tamilnadu

img

தியாகச் சுடர்கள் ஜொலித்த சிஐடியு அகில இந்திய மாநாடு

தோழர் முகமது அமீன் நகர் (சென்னை), ஜன. 23 - இந்திய தொழிலாளர் வர்க்கத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் இந்திய தொழிற்சங்க மையம்(சிஐடியு) 16வது அகில இந்திய மாநாடு வியாழனன்று (ஜன.23) தோழர் முகமது அமீன் நகர் - தோழர் சுகுமால் சென் அரங்கில் (ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானம்) பேரெழுச்சியுடன் தொடங்கியது.   அதிர்வேட்டுகளுடன், விண்ணதிரும் முழக்கங்களுக் கிடையே  சிஐடியு அகில இந்திய தலைவர் டாக்டர் கே.ஹேமலதா மாநாட்டுக் கொடியை  ஏற்றி வைத்தார். அப்போது மாநாட்டு அரங்கம் முன்பு கூடியிருந்த பிரதிநிதிகளும் தொழிலாளர்களும் “16வது அகில இந்திய மாநாடு வெல்க’’, “தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக” “புரட்சி ஓங்குக” என முழக்கமிட்டனர்.

தியாகிகள் சுடர்களுக்கு வரவேற்பு

உணர்ச்சிப் பிரவாகமான  முழக்கங்களுக்கு இடையே தமிழகத்தின் 7 பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட தியாகிகளின் நினைவுச் சுடர்களை மூத்த தொழிற்சங்கத் தலைவர்கள் பெற்றுக் கொண்டனர்.  வெண்மணி கிராமத்திலிருந்து கொண்டு வரப்பட்ட வெண்மணி தியாகிகள் சுடரை மாநிலச் செயலாளர் சி.ஜெயபாலிட மிருந்து வரவேற்புக்குழுத் தலைவர் அ.சவுந்தரராசன் பெற்றுக் கொண்டார். திருச்சியிலிருந்து மாநில துணைத்தலைவர் ஆர்.சிங்காரவேலு தலைமையில் கொண்டுவரப்பட்ட பொன்மலை தியாகிகள் சுடரை வரவேற்புக்குழு கவுரவத் தலைவர் டி.கே.ரங்கராஜன் எம்.பி., பெற்றுக்கொண்டார். புதுச்சேரியிலிருந்து மாநில துணைப்பொதுச் செயலாளர் வி.குமார் தலைமை தாங்கி வந்த புதுவை தியாகிகள் சுடரை அகில  இந்திய செயலாளர் ஸ்வதேஷ் தேவ்ராய் பெற்றுக்கொண்டார். கோவையிலிருந்து கொண்டுவரப்பட்ட சின்னியம்பாளை யம் தியாகிகள் சுடரை மாநிலச் செயலாளர் எஸ்.கிருஷ்ண மூர்த்தியிடமிருந்து தேசியச் செயலாளர்  இளமரம் கரீம் எம்.பி., பெற்றுக் கொண்டார்.

சென்னையிலிருந்து மாநிலச் செயலாளர் சி.திருவேட்டை தலைமை தாங்கி கொண்டு வந்த தோழர் வி.பி.சிந்தன் நினைவுச் சுடரை தேசிய செயலாளர் ஏ.ஆர்.சிந்து பெற்றுக்கொண்டார். கன்னியாகுமரியிலிருந்து கொண்டு வரப்பட்ட தோழர் ஜே.ஹேமச்சந்திரன் நினைவு சுடரை மாநிலச் செயலாளர் கே.தங்கமோகனிடமிருந்து தேசிய செயலாளர் அனாதி சாஹூ பெற்றுக்கொண்டார். மதுரை மண்ணிலிருந்து கொண்டு வரப்பட்ட தியாகி லீலாவதி நினைவு சுடரை  மாநில துணைத்தலைவர்  எம்.மகாலட்சுமி யிடமிருந்து அகில இந்திய துணைத்தலைவர் எஸ்.வரலட்சுமி பெற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து தலைவர்களும், பிரதிநிதிகளும் தியாகிகள் ஸ்தூபிக்கு அஞ்சலி செலுத்தினர்.  

