புதுதில்லி:
தேசியவாதமும், ‘பாரத் மாதா கீ ஜே’ என்ற முழக்கமும், இந்தியாவில் பயங்கர வாத சிந்தனைகளை கட்டமைக்கும் நோக்கத்தில் தவறாக பயன்படுத்தப்படுவதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குற்றம் சாட்டியுள்ளார்.
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் சுயசரிதையில் இருந்தும், அவரது புகழ்பெற்ற ‘டிஸ்கவரி ஆப் இந்தியா’ நூலில் இருந்தும், சில முக்கியமான பகுதிகளை உள்ளடக்கி ‘ஹூ இஸ் பாரத மாதா’
(Who is bharat mata) என்ற நூல் ஏற்கெனவே ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளது. புருஷோத்தம் அகர்வால், ராதா கிருஷ்ணா ஆகியோர் எழுதியுள்ள இந்த நூலின் கன்னட மொழிபெயர்ப்பு ஞாயிறன்று தில்லியில்வெளியிடப்பட்டது.அப்போது நூலை வெளியிட்டு, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசியிருப்பதாவது:
இந்த புத்தகத்தில் நேருவின் உன்னதமான பேச்சுகள், அவரது உரைகள் கட்டுரைகள், கடிதங்கள் மற்றும் மிகவும் வெளிப் படையான சில நேர்காணல்களில் இருந்து குறிப்புகள் உள்ளன.இந்தியாவை சக்திவாய்ந்த ஜனநாயக நாடு, உலகில் உள்ள சூப்பர் பவர் நாடுகளில் ஒன்று என்று பல்வேறு நாடுகளும் தற்போது அங்கீகரிக்கின்றன என்றால், அது இந்தியாவைக் கட்டமைத்த முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவையே சாரும்.மிகவும் கொந்தளிப்பான, பிரச்சனைமிகுந்த நாட்களில் நாட்டை அவர் வழிநடத்திச்சென்றார். அந்த காலக்கட்டத்தில் மிகச்சில நாடுகளால் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்ட ஜனநாயக வழியை அவர் தேர்வு செய்தார். தேர்வு செய்ததுடன் மட்டுமின்றி, சமூகத்தில் பல்வேறு தரப்பட்ட கருத்துகளுக்கும் இடமளித்து வெற்றிகரமாக இந்த நாட்டை வழி நடத்தினார். நாட்டின்பாரம்பரியத்தை நினைத்து, இந்தியாவின்முதல் பிரதமர் நேரு பெருமை கொண்டார்.புதிய இந்தியாவின் தேவைக்கு ஏற்றாற் போல் மாற்றங்களைக் கொண்டுவந்தார்.
பல்வேறு பல்கலைக்கழகங்கள், நவீன இந்தியாவுக்கான கலாச்சார மையங்களை நேரு உருவாக்கினார். நேரு இல்லாவிட்டால் இன்று உள்ள நிலையை இந்தியா எட்டியிருக்க முடியாது. ஆனால், துரதிருஷ்டவசமாக சிலருக்கு வரலாற்றைப் படிக்க நிதானமில்லை அல்லது வேண்டுமென்றே தங்களின் முன்முடிவுகளின் அடிப்படையில் இருக்க விரும்புகின்றனர்; நேருவைத் தவறாக சித்தரிக்கவும் அவர்கள் இயன்றவரை முயற்சிக்கின்றனர். நான் உறுதியாகச் சொல்வேன், போலியான, தவறான குற்றச்சாட்டுகளை நிராகரித்து சரியான கோணத்தில் எல்லாவற்றையும் முன் வைக்கும் வல்லமை வரலாற்றுக்கு உண்டு.
நேரு ‘பாரதமாதா’ அல்லது ‘இந்தியத் தாய்’ எனச் சொன்னது, இந்திய நிலப்பரப்புமுழுக்கப் பரவி வாழும் அனைத்து மக்களையும் குறிக்கும் ஒன்றாகும். இன்றோ, இந்தியாவில் பல மில்லியன் மக்களைத் தவிர்த்து விட்டு, பயங்கரவாதச் சிந்தனையை வளர்ப்பதற்காக, தேசியவாதமும், ‘பாரத் மாதா கி ஜெய்’ முழக்கமும் தவறாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.இவ்வாறு டாக்டர் மன்மோகன் சிங் பேசியுள்ளார்.