india

img

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் : ஆகஸ்ட் மாதத்திற்கான தலைமை பொறுப்பை ஏற்றது இந்தியா

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில், ஆகஸ்ட் மாதத்திற்கான தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுக்கொண்டது.

ஐ.நா.வின் அதிகாரம் மிகுந்த பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக உறுப்பினராக, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்காக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டது. 15 உறுப்பினர் கவுன்சிலில், நிரந்தர உறுப்பினர்களான 5 நாடுகளைத் தவிர்த்து, இந்தியா உள்பட 10 நாடுகள் தற்காலிக உறுப்பினர்களாக உள்ளன.

இந்த கவுன்சிலில் அங்கம் வகிக்கும் நாடுகள் ஒவ்வொன்றும் சுழற்சி முறையில் ஒவ்வொரு மாதமும் கவுன்சிலுக்கு தலைமை தாங்கும். அந்த வகையில் இந்தியா இந்த மாதம் பாதுகாப்பு கவுன்சிலுக்கு  தலைமை ஏற்றுள்ளது.

இந்நிலையில், ஜூலை மாதம் பாதுகாப்பு கவுன்சிலுக்கு தலைமை தாங்கி சிறப்பாக வழிநடத்தியதற்காகவும், இந்தியாவிற்கு ஆதரவு அளித்ததற்காகவும் பிரான்சுக்கு ஐ.நா.வுக்கான இந்திய தூதர் டி.எஸ்.திருமூர்த்தி நன்றி தெரிவித்துள்ளார். 

இந்த பொறுப்புக்கு இந்தியா 9வது முறையாக வந்துள்ளது. இதற்கு முன்னர், 1950 ஜூன், 1967 செப்டம்பர்., 1972 டிசம்பர், 1977 அக்டோபர், 1985 பிப்ரவரி, 1991 அக்டோபர், 1992 டிசம்பர், 2011 ஆகஸ்ட் மற்றும் 2012 நவம்பர் மாதங்களில் இந்தியா தலைமை பதவியை ஏற்றது குறிப்பிடத்தக்கது.