articles

img

சமூக நிலையை பிரதிபலிக்கும் கரூர் சோகம் - எம்.கண்ணன்

கரூர் விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் நிகழ்ந்த துயரச் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்தது ஒரு சாதாரண விபத்து அல்ல. சினிமா நட்சத்திரங்களை தெய்வமாக வழிபடும் ரசிகக் கலாச்சாரத்தின் உச்சகட்ட வீழ்ச்சியை இது வெளிப்படுத்துகிறது. இந்தப் பரிதாபகரமான நிகழ்வு, இளைய தலைமுறையினரின் ‘அரசியல் தன்மையற்ற’ வளர்ச்சியால் எழுந்திருக்கும் ஆழமான கட்ட மைப்புப் பிரச்சனைகளையும் வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது.

 தலைவர்தான் தெய்வமா?

 இந்தச் சம்பவம் நம்முன் ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறது. ஒரு அரசியல் கட்சியின் ஆதரவாளர்கள், ஏன் அரசியல் உணர்வு கொண்டவர்களாகச் செயல்படாமல், சமூகப் பொறுப்புணர்வு இல்லாமல் வெறும் தலைவர் வழிபாட்டு வெறியர்களாக நடந்து கொள்கிறார்கள்? ‘தற்குறி, அணில்குஞ்சுகள்’ என சமூக ஊட கங்களில் இன்று கடும் விமர்சனங்களைச் சுமக்கும் அந்த இளைஞர் கூட்டத்தின் இந்த மன நிலைக்கு, அவர்கள் மட்டுமே காரணமா? இல்லை!  அவர்களை வழிநடத்தத் தவறிய இந்தச் சமூகத்திற்கு, அவர்களின் எதிர்காலத்தை வடி வமைக்க வேண்டிய அரசுக்கு, ஜனநாயகத்தின் குரலாக ஒலிக்க வேண்டிய இயக்கங்களுக்கு இதில் எந்தப் பொறுப்பும் இல்லையா என்ற கேள்வி எழுகிறது.

நிஜமும் நிழலும்-  திரையும் அரசியலும்!

தமிழகத்தில் சினிமாவிற்கும் அரசிய லுக்கும் உள்ள தொடர்பு புதியதல்ல. எம்.ஜி.ஆர்.,  கருணாநிதி, ஜெயலலிதா, விஜயகாந்த் போன்ற ஆளுமைகள் வெற்றிகரமாக இரண்டு துறைகளிலும் இயங்கினார்கள். ஆனால், அவர்கள் காலத்தில் ஆதரவாளர்களிடம் குறிப்பிடத்தக்க அளவில் அரசியல் நாகரிகம் இருந்தது. அந்த நாகரிகம்தான் தமிழகத்தில் பாஜகவின் பிண அரசியலுக்கு இடமளிக்க வில்லை. குறிப்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின்  அரசியல் முதிர்ச்சியோடு கரூர் சம்பவத்தை கையாண்ட விதம் மக்களின் பாராட்டைப் பெற்றிருக்கிறது.  கரூரில் கூடிய கூட்டத்தில் அந்த அரசியல் நாகரிகம் அல்லது அரசியல் பண்பு இல்லை. பெரும்பான்மையான இளைஞர்கள், தங்கள்  நட்சத்திரங்களை வெறும் நடிகர்களாக மட்டும் கருதாமல், அவர்களை ஒழுக்கசீலர்களாகவும், நீதியின் அடையாளமாகவும், கிட்டத்தட்ட புராண கதாபாத்திரங்கள் போலவும் பார்க்கின்றனர். பகுத்தறிந்து பார்க்கும் தன்மை மறைந்து, நிழலுக்கும் நிஜத்திற்குமான வித்தியாசத்தைக் கூட கண்டறியும் திறனற்றவர்களாக அவர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

கல்வி கொடுத்த பாடம் என்ன?

