india

img

தலைமை நீதிபதியை தாக்க முயன்ற வழக்கறிஞரை பாராட்டிய பாஜக தலைவர்!

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது காலணியை வீச முயன்ற வழக்கறிஞர் ராகேஷ் கிஷோரை கர்நாடக மாநில பாஜக தலைவரும், பெங்களூருவின் முன்னாள் காவல் ஆணையருமான பாஸ்கர் ராவ் பாராட்டி இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் என்பவர் காலணி வீசி தாக்க முயன்றார். அப்போது, நீதிமன்ற பாதுகாவலர்கள் துரிதமாக செயல்பட்டு அந்த நபரை தடுத்து அவரை வெளியேற்றினர். வெளியே சென்றபோது, ‘சனாதன தர்மத்தை அவமதித்தால் நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம்' என அந்த நபர் கூச்சலிட்டபடி சென்றார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மத்தியப் பிரதேசத்தில் உள்ள கஜுராஹோவில் 7 அடி உயரமுள்ள விஷ்ணு சிலையை மீட்டெடுப்பது தொடர்பான வழக்கின் விசாரணையில், ​​தலைமை நீதிபதியின் கருத்துக்களால் வழக்கறிஞர் அதிருப்தி அடைந்ததாக தெரியவந்தது. மேலும், "தலைமை நீதிபதி மீது காலணியை வீசியதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. இதை செய்தால் நான் சிறைக்குச் செல்வேன், அங்கே துன்பப்பட வேண்டியிருக்கும் என்று எல்லா விளைவுகளையும் யோசித்தேன். ஆனால் கடவுளின் பெயரில் இதை செய்தேன். ஏனென்றால் கடவுள் என்னை இதையெல்லாம் செய்யத் தூண்டினார்" என ராகேஷ் கிஷோர் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். 
இந்த நிலையில், வழக்கறிஞர் ராகேஷ் கிஷோரை கர்நாடக மாநில பாஜக தலைவரும், பெங்களூருவின் முன்னாள் காவல் ஆணையருமான பாஸ்கர் ராவ் பாராட்டி இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ராகேஷ் கிஷோரின் போலி எக்ஸ் கணக்கு ஒன்றில், "ஒரு நிலைப்பாட்டை எடுத்து அதன்படி வாழ்ந்ததற்காகவும், வழக்கறிஞரின் துணிச்சலையும் பாராட்டுகிறேன்" என்று பாஸ்கர் ராவ் பதிவிட்டிருந்தார். பின்னர் கண்டனங்கள் எழுந்த நிலையில், அந்த பதிவை அவர் நீக்கியுள்ளார்.