பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உடனான எல்லை தாண்டிய வர்த்தகத்திற்கு மோடி அரசு தடைவிதித்துள்ளது. மோடி அரசின் இந்த நடவடிக்கைக்கு காஷ்மீரில் உள்ள எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன
இந்தியா- பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இடையேயான எல்லைத் தாண்டிய வர்த்தகம், தற்போது பாரமுல்லா மாவட்டம் உரியிலுள்ள சலமாபாத், பூஞ்ச் மாவட்டத்திலுள்ள சக்கான் டா-பாக் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. இந்த வர்த்தகமானது, வாரத்துக்கு 4 நாள்கள் நடைபெறுகிறது. இந்நிலையில் எல்லை தாண்டிய வர்த்தகத்துக்கு இந்தியா தற்போது மீண்டும் தடை விதித்துள்ளது. இந்தியாவின் இந்த தடைவிதிப்பு வர்த்தகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
எல்லை தாண்டிய வர்த்தகத்தை பாகிஸ்தானை தளமாகக் கொண்டு செயல்படும் சில சக்திகள் தவறாகப் பயன்படுத்துகின்றன என்றும், இந்த வர்த்தகத்தைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக ஆயுதங்கள், போதைப் பொருள்கள், கள்ள கரன்சி நோட்டுகள் மற்றும் பிற பொருள்கள் பாகிஸ்தானில் இருந்து கடத்தி வரப்படுகின்றன என்றும் விசாரணை அமைப்புகள் அறிக்கை அளித்தன. இதைப் பரிசீலித்து சலமாபாத், சக்கான் டா- பாக் ஆகிய இடங்களில் நடைபெறும் எல்லை தாண்டிய வர்த்தகத்துக்கு தற்காலிகத் தடை விதிப்பதென்று அரசு முடிவு செய்துள்ளது”என்று அந்த அறிவிப்பில் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
ஏற்கனவே வாஜ்பாய் ஆட்சி காலத்தில் துவங்கப்பட்ட இந்த வர்த்தகத்தை தடை செய்திருப்பது பிற்போக்குத்தனமானது என்று காஷ்மீர் அரசியல் கட்சிகள் விமர்சித்துள்ளன.
மத்திய அரசின் இந்த நடவடிக்கை, அண்டை நாட்டுடனான உறவை மேலும் மோசமாக்கவே செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காஷ்மீரை பாஜக தனது அரசியல் நலனுக்காக பலிகடா ஆக்குவதாக மெகபூபா முப்தி விமர்சித்துள்ளார்.