india

img

2022 ஏப்ரல் - கண்ணூரில் சிபிஎம் 23 ஆவது அகில இந்திய மாநாடு.... கட்சியின் மத்தியக்குழு அறிவிப்பு...

புதுதில்லி:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23ஆவது அகில இந்திய மாநாடு 2022 ஆம் ஆண்டு ஏப்ரலில் கேரள மாநிலம் கண்ணூரில் நடைபெறுகிறது. 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழுக் கூட்டம் 2021 ஆகஸ்ட் 6 முதல் 8 ஆம் தேதி வரை நடைபெற்றது. பின்னர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

2022 ஏப்ரல் மாதத்தில் கேரள மாநிலம் கண்ணூரில் அகில இந்திய 23ஆவது மாநாட்டை நடத்திட கட்சியின் மத்தியக்குழு தீர்மானித்திருக்கிறது. இந்த மாநாடு, கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக திட்டவட்டமான நிலைமைகளுக்கு உட்பட்டு, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் நடத்தப்படும்.

மத்திய அரசுக்கு 15 கோரிக்கைகள்

மத்தியக்குழு, கீழ்க்கண்ட பதினைந்து கோரிக்கைகளையும் ஒன்றிய அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்று கோருகிறது:

1.உலக அளவில் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்து, அனைவருக்கும் இலவசமாகத் தடுப்பூசி போடும் திட்டத்தை உடனடியாக விரைவுபடுத்த வேண்டும். கோவிட்-19 இல் உயிரிழந்தவர்களுக்கு உரிய இழப்பீடு அளிக்கப்பட வேண்டும். பொது சுகாதார பாதுகாப்பு முறையை மிகவும் பெரிய அளவில் விரிவுபடுத்திட வேண்டும்.

2.வருமான வரி செலுத்தும் வரம்புக்குள் வராத அனைத்துக் குடும்பத்தினருக்கும் மாதந்தோறும் 7,500 ரூபாய் பணம் இலவசமாக வழங்க  வேண்டும்.

3.தேவைப்படும் அனைவருக்கும் நாள்தோறும் உபயோகப்படுத்தும்  அனைத்து அத்தியாவசியப் பொருள்களும் அடங்கிய உணவுப் பைகளை இலவசமாக வழங்க வேண்டும். 

4.அனைத்துப் பெட்ரோலியப் பொருட்களின் மீதான ஒன்றிய அரசின் கலால் வரி உயர்வுகளைத் திரும்பப்பெற வேண்டும். பாய்ச்சல் வேகத்தில் சென்றிடும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்திட வேண்டும்.  

5.வேளாண் சட்டங்களை ரத்து செய்திட வேண்டும். சி.2+50 சதவீத உயர்வுடன் அனைத்து விவசாய விளைபொருள்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டரீதியான உரிமையைப் பெறக்கூடிய விதத்தில் சட்டம் இயற்ற வேண்டும்.

6.பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதை நிறுத்த வேண்டும். தொழிலாளர் (விரோத) சட்டங்களை ரத்து செய்திட வேண்டும்.

7.ஊதிய மாற்றத்திற்காகவும் வேலை நிறுத்த உரிமை மூலம் கிளர்ச்சிப் போராட்டங்களை மேற்கொள்வதற்கான தொழிலாளர் உரிமைகளை மீண்டும் அளித்திட வேண்டும்.

8.நுண்ணிய சிறிய நடுத்தரத் தொழில் பிரிவுகளைப் புதுப்பிப்பதற்காக, நிதி ஊக்குவிப்புத் தொகைகளை அறிவித்திட வேண்டும். கடன்கள் அளித்து மீண்டும் கடன்வலையில் சிறிய தொழில் பிரிவினரைத் தள்ளக்கூடாது.

9.மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தை மிகவும் விரிவுபடுத்திட வேண்டும். ஆண்டொன்றுக்கு 200 நாட்களுக்கு வேலை அளித்திட வேண்டும். நாள் ஊதியத்தைக் குறைந்தபட்சம் இரட்டிப்பாக்கிட வேண்டும்.

10.இதேபாணியில் நகர்ப்புற வேலைவாய்ப்பு  உத்தரவாதச் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும்.

11.வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் விதத்திலும் உள்நாட்டுத் தேவைகளை அதிகரிக்கும் விதத்திலும் நம் பொருளாதாரம் மற்றும் சமூக உள்கட்டமைப்பு வசதிகளைக் கட்டி எழுப்புவதற்காக பொது முதலீடுகளை அதிகரித்திட வேண்டும். அரசுப் பணியிடங்களில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்பிட வேண்டும்.

12.கல்வி நிறுவனங்களை விரைந்து திறப்பதற்கு உத்தரவாதம் செய்யும் விதத்தில் ஆசிரியர்கள், மாணவர்கள், ஊழியர்கள் அனைவருக்கும் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசிகள் செலுத்தப்பட வேண்டும்.

13.மக்களை உளவு பார்ப்பதற்காக பயன்படுத்தப்படும் பெகாசஸ் வேவு மென்பொருள்  தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையின் கீழ் நீதித்துறை விசாரணை உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும். 

14.ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக முந்தைய ஆர்டரை ரத்து செய்துவிட்டு, அதிக கட்டணத்துடன் புதிய ஆர்டர் போடப்பட்டது தொடர்பாக, உயர்மட்ட புலன்விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

15.மிகவும் அரக்கத்தனமான சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின் கீழும் மற்றும் பல்வேறு பிரிவுகளின் கீழும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பீமா கொரேகான் வழக்கு மற்றும் குடியுரிமைத் திருத்தச் சட்ட வழக்கிற்கு எதிராகக் கிளர்ச்சிப் போராட்டங்களில் ஈடுபட்ட அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவித்திட வேண்டும்.

செப்டம்பரில் கிளர்ச்சிப் போராட்டத்திற்கு அறைகூவல்
மேற்கண்ட கோரிக்கைகளின் அடிப்படையில் நாடு தழுவிய அளவில்  போராட்டங்களை மாநிலக் குழுக்கள் மற்றும் அனைத்துக் கிளைகளும் வரும் செப்டம்பர் மாதத்தில் மேற்கொள்ள வேண்டும் என்று மத்தியக்குழு அறைகூவல் விடுக்கிறது. அவ்வாறு கிளர்ச்சிப் போராட்டங்கள் நடத்திடும் சமயத்தில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான பாதுகாப்பு அம்சங்களையும், சமூக முடக்கத்தையும் கறாராகக் கடைப்பிடித்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறது. இது தொடர்பாக மாநிலக் குழுக்கள் கிளர்ச்சி நடவடிக்கைகளை விவரமான முறையில் திட்டமிட வேண்டும்.மேற்கண்ட கோரிக்கைகளின் அடிப்படையில் அனைத்துப் பகுதி மக்கள் பிரிவினரையும் அணிதிரட்டிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.வெள்ளையனே வெளியேறு ஆண்டு தினத்தன்று நாடு முழுவதும் கிளர்ச்சிப் போராட்டங்களில் ஈடுபட வேண்டும் என்கிற அனைத்து விவசாய முன்னணியின் தேசந்தழுவிய அறைகூவலுக்கு ஆதரவு அளித்திட வேண்டும்.

;