லக்னோ:
உத்தரப்பிரதேசத்தில் திட்டமிட்டு மதக் கலவரத்தை தூண்ட முயற்சித்ததாக ‘டுவிட்டர்’, ‘தி வயர்’ ஆகிய ஊடகங்கள் மீதும், பத்திரிகையாளர் ராணாஅய்யூப், ‘ஆல்ட் நியூஸ்’ பத்திரிகையாளர் முகமது சுபையர், எழுத்தாளர் சபா நக்வி, காங்கிரஸ் தலைவர்கள் சல்மான் நிசாமி, ஷாமா முகம்மது, மஸ்கூர் உஸ்மானி ஆகியோர் மீதும் உ.பி. காவல்துறை செவ்வாயன்று நள்ளிரவு வழக்குப் பதிவு செய்தது.
“உ.பி. மாநிலம் காஜியாபாத்தில், முஸ்லிம் பெரியவர் அப்துல் சமதுசைபி (72) தாக்கப்பட்டதில், வகுப்புவாத பின்னணி இல்லை; ‘ஜெய் ஸ்ரீராம்’ என முழங்குமாறு யாரும்நிர்ப்பந்திக்கவில்லை. மேலும், முஸ்லிம் என்பதற்காக தாடி மழிக்கப்படவில்லை. அது வெறும் தனிநபர் மோதல்தான். மாறாக, ‘டுவிட்டர்’, ‘தி வயர்’ உள்ளிட்ட ஊடகங்களும், பத்திரிகையாளர்களும், அரசியல் தலைவர்களும் பொய்யான வீடியோவை வெளியிட்டு, மதக்கலவரத்தை தூண்டினார்கள்”? என்பது உ.பி. பாஜக அரசின் குற்றச்சாட்டு ஆகும்.
அதனடிப்படையிலேயே, இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153 (கலகத்திற்கு ஆத்திரமூட்டல்), 153 A (வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல்), 295 A (மத உணர்வுகளை தூண்டும் வகையில் செயல்படுதல்), 505 (சீண்டுதல்), 120 B (குற்றச் சதி) மற்றும் 34 (பொதுவான நோக்கம்) ஆகிய பிரிவுகளை மாநில காவல்துறை பயன்படுத்தியது. ஆதித்யநாத் தலைமையிலான உ.பி. பாஜக அரசின் இந்த நடவடிக்கைக்கு தற்போது பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் எழுந்திருப்பதுடன், ஊடகங்களுக்கு எதிரான வழக்குகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்துள்ளன.
இந்நிலையில், அப்துல் சமது தாக்கப்பட்டதற்கு முழுக்க முழுக்க வகுப்புவாத பின்னணியே காரணம் என்றும், தனது தந்தை புகாரில் கூறியிருந்த விவரங்களை புறக்கணித்து விட்டு, காவல்துறை எப்ஐஆரை உருவாக்கி இருப்பதாகவும் அப்துல் சமது சைபியின் மூத்த மகன் பாபு சைபி கூறியுள்ளார்.இந்த விவகாரத்தில் உ.பி. காவல்துறை கூறும் அனைத்தும் பொய் என்றும் ‘தி வயர்’ ஏட்டிற்கு அளித்த பேட்டியில் பாபு சைபி குற்றம் சாட்டியுள்ளார்.“அப்துல் சமது தங்களிடம் கூறியதற்கும், வைரல் வீடியோவில் அவர்கூறிய குற்றச்சாட்டுகளுக்கும் இடையே முரண்பாடு இருப்பதாக பொலீசார் கூறினாலும், எழுத்துப்பூர்வமான புகாரில் நடந்த உண்மையை அப்துல் சமது சரியாக தெரிவித்திருந்தார்.‘நான் எங்கு செல்ல விரும்புகிறேன் என்று ஒரு ஆட்டோ டிரைவர் என்னிடம் கேட்டார். நான் ஹாஜிபூர் பெட்டாதர்கா மசூதிக்கு செல்ல விரும்புகிறேன் என்று சொன்னேன். அவரும் அந்தவழியாகவே செல்வதாகவும், உங் களை அங்கே இறக்கிவிடுகிறேன் என்றும் கூறினார். அதன்பிறகு நான்ஆட்டோவில் அமர்ந்தேன். சிறிது நேரம் கழித்து, மேலும் இரண்டு பேர் வந்து ஆட்டோவுக்குள் அமர்ந்தனர். அடுத்த நிமிடமே, அவர்கள் என் தலையில் ஒரு கைத்துப்பாக்கியை வைத்து அழுத்தியதுடன், என் வாயையும் கைக்குட்டையால் போர்த்தினார் கள்.
