india

img

புதிய ரயில்கள் அறிமுகம் இல்லை: பி.ஆர்.நடராஜன் எம்.பி கேள்விக்கு அமைச்சர் பதில்

புதுதில்லி, மார்ச் 17- புதிய ரயில்கள் அறிமுகம் குறித்து முன்மொழிவுகள் எதுவும் அரசிடம் இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவைக்குழுத் தலைவர் பி.ஆர்.நடராஜன் கேட்டிருந்த கேள்விக்கு ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பதிலளித்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நடைபெற்று வருகிறது. கேள்வி நேரத்தின்போது, மக்களவையில் பி.ஆர். நடராஜன், ஏழு வருடங்களாக நிலுவையில் இருக்கும், பொள்ளாச்சி வழியாக நாகர்கோயில் வரை, மேட்டுப்பாளையம் - கோயம்புத்தூர் ரயில் சேவையை நீட்டித்தல், புதிய இரவு நேர பெங்களூருக்கான ரயில் சேவையை அறிமுகப்படுத்துதல், கோயம்புத்தூர் - பொள்ளாச்சி - மதுரை தினசரி பயணிகள் ரயில் சேவையையும், கோயம்புத்தூர் - பொள்ளாச்சி தினசரி பயணிகள் ரயில் சேவையையும் மீண்டும் துவக்குதல் முதலானவை குறித்து சென்னை, தென் மண்டல தலைமை அலுவலகம், பொது மேலாளர் அவர்களிடமிருந்து ஏதேனும் முன்மொழிவுகள் அரசுக்கு வரப்பெற்றுள்ளதா என்றும், ஆம் எனில் அதன்மீதான நடவடிக்கைகள் என்ன என்றும் கேட்டிருந்தார்.

இதற்கு எழுத்து மூலம் பதிலளித்த ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், 2020 மார்ச் 23இலிருந்து, கொரோனா பெருந்தொற்று பரவலைத் தடுக்கும் வகையில், அனைத்து தினசரி பயணிகள் ரயில்களையும் இந்திய ரயில்வே நிறுத்தி வைத்தது என்றும், கோயம்புத்தூர் - பொள்ளாச்சி - மதுரை பிரிவு பயணிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக, 06463 / 06462 கோயம்புத்தூர் - பழனி சிறப்பு ரயிலும், 06479 / 06480 பழனி - மதுரை சிறப்பு ரயிலும் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன என்றும் கூறினார்.

அவர், மேலும் கோயம்புத்தூர் மற்றும் பெங்களூருக்கு இடையே இரவு நேர ரயில் சேவையை அறிமுகப்படுத்துதல், கோயம்புத்தூர் - மேட்டுப்பாளையம் ரயிலை நாகர்கோயில் வரை நீட்டித்தல் ஆகியவற்றுக்கான உடனடி முன்மொழிவுகள் அரசிடம் இல்லை என்றும் எனினும் செயல்படுத்தும் சாத்தியக்கூறு, போக்குவரத்து தேவை, வளங்களின் கிடைப்பளவு முதலானவற்றை பொறுத்து, புதிய ரயில்கள் அறிமுகப்படுத்துதல் மற்றும் ரயில் சேவைகளை நீட்டித்தல் ஆகியவை இந்திய ரயில்வேயில் நடந்து கொண்டிருக்கும் நடைமுறை என்றும் தெரிவித்தார்.

(ந.நி.)