india

img

மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச கொள்கைகளை பின்பற்ற வேண்டும்... மக்களவையில் பி.ஆர். நடராஜன் வலியுறுத்தல்

புதுதில்லி:
மனித உரிமைகள் பாதுகாப்பு திருத்தச் சட்ட முன் வடிவை திரும்பப் பெற வேண்டும் என்றும் மனித உரிமைகள் தொடர்பாக சர்வதேச அளவில் உள்ள கொள்கைகளையும் தர நிர்ணயங்களையும் மத்திய அரசு பின்பற்ற வேண்டும் என்றும் பி.ஆர். நடராஜன் வலியுறுத்தினார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மக்களவையில் வெள்ளியன்று, 1993ஆம் ஆண்டு மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழான விவாதம் நடைபெற்றது. அதில் பங்கேற்று, பி.ஆர். நடராசன் பேசிய தாவது:
இந்தச் சட்டத்தில் மிகவும் குறிப்பிடத்தக்க விதத்தில் உள்ள பலவீனம் என்னவெனில், காவல்துறையினர் மற்றும் ஆயுதப் படையினர் மக்களிடம், குறிப்பாக காஷ்மீரிலும், வட கிழக்கு மாநிலங்களிலும்  நடந்துகொள்ளும் அத்துமீறல் நடவடிக்கை கள் குறித்து,  ஆய்வு செய்வதில் தோல்வி அடைந்திருப்பதாகும்.

ஆயுதப்படையினருக்கு அளவில்லா அதிகாரம்
1933ஆம் ஆண்டு சட்டத்தின் 19ஆவது பிரிவு, ஆயுதப் படையினர் இம்மாநிலங்களில் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளும் மனித உரிமை மீறல்கள் குறித்து மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்துக் குறிப்பிடு கிறது.
மேலும், 1993ஆம் ஆண்டில் மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டு, அதன்பின்னர் 26 ஆண்டுகள் ஆகியும், தில்லி, அருணாச்சலப் பிரதேசம், மிசோரம் மற்றும் நாகாலாந்து ஆகிய சில மாநிலங்களில் இன்னமும் மனித உரிமைகள் ஆணையம் அமைக்கப் படவில்லை. இம்மாநிலங்களில், தேசப் பாதுகாப்பு என்ற பெயரில் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இப்பகுதிகளில் உள்ள, 1958ஆம் ஆண்டு ஆயுதப் படையினர் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம், ஆயுதப் படையினருக்கு தேசப் பாதுகாப்பு என்ற பெயரில் வரையறை இல்லாத அளவிற்கு அதிகாரங்களை வாரிவழங்கி இருக்கிறது. அவர்கள் என்ன அத்துமீறல் நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் அவர்களுக்கு எவ்விதத் தண்டனையும் கிடையாது.

மீறலில் முதலிடம்
மனித உரிமை மீறல்களில் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் முதலிடத்தை வகிக்கிறது. இம்மாநிலத்தில் மட்டும் ஆயுதப் படையினர் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தின்கீழ் 2016ஆம் ஆண்டில் மட்டும் இந்திய ராணுவத்தினர் மற்றும் துணை ராணுவப் படையினருக்கு எதிராக,  இவர்கள் செய்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக 92 முறையீடுகள்  பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.அடுத்து அஸ்ஸாம் மாநிலம் வருகிறது. இம்மாநிலத்தில் 58 முறையீடுகள் பதிவு செய்யப் பட்டிருக்கின்றன. மணிப்பூர் மாநிலத்தில் 21 முறையீடுகள்.  மேகாலயா மற்றும் அருணாசலப் பிரதேசங்களிலும் முறையீடுகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இவ்வாறாக மொத்தம் பதிவு செய்யப்பட்டுள்ள 186 முறையீடுகளில், 74 இந்திய ராணுவத்தினருக்கு எதிரானவைகளாகும். ராணுவத்தினர் மேற்கொண்ட என்கவுண்ட்டர்களில் கொல்லப்பட்டவர்கள் தொடர்பாக மட்டும் 24 முறையீடுகள் இருக்கின்றன. ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் கொல்லப்பட்டவர்கள் தொடர்பாக 16 முறையீடுகள். போலி என்கவுண்ட்டர்கள் தொடர்பாக 21 வழக்குகள். பத்து வழக்குகள் வன்புணர்வுக் குற்றங்கள் மற்றும் ஆள் கடத்தல் சம்பந்தப்பட்டவைகளாகும்.  

உச்சநீதிமன்ற ஆணை
2017 ஜூலை 14 அன்று உச்சநீதிமன்றம் அளித்த ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பில், உச்சநீதிமன்றம் முதன்முறையாக, மணிப்பூரில் ஆயுதப் படையினர் சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தின்கீழ் நடைபெற்ற போலி என்கவுண்ட்டர்கள் தொடர்பான 1,528 வழக்குகளை கவனத்தில் எடுத்துக்கொண்டு, அவற்றில் 97இன் மீது விசாரணை செய்திட மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகத்திற்கு ஆணை பிறப்பித்தது.ஆயுதப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் பாலியல் துஷ்பிரயோகங்கள் குறித்து கவலை தெரிவித்த உச்சநீதிமன்றம், ராணுவத்தினர் என்றால் சீருடையில் உள்ள வன்புணர்வாளர்களா என்று கடுங்கோபத்துடன் கேள்வி எழுப்பியது.

ஐரோம் சர்மிளா என்பவரால் சுமார் 16 ஆண்டுகள் உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்ட வழக்கு குறித்து நாம் அனைவரும் அறிவோம். இவை தொடர்பாக மேலும் அதிக விவரங்களுக்குள் நான் செல்ல விரும்பவில்லை.திரும்பப்பெற வேண்டும்
இப்போது 2019ஆம் ஆண்டு மனித உரிமைகள் பாதுகாப்பு (திருத்தச்) சட்டமுன்வடிவில் கொண்டு வரப்பட்டிருக்கின்ற திருத்தங்களுடன் நான் ஒத்துப்போகவில்லை.  இதனைத் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்கிறேன்.  இந்தச்சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யக்கூடாது என்றும் அரசாங் கத்தைக் கேட்டுக் கொள்கிறேன்.இறுதியாக இச்சட்டமுன்வடிவிற்கு என் கடுமையான எதிர்ப்பினைப் பதிவு செய்து, என் உரையை நிறைவுசெய்கிறேன். மனித உரிமைகள் தொடர்பாக சர்வதேச அளவில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொள்கை கள் மற்றும் தரநிர்ணயங்களை இந்த அரசும் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.இவ்வாறு பி.ஆர். நடராஜன் பேசினார். (ந.நி.)