இந்த இளைஞர்களின் மனநிலைக்குப் பின்னால், நாம் இன்று புறக்கணித்திருக்கும் ஒரு காரணி இருக்கிறது. அதுதான் கல்வி அமைப்பு. 1990-க்கு முன்பு பள்ளிகளில் குடி மையியல், வரலாறு போன்றவை முக்கியத்து வம் பெற்றிருந்தன. மாணவர் பேரவைகள் செயல்பட்டன. ஜனநாயகச் செயல்பாடுகளைக் கற்றுக் கொடுத்த அந்தக் கல்வி முறை, இன்று எங்கே இருக்கிறது? தாராளமயமாக்கல் கொள்கைகளின் தாக்கத்தாலும், 2010-க்குப் பிறகு STEM (அறி வியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம்)  துறைகளில் மட்டுமே கவனம் குவிக்கப்படு கிறது. சமூக அக்கறை மற்றும் மனிதநேயம் படிப்படியாகப் புறக்கணிக்கப்பட்டன. இன்று போட்டித் தேர்வு மையங்களை நோக்கி இளை ஞர்கள் படையெடுக்கும்போது, குடிமையியல் கல்வி ஒரு சுமையாகக் கருதப்பட்டு ஓரங்கட் டப்பட்டுள்ளது. ஜனாக்ரஹா (Janaagraha) அமைப்பின் ஆய்வுப்படி, இன்று பள்ளிகளில் குடிமையியல்  கல்விக்கு வெறும் 6 சதவிகித நேரம் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படுகிறது. புதிய கல்விக் கொள்கை (NEP 2020), அடிப்படை எண்ண றிவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்போது, குடிமையியல் திறன்களை மதிப்பிடும் முறை யிலிருந்து விலக்கியிருக்கிறது. இதன் விளை வாக, கேள்விகேட்கும் மனப்பான்மை இல்லாத, பகுப்பாய்வுத் திறன்கள் வளர்க்கப்படாத, சமூகப் பொறுப்பற்ற ஒரு தலைமுறையை நாம் உருவாக்கிக்கொண்டிருக்கிறோம். “அனைத்துமே விற்பனைக்கு” என்ற  உலகமயமாக்கலின் போட்டி மனப்பான்மை யில், தனிமனித வெற்றி மட்டுமே இலக்கா கிறது. ஆனால், ஒரு தேசம் வல்லரசாக உயர்வது பொருளாதாரத்தால் மட்டுமல்ல; அது விழிப்புள்ள குடிமக்களின் குரல்களாலேயே.

 டிஜிட்டல் சிறை!

இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் சுமார் 30 முதல் 32 சதவிகிதம் பேர், Gen Z (ஜென் - இசட்) எனப்படும் புதிய தலைமுறை யினர் (1997-2012-ல் பிறந்தவர்கள்). இவ்வ ளவு பெரிய இளைஞர் சக்தி, ஏன் ஜனநாயகத்தின் சக்கரத்தைப் பிடித்துச் சுழலாமல்  விலகி நிற்கிறது? 72 சதகிகித இளை ஞர்கள் அரசியல் பங்கேற்பைத் தவிர்க்கிறார் கள் என்கிறது சமூக அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் (CSDS)ஆய்வறிக்கை. இளைஞர்கள் நாள் ஒன்றுக்குச் சராசரி யாக 4.5 மணி நேரத்துக்கும் மேல் ஸ்மார்ட்போ னில் செலவிடுகின்றனர். இதனால், அவர் களின் “கவன காலம்” இன்று வெறும் 8 விநாடி களாகச் சுருங்கிவிட்டாதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. ட்விட்டர், இன்ஸ்டாகிராம் ஷார்ட்ஸ் போன்ற தளங்கள், அரசியல் தகவல்களை வெறும் மீம்ஸ் வடிவிலும், சுருக்கமான துணுக்கு களாகவும் (Snippets) வழங்குகின்றன. இத னால், இளைஞர்கள் ஆழமான பகுப்பாய்வு களைப் படிக்கப் பொறுமையற்றவர்களாக, தலைப்புச் செய்திகளை மட்டும் படித்துவிட்டு மேலோட்டமான அறிவுடன் வாழப் பழகிவிட் டார்கள். 91 சதவிகித ஜென் இசட் (Gen Z) இளைஞர் கள் சமூக ஊடகங்களில் இருந்தே செய்தி களைப் பெறுகிறார்கள் என்கிறது கூகுள் மற்றும் கான்டார் (Kantar) என்ற தரவு மற்றும் நுண்ண றிவு மையத்தின் ஆய்வுகள். மேலும், சமூக ஊடகங்களின் அமைப்பே, ஒருவருக்குப் பிடித்தமான கருத்துக்களை மட்டுமே திரும்பத் திரும்பக் காட்டி, அவர்களை ‘எதிரொலி அறைகளில்’ (Echo Chambers) அடைக்கிறது. இதனால், விமர்சனச் சிந்தனை குறைந்து, நிழலுக்கும் நிஜத்திற்கும் உள்ள வித்தியாசம் தெரியாமல், அரசியல் ஆதரவு சினிமா நட்சத்திர வழிபாட்டை நோக்கிச் செல்கிறது.

