districts

img

ஊதிய மாற்றத்தில் மேலதிகாரிகளுக்கு ஒரு நீதி, ஊழியர்களுக்கு அநீதி: பிஎஸ்என்எல் ஊழியர்கள் பி.ஆர்.நடராஜன் எம்பியிடம் முறையீடு

கோவை, ஜூன். 27 – ஆட்சியாளர்களின் திட்டமிட்ட கார்ப்ரேட் நலனுக்கான கொள்கைகளால் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வளர்ச்சியை முடக்கிவிட்டு ஊழியர்களின் ஊதிய மாற்றத்தில் ஒன்றிய அரசும், பிஎஸ்என்எல் நிர்வாகமும் அநீதி இழைப்பதாகவும், இதில் நாடாளுமன்ற உறுப்பினர் தலையீடு செய்ய வேண்டும் என பிஎஸ்என்எல் ஊழியர்கள், அதிகாரிகள் கூட்டமைப்பினர் பி.ஆர்.நடராஜன் எம்பியிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.
பிஎஸ்என்எல் நிறுவனத்தில் உள்ள பிரச்சனைகள் குறித்து நாடாளுமன்றத்தில் தலையீடு செய்யுமாறு வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜனிடம் பிஎஸ்என்எல் ஊழியர்கள், அதிகாரிகள் கூட்டமைப்பின் சார்பில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் மகேஷ்வரன், அதிகாரிகள் சங்கத்தின் மூர்த்தி, ஷியாம்சுந்தர், சாத்தப்பன் மற்றும் பிஎஸ்என்எல் ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் மாநில செயலாளர் வினோத் ஆகியோர் மனு அளித்தனர்.
அவர்கள் அளித்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது,
பிஎஸ்என்எல் நிறுவனத்தில் உள்ள ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் ஊதிய மாற்ற பிரச்சனை தீர்வு காணப் படாததால், ஓட்டு மொத்த ஊழியர்களும் ஏமாற்றத்துடனும் தன்முனைப்பின்றியும் உள்ளனர். ஊதிய மாற்றக்குழு பரிந்துரையின் அடிப்படையில், பிஎஸ்என்எல்  ஊழியர்கள் ஊதிய மாற்றத்திற்கு தகுதியானவர்கள் அல்ல என அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அரசாங்கத்தின் இந்த முடிவு தவறானது.
ஊழியர்களின் கட்டுப்பாட்டு எல்லைக்கு அப்பாற்பட்ட காரணங்களாலேயே  பிஎஸ்என்எல்  நிறுவனம் நஷ்டமடைந்தது. பிஎஸ்என்எல்  சேவைகளை விரிவாக்க தேவையான  2ஜி  கருவிகளை வாங்க, 2007  முதல்  2012  வரை அரசாங்கத்தால் அனுமதிக்கப்படவில்லை. இந்த கால கட்டத்தில் தான் இந்திய நாட்டில் மொபைல் சேவை மகத்தான வளர்ச்சியை கண்டது. மொபைல் கருவிகள் வாங்க அனுமதிக்கப்படாததன் காரணமாக  பிஎஸ்என்எல்  தன்னை விரிவாக்கம் செய்துகொள்ள  இயலவில்லை.  இதன் விளைவாக தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள் பெரும் லாபத்தை ஈட்டின.  பிஎஸ்என்எல் 2009-10ஆம் ஆண்டிலிருந்து நஷ்டத்தை சந்தித்தது.   இன்றும் கூட தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள்  5ஜி  சேவைகளை துவங்க தயாராகிக் கொண்டிருக்கிறது. ஆனால் பிஎஸ்என்எல் 4ஜி  சேவையினை கூட துவங்க இயலவில்லை.
பிஎஸ்என்எல்லிடம்  49,300  மொபைல் டவர்களை  4ஜி சேவை தர தகுதியுள்ளதாக மேம்படுத்த முடியும்.  ஆனால்,  இவற்றை மேம்படுத்த அரசு அனுமதி வழங்கவில்லை.  4ஜி  கருவிகளை சர்வதேச தயாரிப்பாளர்களிடம் இருந்து வாங்க, பிஎஸ்என்எல்   நிறுவனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது.  அதே நேரத்தில்,  ஏர்டெல். ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடோபோன் ஐடியா ஆகிய அனைத்து தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களும்  நோக்கியா,  எரிக்சன்,  சாம்சங் போன்ற சர்வதேச நிறுவனங்களிடம் இருந்து  46  கருவிகளை வாங்கி பயன்படுத்தும் போது மேலே கூறப்பட்டுள்ள அதே சர்வதேச நிறுவனங்களிடம் இருந்து கருவிகளை வாங்க, பிஎஸ்என்எல்  நிறுவனத்திற்கு மட்டும் அனுமதி மறுக்கப்பட்டது.  இதுபோன்ற நடவடிக்கைகள்தான்  தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களோடு  பிஎஸ்என்எல்  சமதளத்தில் போட்டி போடுவதற்கு தடையாக இருந்தன. இதற்கு,  எந்த வகையிலும் ஊழியர்களை காரணமாக்க முடியாது.
மேலும், 7வது ஊதியக் குழு பரிந்துரையின் அடிப்படையில்  பிஎஸ்என்எல் நிறுவனத்தில்  உள்ள பொது மேலாளர்கள்,  முதன்மை பொது மேலாளர்கள் மற்றும் தலைமை பொது மேலாளர்கள் போன்றவர்களுக்கு எல்லாம் ஊதிய மாற்றம் மற்றும் அலவன்ஸ்கள் மாற்றம் நடைபெற்று விட்டது ஆனால் அவர்களுக்கு கீழ் பணியாற்றும் அதிகாரிகளுக்கும்,  ஊழியர்களுக்கும்  3ஆவது ஊதிய மாற்றமும் மறுக்கப்படுகிறது. வேறு எந்த பொதுத்துறையிலும் இல்லாத முறையற்ற நிலை. அரசாங்கம் உடனடியாக தலையிட்டு இந்த பாரபட்சத்தை நீக்க வேண்டும். இதுகுறித்து நாடாளுமன்ற உறுப்பினர் தலையீட்டை செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர்.