பெட்ரோல், டீசல் வாகனங்களின் பதிவு மற்றும் புதுப்பிக்கும் கட்டணங்களை பல மடங்கு உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக மத்திய அரசு மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்கப்படுத்தும் விதமாக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக டீசல் மற்றும் பெட்ரோலில் இயங்கும் வாகனங்களின் பதிவு மற்றும் புதுப்பிக்கும் தொகையை பல மடங்கு உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அதன்படி திருத்தப்பட்டு மீண்டும் தாக்கல் செய்யப்பட்டுள்ள மோட்டார் வாகன மசோதாவில் வாகனப் பதிவு மற்றும் வாகன மறுபதிவிற்கான கட்டணம் 400 மடங்காக உயரும் சூழல் உருவாகி உள்ளது. இதில் பயணிகள் ரயில் கார்களுக்கான கட்டணம் தற்போது வசூலிக்கப்படும் ரூ.600ல் இருந்து ரூ.5000 ஆக உயர்த்தப்படும். அதே போல வாகன பதிவை புதுப்பிக்கும் கட்டணமும் ரூ.10,000 ஆக உயர்த்தப்படும் என தெரிகிறது.
இரு சக்கர வாகனம் பதிவு கட்டணம் ரூ. 50ல் இருந்து ரூ.1,000 ஆக உயர்த்தப்படுகிறது. கனரக வாகனங்களை புதுப்பிக்கும் வாகனங்கள் கட்டணம் ரூ.2000ல் இருந்து ரூ.40,000 ஆக உயர்த்தப்படலாம் என போக்குவரத்துத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எரிபொருளில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டைக் குறைக்கும் வகையிலும், மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கையையும், பயன்பாட்டையும் அதிகரிக்கும் வகையிலும் வாகனப் பதிவுக் கட்டணங்களை பல மடங்கு உயர்த்த மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் முடிவுசெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.