புதுதில்லி:
மத்திய அரசுப் பணிகளில் உள்ள ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. 33 ஆண்டுகள் பணியாற்றிய அல்லது 60 வயதை எட்டியவர்களை ஓய்வு பெறச் செய்வது இத்திட்டமாகும்.அரசுத்துறை ஊழியர் மற்றும் பயிற்சித்துறை தெரிவித்துள்ள இக்கருத்து, தற்போது செலவுத்துறையிடம் உள்ளது. அது இத்திட்டத்தின் நிதியாதார விளைவுகளைக் கணக்கிட்டு வருகிறது. தற்போது பெரும்பாலான மத்திய அரசுப் பணிகளில் ஓய்வு பெறும் வயது 60 ஆக உள்ளது. மத்தியஅரசு பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கும், மத்திய அரசு மருத்துவர்களுக்கும் ஓய்வு பெறும் வயது 65 ஆக உள்ளது. ஒருவேளை இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், நாட்டில் வேலையில்லா பிரச்சனையை ஓரளவு குறைக்க உதவுமென்று அரசாங்கம் கருதுகிறது. மேலும், தேக்கத்தைக் குறைக்க வாய்ப்புள்ளது என்றும் அதிகாரிகளின் பதவி உயர்வை துரிதப்படுத்த முடியுமென்றும் அது கருதுகிறது. இத்திட்டத்தை செயல்படுத்த பச்சை விளக்கு காட்டப்பட்டால், அது கட்டம் கட்டமாக அமல்படுத்தப்படும். அனைத்துமத்திய அரசு பணிகளிலும் செயல்படுத்தப்படும்.
இதற்கிடையில் மனித சக்தி திட்டமிடல், பணியாளர்களின் மற்றும் கொள்கைகளை ஒழுங்குப்படுத்த, ஊழியர்கள் வகை மற்றும் பிரிவு வகையில் உள்ள பணியிடங்கள்/பதவிகள், மொத்த எண்ணிக்கை, பல்வேறு துறைகளில் உள்ள காலியாக உள்ள பணியிடங்கள் உள்ளிட்ட தகவல்களை செப்டம்பர் 30க்குள் முடித்துவிட வேண்டும். ஊழியர்களின் கல்வித்தகுதி, பெற்ற பயிற்சிகள் குறித்து அதிகாரிகளுக்கு தெரிந்தவை உள்ளிட்ட தகவல்களையும் பணியாளர் மற்றும் பயிற்சித்துறை கேட்டுள்ளது. மார்ச் 1 2018-ஆம் நாளின்படி, அனைத்து பிரிவிலும் ஒப்புதல் அளிக்கப்பட்ட மொத்த பதவிகளின் எண்ணிக்கை 38 லட்சம். இவற்றில், ‘சி’ பிரிவைச் சேர்ந்த 33.47லட்சம் பணியிடங்கள் உட்பட மொத்தம்38 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்பட்டிருக்கின்றன.
இந்தியாவில் தனிநபர் ஆயுள்கால விகிதம் அதிகரித்து வருவதால் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்க வேண்டுமென்று 2018-19-ல் செய்யப்பட்ட ஒரு பொருளாதார ஆய்வு பலமாக வலியுறுத்தியுள்ளது.