பிரதிநிதிகளுக்கு வரவேற்பு

அதைத் தொடர்ந்து மாநாட்டு அரங்கிற்குள் நுழைந்த  பிரதிநிதிகளுக்கு 50 குழந்தைகளும், 50 பெண்களும் ரோஜா மலர்க்கொத்து அளித்து உற்சாகமாக வரவேற்றனர். அதைத் தொடர்ந்து அகில இந்தியத் தலைவர் டாக்டர் ஹேமலதா தலைமையில் பொது மாநாடு துவங்கியது. 

பொதுமாநாடு

தோழர் சுகுமால் சென் நினைவரங்கில் தொடங்கிய பொது மாநாட்டிற்கு டாக்டர் கே.ஹேமலதா தலைமை தாங்க, வரவேற்புக்குழுத் தலைவர் அ.சவுந்தரராசன் வரவேற்று பேசினார். உலக தொழிற்சங்க  சம்மேளன தலைவர் மாவண்டில் மக்வாய்பா வாழ்த்திப் பேசினார். .ஐஎன்டியுசி தலைவர் ஆர்.பி.கே.முருகேசன், ஏஐடியுசி பொதுச் செயலாளர் அமர்ஜித் கவுர், எச்எம்எஸ் தலைவர் சி.ஏ.ராஜாஸ்ரீதர், ஏஐயுடியுசி தலைவர் கே.ராதாகிருஷ்ணன், டியுசிசி துணைத்தலைவர் பி.வி.கதிரவன், ஏஐசிசிடியு துணைத்தலைவர் வி.சங்கர், யுடியுசி பொதுச் செயலாளர் அசோக்கோஷ், சேவா தலைவர் சோனியா ஜார்ஜ், எல்பிஎப் தலைவர் சண்முகம் ஆகியோர் மாநாட்டை வாழ்த்திப் பேசினர்.

பிரதிநிதிகள் மாநாடு

பின்னர் டாக்டர் கே.ஹேமலதா தலைமையில் தொடங்கிய பிரதிநிதிகள் மாநாட்டில், பொதுச்செயலாளர் தபன் சென், அறிக்கை தாக்கல் செய்தார். நிதிநிலை அறிக்கை பொருளாளர் எம்.எல்.மல்கோட்யா சமர்ப்பித்தார். பிரதிநிதிகள் மாநாடு ஜன.26வரை தொடர்ந்து நடைபெறுகிறது. விவாதத்திற்கு பதில் அளித்து பொதுச் செயலாளர் தபன்சென் உரையாற்ற உள்ளார்.  ஜன.27 காலை புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெறுகிறது.

முக்கிய தீர்மானங்கள்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறவேண்டும்; தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) தேசிய குடியுரிமை பதிவேடு (என்சிஆர்) ஆகியவற்றை நிராகரித்தும்; ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் ஜனநாயக உரிமைகளை மீண்டும் வழங்கக்கோரியும்; பிரான்ஸ் நாட்டில் அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளை எதிர்த்து தொழிற்சங்கங்கள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் பொது மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டு துவக்க நிகழ்ச்சிக்கு முன்பு திண்டுக்கல் சக்திகலைக்குழுவினரின் தப்பாட்டம் நடைபெற்றது. இந்தியா முழுவதிலும் இருந்து வந்திருந்த பிரதிநிதிகள் தமிழக கலைஞர்களின் நடனத்தை ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

ஜன.27ல் பேரணி-பொதுக்கூட்டம்

மாநாட்டின் நிறைவாக ஜன.27 அன்று சைதாப்பேட்டை தாடண்டர் நகரிலிருந்து பேரணி தொடங்கி, சிந்தனைச் சிற்பி ம.சிங்காரவேலர் நினைவு திடலை (நந்தனம் ஒய்எம்சிஏ மைதானம்) வந்தடையும். அங்கு நடைபெறும் பிரம்மாண்ட மான பொதுக்கூட்டத்தில் தலைவர்கள் உரையாற்ற உள்ளனர்.

மாநாட்டுத் துவக்க நிகழ்வில் ஜனவரி23 - நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாளையொட்டி அவரது உருவப்படத்திற்கும்; தியாகிகள் ஸ்தூபிக்கும் தலைவர்கள் கே.ஹேமலதா, தபன்சென், ஏ.கே.பத்மநாபன், அ.சவுந்தரராசன், ஜி.சுகுமாறன் மற்றும் பிரதிநிதிகள்  மலர்தூவி செவ்வணக்கம் செலுத்தினர்.