புதுதில்லி, அக். 4 - சிறை வாழ்க்கையிலும் சாதியடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவதை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளி யிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
சிறைக்கூடங்களில் சாதி அடிப்படையில் காட்டப்படும் பாகுபாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு, நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று ஒன்றிய மற்றும் மாநில அரசாங்கங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது.
மிகவும் அருவருக்கத்தக்க சாதி அமைப்புமுறைக்கு எதிராக பெரிதும் அவசியமான யுத்தம் நடத்தப்பட வேண்டும் என்று தலைமை நீதிபதி தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு கூறியிருப்பது, ஒரு முக்கியமான தலையீடு ஆகும்.
‘கௌரவத்துடன் வாழ்வதற்கான உரிமை சிறையில் உள்ளவர்களுக்கும் பொருந்தும்’ என்றும், பல்வேறு சிறைக் கையேடுகள் மற்றும் சட்டங்களில் சாதிச் சார்பு மற்றும் பிரிவினையை அனுமதிக்கும் விதிகள் அமைந்திருப்பது அரசமைப்புச்சட்டத்திற்கு எதிரானது என்றும் நீதிமன்றம் பிரகடனம் செய்திருக்கிறது.
சாதியப் பாகுபாடுகள் மற்றும் தீண்டாமைக் கருத்துகளின் அடிப்படையில் கைதிகளுக்கு பணி நியமனங்கள், வீட்டு வசதிகள் மற்றும் உணவு தயாரிப்புகள் ஆகியவற்றை உட்படுத்தும் விதிகள் சிறைக் கையேட்டில் இருப்பதைச் சுட்டிக்காட்டி, அவை அனைத்தையும் நீக்குமாறு ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறை வாழ்க்கையில் சாதி அடிப்படையிலான பாகு பாட்டைக் களைவதற்கு நீதிமன்றம் பரிந்துரைத்துள்ள மூன்று மாத காலத்திற்குள் அனைத்து நடவடிக்கை களையும் அனைத்து அரசாங்கங்களும் தொடங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோருகிறது. இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது. (ந.நி.)