மதுரை,ஏப்.02- சிபிஎம் 24ஆவது அகில இந்திய மாநாடு மதுரையில் கோலாகலமாகத் தொடங்கியது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது அகில இந்திய மாநாடு மதுரை தமுக்கம் மைதானத்தில் இன்று காலை 10 மணியளவில் தொடங்கியது.
மாநாட்டு தொடக்கத்தில் திடலில் வைக்கப்பட்டுள்ள தியாகிகளின் நினைவு ஸ்தூபிக்கு, கட்சியின் அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத் மற்றும் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள், மத்தியக் குழு உறுப்பினர்கள் என பலர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
மேலும் மாநாட்டின் ஒரு பகுதியான பொது மாநாட்டில், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் மாணிக் சர்க்கார் தலைமை உரையாற்றினார். மாநாட்டில் மத்தியக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் வரவேற்புரையாற்றினார். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத் துவக்கவுரையாற்றினார்.
இன்று முதல் 6ஆம் தேதி வரை நடைபெறும் இந்த மாநாட்டில் பல்வேறு கருத்தரங்கங்கள் நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில் பல்வேறு மாநில முதல்வர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.