பாட்னா
பீகார் மாநிலத்தின் கதிஹார் மாவட்டத்திற்கு உட்பட்ட பாகுரா பஞ்சாயத்தின் பாஸ்தியா கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள் குருச்சந்திர விஸ்வாஸ், ஆசித் குமார். இருவரும் 6-ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். சிறுவர்கள் இருவரும் தங்களது செல்போன் வைத்து விளையாடி கொண்டிருக்கும் பொழுது தங்களது வங்கிக் கணக்கில் (பள்ளி கிராம வங்கி கணக்கு) ரூ.900 கோடி டெபாசிட் ஆனதாக குறுஞ்செய்தி காட்டியுள்ளது.
உடனடியாக சிறுவர்கள் இருவரும் தங்கள் பெற்றோருக்கு குறுஞ்செய்தியை காட்டியுள்ளனர். அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் ஏடிஎம் இல் பண விவரத்தை சரி பார்த்த நிலையில், குறைந்த அளவு பணமே இருந்துள்ளது. இதையடுத்து, சிறுவர்களின் பெற்றோர் உடனடியாக வங்கிக்குச் சென்று இந்தத் தகவலைத் தெரிவித்தபோது, வங்கி அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். வங்கி அதிகாரிகள் கணக்கை ஆய்வு செய்தபோது, கணக்கில் குறைந்தபட்ச பணம் மட்டுமே இருந்தது, ஆனால், கணினியின் கணக்கில் ரூ.900 கோடி காட்டியது கண்டு குழம்பினர்.
இதுகுறித்து கதிஹார் மாவட்ட ஆட்சியர் உதயன் மிஸ்ரா கூறுகையில் “ இரு சிறுவர்கள் வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தகவல் குறித்து அறிந்தேன். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இது தொடர்பாக வங்கி அதிகாரிகள் அதிகாலை விரைவாகச் சென்று வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்தனர். வங்கியின் கணினிச் செயல்பாட்டு முறையில் சில கோளாறுகள் நடந்திருக்கலாம் என வங்கியின் மேலாளர் தகவல் தெரிவித்துள்ளார். சிறுவர்களின் கணக்கில் குறைவான பணம் இருக்கிறது. ஆனால், கணினியின் கணக்கில் ரூ.900 கோடி காட்டுகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை கேட்டுள்ளேன்” எனத் தெரிவித்தார்.