சென்னை:
சிஐடியு அகில இந்திய மாநாடு ஜனவரி 23ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை சென்னை யில் நடைபெறவுள்ளது. இதையொட்டி தமிழகத்தில் 7 மையங்களிலிருந்து தியாகிகள் ஜோதிசென்னைக்கு கொண்டு வரப்படுகிறது.தமிழக தொழிலாளர்களின் ஒப்பற்ற தலைவர் தோழர் வி.பி.சிந்தன் நினைவு ஜோதி ஞாயிறன்று (ஜன. 19) வடசென்னை மாவட்டம் திருவொற்றியூரிலிருந்து துவங்கியது. மாவட்டத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன் தலைமையில் திருவொற்றியூர் பெரியார் நகரில் நடைபெற்ற விபிசி நினைவு ஜோதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் வே.மீனாட்சி சுந்தரம் எடுத்துக்கொடுக்க அதனை சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.திருவேட்டை பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய வே.மீனாட்சிசுந்தரம், தோழர் வி.பி.சிந்தனின் வீரம் செறிந்த போராட்டவரலாற்றை தொழிலாளர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். தொழிலாளர்களின் ஒற்றுமையும், உழைப்பு சக்தியையும் கொண்டு மக்களின் மனங்களை வென்றெடுப்போம் என்றும் அகில இந்திய 16வது மாநாட்டை வெற்றி பெறச்செய்ய அனைவரும் சூளுரைப்போம் என்றும் அவர் கூறினார். சிஐடியு திருவள்ளூர் மாவட்டத் தலைவர் கே.விஜயன், திருவொற்றியூர் பொதுத்தொழிலாளர் சங்கத் தலைவர் ஆர்.ஜெயராமன், கே.ஆர்.முத்துச்சாமி உள்ளிட்ட பலர் பேசினர். எம்.கே.பி. நகர், பெரம்பூர் உள்பட நினைவுஜோதி சென்ற இடமெல்லாம் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட்டது.
புதுச்சேரி தியாகிகள் ஜோதி
புதுச்சேரியில் இருந்து புதுவை தியாகிகள் ஜோதியை சிஐடியு மூத்த தலைவர் தா.முருகன் எடுத்து கொடுக்க, அதனை சிஐடியு பிரதேச செயலாளர் ஜி.சீனுவாசன் பெற்று கொண்டார். சிஐடியு பிரதேச தலைவர் கே.முருகன் தலைமை தாங்கினார். சிஐடியு தமிழ் மாநில துணைப் பொதுச் செயலாளரும், ஜோதி பயணக் குழு தலைவருமான வி.குமார் தலைமைதாங்கினார். மாதர் சங்க மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, சிஐடியு தலைவர் பி.கருப்பையன், சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் வெ.பெருமாள், பிரதேச செயலாளர் ஆர்.ராஜாங்கம். சிஐடியு பிரதேசப் பொருளாளர் என்.பிரபுராஜ் உள்ளிட்டோர் பேசினர்.புதுச்சேரி நகரம், உழவர்கரை, வில்லியனூர், பாகூர் ஆகிய பகுதிகளை கடந்து கடலூர் மாவட்டத்திற்கு நினைவு ஜோதி பயணம் சென்றது. புதுச்சேரி வழி நெடுக தியாகிகள் ஜோதி பயணத்திற்கு தொழிலாளர்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தோழர் ஜே.ஹேமச்சந்திரன் நினைவு ஜோதி
சிஐடியு 16 ஆவது அகில இந்திய மாநாட்டிற்கான தோழர் ஜெ.ஹேமச்சந்திரன் நினைவுஜோதியை மாத்தூரில் தோழர் ஜெ.ஹேமச்சந்திரன் நினைவிடத்தில் இருந்து முன்னாள் எம்பிஏ.வி.பெல்லார்மின் சிஐடியு மாவட்ட செயலாளர் கே.தங்கமோகனிடம் அளித்தார். குமரி மாவட்டம் மாத்தூரிலிருந்து கொண்டுவரப்பட்ட ஜோதிக்கு நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கு முன்பு எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது மாவட்டத் தில் பல்வேறு பகுதிகளிலிருந்து 49 தியாகிகள் பெயரால் கொண்டு வரப்பட்ட ஜோதிகளின் மகாசங்கமம் நடைபெற்றது.இதில், சிஐடியு மாநில செயலாளர்கள் ஆர்.ரசல், ஐடா ஹெலன், ஆர்.மோகன், தூத்துக்குடிமாவட்ட செயலாளர் பேச்சிமுத்து, மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஆர்.செல்லசுவாமி, வட்டார செயலாளர் ஆர்.வில்சன்,விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.ரவி,மாவட்ட துணைத்தலைவர் என்.முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.