பின்னர் ஓரிடத்தில் ஆட்டோவை நிறுத்தி என்னை ஒரு அறைக்குள் அழைத்துச் சென்று, இரவு 7 மணி வரை என்னைத் தாக்கினார்கள். கேபிள் கம்பிகள், குச்சிகள், பெல்ட் டுளால் விளாசினார்கள். கை, கால்களைப் பயன்படுத்தி அடித்து உதைத் தார்கள். நான் அவர்களுக்கு முன் னால் அல்லாவின் கருணையை நாடியபோது அவர்கள் என்னை அதிகமாக தாக்க ஆரம்பித்தார்கள். அவர்கள்என்னிடம் ‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கமிடச் சொன்னார்கள், பின்னர் என் நீண்டதாடியை கத்தரிக்கோலால் துண்டித்துவிட்டார்கள். மிகவும் சோர்ந்து போனநான் தண்ணீர் கேட்டபோது, எனக்குமுன்னால் சிறுவர்களை சிறுநீர் கழிக்க வைத்து, அதனைக் குடிக்கச்சொன்னார்கள். நான் இணங்கவில்லை என்றால் என்னைக் கொன்றுவிடுவேன் என்று மிரட்டினார்கள். இதற்கு முன்பும் என்னைப் போன்ற,பல முஸ்லிம்களைக் கொன்றிருப்பதாக கூறினார்கள். ஆனாலும் யாரும் அவர்களைக் கண்டுபிடிக்கவில்லை என்று கூறி, இதுபோன்ற தாக்குதல் நிகழ்வுகளின் பல வீடியோக்களையும் புகைப்படங்களையும் தங்களில் மொபைல் போன்களிலிருந்து காட்டினார்கள்’.
- இதுதான் எனது தந்தை அப்துல் சமது உருதுமொழியில் கையெழுத்திட்டு அளித்த புகார் மனுவில் இடம்பெற்றுள்ள விவரங்கள். தன் மீதான தாக்குதலுக்கு மதம் ரீதியான பாகுபாடுதான் காரணம் என்பதை அவர் மிகத்தெளிவாக புகாரில் எடுத்துரைத்துள்ளார். ஆனால், இவைஎதையும் உ.பி. காவல்துறை கணக்கில்எடுத்துக் கொள்ளவில்லை. எனது தந்தை அப்துல் சமதுவும், அவர் மீது தாக்குதல் நடத்தியவர்களான பிரவேஷ், ஆதில், கல்லுஆகியோர் ஒருவருக்கொருவர் நன்குஅறிமுகமானவர்கள். ஏனெனில் அப்துல் சமது கிராமத்தில் உள்ள பலருக்கு தவீஸ் (தாயத்து) கொடுப்பவர்- என்பது காவல்துறை அறிக்கையில் இடம்பெற்றுள்ள ஒரு அம்சமாகும்.
ஆனால், எனது தந்தைக்கு தாக்குதல் நடத்தியவர்கள் யாரையுமே தெரியாது. அதற்கு காஜியாபாத் (ஊரகம்)எஸ்.பி.-யின் பேட்டியே சாட்சி. ஜூன் 7-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டமுதல் எப்ஐஆரை மேற்கோள் காட்டிஎஸ்.பி. ஈராஜ் ராஜா பேசுகையில், ‘பாதிக்கப்பட்டவர் (அப்துல் சமது),தன்னைத் தாக்கியவர்கள் என்று யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை’ என்று கூறியது இங்கு குறிப்பிடத்தக் கது. அதுமட்டுமல்ல, எனது குடும்பத் தில் யாரும் தாயத்து செய்து கொடுப்பதில்லை. நாங்கள் பரம்பரை பரம்பரையாக தச்சு வேலை மட்டுமே செய்து வருகிறோம்.
எனது தந்தை தாக்கப்பட்டதற்கு வகுப்புவாத பின்னணி இல்லை. ஏனெனில் அவரைத் தாக்கியவர்களில் முஸ்லிம் ஒருவரும் இருக்கிறார் என்பதுபோலீசாரின் மற்றொரு கூற்று. ஆனால், போலீசாரால் கைது செய்யப்பட்ட முஸ்லிம் நபரான ஆதில், தகவலறிந்து எனது தந்தையை மீட்பதற்காக சென்றவர். ஆனால், அவர் மீதே போலீசார் வழக்கு பதிவுசெய்துள்ளனர். ஒருவேளை அவர்தாக்கினார் என்றால், காவல்துறையினர் அவரை கைது செய்வதற்கு முன்பாகவே, எதற்காக காவல்நிலையம் வரப்போகிறார்? எனவே, இதிலும் உண்மை இல்லை.ஒட்டுமொத்தமாக உ.பி. காவல் துறையின் அறிக்கை, எந்த உண்மைகளையும் அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை. முழுக்க முழுக்க ஆதாரமற்ற கூற்றுக்களையே முன்வைத் துள்ளனர்” என்று பாபு சைபி குறிப் பிட்டுள்ளார்.