india

img

கொரோனாவுக்கு பலியானோர் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க நெறிமுறைகளை வகுத்திடுக.... பிருந்தா காரத் தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு....

புதுதில்லி:
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும்இதற்கான வழிகாட்டு நெறிமுறை களை 6 வாரங்களில் உருவாக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தாகாரத் தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.

இந்தியாவில் அதிகரித்து வந்த கொரோனா தொற்று பாதிப்பு, தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனால் தொற்றால் பலர்உயிரிழந்தனர். அவர்களின் குடும்பம் கடும் அவதிக்குள்ளாகி யுள்ளன.இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஒன்றிய அரசுசார்பில் 4 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத்தொகை வழங்க வேண்டும் என்றுகோரி உச்சநீதிமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் வழக்கு தொடுத்தார்.இழப்பீட்டுத் தொகை கோரிவழக்கறிஞர்கள் கவுரவ் குமார் பன்சல், ரீபாக் கன்சல் ஆகியோரும்   கடந்த மே மாதத்தில் பொதுநல மனு ஒன்றை தக்கல் செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு நடைபெற்றது. ஒன்றிய அரசு தரப்பில் கூறுகையில், பொருளாதார நெருக்கடி காரணமாக கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீட்டுத்தொகை வழங்குவது சாத்திய மில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க தேசிய பேரிடர் நிதியை பயன்படுத்தினால் அந்த திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி காலியாகிவிடும் என்று கூறி கைவிரித்தது.

பிருந்தா காரத் தரப்பில் வாதிடுகையில், சட்டப்பிரிவு 12-ஐ பயன்படுத்தி கொரோனாவால் உயிரிழந்த மக்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தப் பட்டது. இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள்,ஒன்றிய அரசின் வாதத்தை நிராகரித்தனர்.

விருப்பப்படி அல்ல, சட்டப்படி...
இதில் நீதிபதிகள் ஜூன் 30 அன்றுபிறப்பித்த உத்தரவில், கொரோ னாவால் உயிரிழந்தவர்களுக்கு ஒன்றிய அரசு இழப்பீடு வழங்க வேண்டும். சட்டப்பிரிவு 12-ஐ பயன்படுத்தி கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு கட்டாயமாக இழப்பீட்டுத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இழப்பீட்டுத்தொகை வழங்குவது என்பது அரசின் விருப்பப்படி அல்ல, சட்டப்படி கட்டாயமாகும்.ஆனால் இந்த விஷயம் தொடர்பாக ஒன்றிய அரசுக்கு நேரடியாக உத்தரவு பிறப்பிக்க முடியாது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்குவது தொடர்பாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் 6 வாரத்திற்குள் வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் .இழப்பீடு எவ்வளவு என்பதை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் முடிவு செய்யலாம். பேரழிவு மேலாண்மை சட்டப்பிரிவு 12 இன்படி இறந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவது தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கடமை .கொரோனா வால் உயிரிழந்தவர்களுக்கு வழங்கப்படும் இறப்புச் சான்றிதழ் முறையை எளிமையாக்க வேண்டும் என்றும்  நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

;