india

img

கோவிட்-19 சிகிச்சை: கேரள அரசிடம் உதவி கேட்ட மகாராஷ்டிரா அரசு

மகாராஷ்டிராவில், கோவிட்-19 பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கேரளாவில் இருந்து 50 மருத்துவர்களையும்,100 செவிலியர்களையும் அனுப்பி வைக்குமாறு அம்மாநில அரசு, கேரள அரசிடம் உதவி கேட்டுள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலத்தில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50,231 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1645 ஆக உயர்ந்துள்ளது. உலக நகரங்களில் அதிகமாக கோவிட்-19 தொற்று பரவியது மகாராஷ்டிராவில் தான். அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் நிலையிலும், நோய் பரவல் அதிகரித்து கொண்டுதான் வருகின்றது. இந்நிலையில், மும்பை, பூனே பகுதிகளில் கோவிட்-19 சிகிச்சை மையத்தில் பணியாற்ற கேரளாவில் இருந்து 50 மருத்துவர்களையும்,100 செவிலியர்களையும் அனுப்பி வைக்குமாறு மகாராஷ்டிரா அரசு, கேரள அரசிடம் உதவி கேட்டுள்ளது. 

இதுதொடர்பாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜாவிற்கு, மகாராஷ்டிரா அரசு அனுப்பிய கடிதத்தில், எம்.பி.பி.எஸ். முடித்துள்ள மருத்துவர்களுக்கு ரூ.80,000 மாத சம்பளமும், எம்.டி./எம்.எஸ். உள்ளிட்ட படிப்புகளை முடித்துள்ள மருத்துவர்களுக்கு ரூ.2 லட்சம் மாத சம்பளமும், செவிலியர்களுக்கு ரூ.30,000 மாத சம்பளமும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும், அவர்களுக்கு தங்குமிடம், உணவு, பாதுகாப்பு உடைகள், மருந்துகள் உள்ளிட்ட   அனைத்து வசதிகளையும் மாநில அரசே வழங்கும் என்று குறிப்பிட்டுள்ளது.