மதுரையை சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவி தான்யா தஸ்னம், வரும் அக்டோபர் மாதம் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு (நாசா) செல்ல தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
‘கோ4குரு’ என்ற அமெரிக்க கல்வி பயிற்சி நிறுவனம், உலகம் முழுவதும் உள்ள மாணவர்களுக்கு ஆண்டு தோறும் அறிவியல் திறமை மற்றும் பொது அறிவு போட்டி நடத்தி வருகிறது. இதில் மாணவர்களை தேர்வு செய்து அமெரிக்காவில் உள்ள நாசாவுக்கு அனுப்பி வருகிறது. இந்நிலையில், 2019-ஆம் ஆண்டுக்கான போட்டியில் இந்தியாவில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் அலிபாக்கில் உள்ள ஜிண்டால் வித்யா மந்திர் பள்ளி மாணவன் அபிஷேக் சர்மா, ஆந்திரா மாநிலம் குண்டூரில் உள்ள பாஷ்யம் குழும பள்ளி மாணவி சாய் புஜிதா மற்றும் மதுரையில் உள்ள மகாத்மா மாண்டிசோரி பள்ளி மாணவி ஜே.தான்யா தஸ்னம் ஆகிய மூன்று மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் வருகிற அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் அமெரிக்கா செல்ல இருக்கிறார்கள். அங்கு ஒருவாரம் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையத்தை சுற்றி பார்ப்பதோடு, விஞ்ஞானிகளுடன் அவர்கள் கலந்துரையாடவும் இருக்கிறார்கள்.
‘நாசா’ செல்வது குறித்து ஜே.தான்யா தஸ்னம் கூறும்போது, “5-ஆம் வகுப்பு படிக்கும்போதில் இருந்தே நாசாவுக்கு செல்லவேண்டும் என்பது என்னுடைய ஆசை. மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாமை என்னுடைய முன்மாதிரியாக கொண்டு கஷ்டப்பட்டு படித்தேன். இதனால் ‘நாசா’ செல்வதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன். இது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. என்னை எங்கள் பள்ளி தாளாளர் பிரேமலதா பன்னீர்செல்வம் ஊக்குவித்ததன் மூலமாகத்தான் இந்த இலக்கை எட்ட முடிந்தது” என்றார்.