இந்தியாவில் தற்போது எம்.பி ஆகவும், எம்.எல்.ஏ ஆகவும் பதவி வகிக்கக்கூடிய 107 பேர் மீது வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசியதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 40% பேர் பா.ஜ.க-வை சேர்ந்தவர்கள் என ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
தேசிய தேர்தல் கண்காணிப்பகத்துடன் இணைந்து ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் என்ற அமைப்பும் தற்போதைய எம்.பி, எம்.எல்.ஏ-களின் தேர்தல் பிரமாண பத்திரங்களை ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், 33 எம்.பி-க்கள், 74 எம்.எல்.ஏ-கள் என மொத்தம் 107 பேர் மீது வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசியதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 40% பேர் (22 எம்.பி-க்கள், 20 எம்.எல்.ஏ-க்கள்) பா.ஜ.க-வை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
வெறுப்புணர்வைத் தூண்டிய வழக்கில் சிக்கிய எம்.பி-க்கள் அதிகம் உள்ள மாநிலமாக உத்தரப்பிரதேசம் (7 எம்.பி-க்கள்) உள்ளது; இவ்வழக்கில் சிக்கிய எம்.எல்.ஏ.க்கள் அதிகம் உள்ள மாநிலமாக உத்தரப்பிரதேசம் (9 எம்.எல்.ஏ-க்கள்) மற்றும் பீகார் (9 எம்.எல்.ஏ-க்கள்) உள்ளது.
அதேபோல், கடந்த 5 ஆண்டுகளில் சட்டப்பேரவைகள், மக்களவை, மாநிலங்களவை தேர்தல்களில் போட்டியிட்ட 480 வேட்பாளர்கள் மீது வெறுப்புணர்வை தூண்டிய வழக்கு இருப்பது தெரியவந்துள்ளது.