india

img

ஈரானுக்கு செல்ல வேண்டாம்: இந்திய வெளியுறவுத் துறை அறிவுறுத்தல்!

மத்திய கிழக்கில் போர்ப்பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் என்று இந்திய வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

காசா, லெபனானில் உள்ள ஈரானின் ஆதரவு பெற்ற ஹமாஸ், ஹிஸ்புல்லாக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகின்றது. கடந்த ஜுலை மாதம், ஈரானுக்கு சென்றிருந்த ஹமாஸின் முக்கிய தலைவரான மாயில் ஹனியேவை அந்நாட்டில் வைத்தே இஸ்ரேல் கொலை செய்தது.

இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் அறிவித்திருந்த நிலையில், கடந்த வாரத்தில் ஹிஸ்புல்லாவின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். தொடர்ந்து, லெபனானில் இஸ்ரேல் படையினர் தரைவழித் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், செவ்வாய்க்கிழமை இரவு 200-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவி இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதை அடுத்து மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இந்திய வெளியுறவுத்துறை தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்தப் பதிவில், நாங்கள் ஈரானின் தற்போதைய பாதுகாப்பு நிலையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம்.ஈரானுக்கான அனைத்து அத்தியாவசியப் பயணங்களையும் தவிர்க்குமாறு இந்தியர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

தற்போது ஈரானில் வசிப்பவர்கள் விழிப்புணர்வுடன் இருக்கவும். தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பில் இருக்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.