பட்ட பழக்கமான, ஓர் அனைத்துக் கட்சிக் கலந்தாலோசனை எப்போதுமே நடந்ததில்லை. மேலும் 2015இல் தலைமைத் தேர்தல் ஆணையம் அமைத்த வல்லுநர் குழு அளித்த மாற்று முன்மொழிவுகள் எதுவும்கூடஎடுத்துக்கொள்ளப்படவில்லை என்பதும் நன்கு தெரிகிறது.எனினும், தேர்தல் அறிவிக்கைக்குப் பின்குறைந்த பட்சம் ஐந்து நாட்களில் தேர்தல் அதிகாரிக்கு (Returning Officer), வாக்களிக்க விரும்பும் வெளிநாட்டு வாழ் இந்தியர் தான் அஞ்சல் வாக்கு மூலமாக வாக்களிக்க விரும்புவதாக தெரிவிக்க வேண்டும் என்பது போன்ற ஒரு முன்மொழிவை, தலைமைத் தேர்தல் ஆணையம் சட்ட அமைச்சகத்திற்கு நவம்பர் 25 அன்று அனுப்பியிருப்பதாக ஊடகங்கள்தெரிவிக்கின்றன. இவ்வாறு தகவலைப் பெற்றதேர்தல் அதிகாரி, அஞ்சல் வாக்குகளை மின்னணு ரீதியாக (electronically) அனுப்புவார். வெளிநாடு வாழ் இந்தியர்களில் உள்ள வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையை அச்சடித்து அனுப்பப்பட்ட வாக்குச்சீட்டுகளில் பதிந்து, அதனை இந்தியத் தூதரக அதிகாரியால் நியமனம் செய்யப்பட்ட தேர்தல் அதிகாரியின் சான்றொப்பத்துடன் மீண்டும் திருப்பி அனுப்பிட வேண்டும்.வெளிநாடு வாழ் இந்தியர்களில் உள்ள வாக்காளர்கள், தாங்கள் வாக்களித்த வாக்குச்சீட்டுகளை சாதாரண அஞ்சலில் அனுப்பு வார்களா அல்லது அவற்றை இந்தியத் தூதர கங்களில் சேர்த்திடுவார்களா என்பது குறித்து இக்கணம்வரை தெளிவுபடுத்தப்படவில்லை.

தில்லுமுல்லு செய்ய வாய்ப்பு
எனினும், இப்போது முன்மொழியப் பட்டுள்ள விதம், பல்வேறு விதங்களில் தில்லுமுல்லு செய்வதற்கு வாய்ப்புகளை அளித்திடும். வாக்குரிமையில் மிகவும் முக்கியஅம்சம், வாக்களிப்பவரை நேரடியாக சரிபார்ப்பது (physical verification) என்பதாகும். மின்னணு ரீதியாக வாக்களிப்பது என்பதில் இது அடிபட்டுப்போய்விடுகிறது.அதேபோன்று ஒவ்வொரு தொகுதி வாக்குச்சீட்டுகளையும் தேர்தல் அதிகாரிகள் அனுப்பி வைப்பது என்பதும் பிரச்சனைக்கு உரியதேயாகும். வாக்காளர்கள் தாங்கள் அளித்திடும் வாக்குரிமையின் ரகசியத்தன்மை எந்த அளவிற்குக் காப்பாற்றப்படும் என்பதும் தெளிவுபடுத்தப்படவில்லை. இத்தகைய வாக்காளர்கள், தாங்கள் பணிபுரியும் இடத்தில்உள்ள வெளிநாடுவாழ் வேலையளிப்பவர் களின் செல்வாக்கிற்கு அப்பாற்பட்டு எந்த அளவிற்கு இருப்பார்கள் என்பதும் இதில் மிகவும் பிரச்சனைக்குரிய காரணியாகும். எனவே, தேர்தல் ஆணையம் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை கொடுப்பது சம்பந்தமாக மேலும் நடவடிக்கைகள் எடுப்பதற்கு முன்பாக, நாம் மேலே கூறியுள்ளவாறு சிக்கலான பிரச்சனைகள் தொடர்பாக விவாதித்து, தீர்வு காண்பதற்கு ஏற்றவிதத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்று சீத்தாராம் யெச்சூரி, தலைமைத் தேர்தல் ஆணையரை கேட்டுக் கொண்டுள்ளார்.(ந.நி.)

;