குடும்பத்தின் பொறுப்பு எங்கே?

ஒரு குழந்தைக்கு அரசியல் உணர்வை ஊட்டும் முதல் பாடசாலை வீடு. ஆனால், இன்று நடுத்தர வர்க்கக் குடும்பங்களில், பொருளாதார நெருக்கடியும், வேலைப்பளுவும் பெற்றோர் களை அழுத்த, பிள்ளைகளுடன் மனம்விட்டுப் பேசும் நேரம் குறைந்துவிட்டது. அவர்களின் பேச்சு, மதிப்பெண்களையும், உயர் கல்விச் செலவுகளையும் தாண்டி, சமூகப் பொறுப்பு களை நோக்கி நகர்வதேயில்லை. இதனால், சமூக அக்கறை என்பது மதிப்பெண் தாளில் இல்லாத ஒரு தேவையற்ற சுமையாகக் கருதப்படுகிறது. ஓய்வு நேரத்தை ஓடிடி (OTT) தளங்களில் செலவிடும் குடும்பங்களில், சினிமாவும் பிர பலங்களும் உரையாடலின் மையமாகிவிட்டன. இதனால் இளம் தலைமுறையினர், அரசியல் தலைவர்களையும் சினிமா நட்சத்திரங்களை வழிபடுவது போலவே பார்க்கப் பழகுகின்றனர்.

காலத்தின் கட்டாயம்!

அரசியலுக்கு வரும் பிரபலங்கள், கொள்கைகளுக்குப் பதிலாகத் தனிநபர் ஆளுமையை விற்கின்றனர். இது அரசியலைச் சமூகப் பொறுப்பாக இல்லாமல், ஒரு சினிமா போன்ற பொழுதுபோக்காக மாற்றுகிறது. ரசிகர்களாக இருப்பது தவறில்லை; ஆனால் சமூகப் பொறுப்பற்ற ரசிக மனநிலைதான் ஆபத்தானது! ஜென் இசட் (Gen Z) இளைஞர்களின் அரசியல் அறிவுணர்வுப் பற்றாக்குறை என்பது பல்வேறு காரணிகளின் கூட்டுத் தாக்க மாகும். இதனைச் சரி செய்ய, கல்வித் துறை சீர்திருத்தம், குடும்ப மட்டத்தில் அரசியல் விவாதங்கள், அரசின் நேர்மையான முயற்சி கள் மற்றும் சிவில் சமூகத்தின் செயல்பாடு ஆகியவை காலத்தின் கட்டாயமாகும். அர சியல் கல்வி என்பது வெறுமனே பாடமாக அல்ல, அது ஜனநாயகத்தின் கவசமாக மீண்டும் உயிர்பெற வேண்டும்.