அயோத்தி வழக்கின் விசாரணை இன்று நிறைவடைந்த நிலையில், தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கில், நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம்லல்லா விரஜ்மான் ஆகிய 3 அமைப்புகளும் சமமாகப் பிரித்துக் கொள்ள வேண்டும் என அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த 2010-ஆம் ஆண்டில் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதை அடுத்து, இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு வெளியே பிரச்சினையைத் தீர்த்துக் கொள்வதற்காக மத்தியஸ்த குழுவை உச்ச நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் நியமித்தது. ஆனால் சமரச முயற்சி தோல்வி அடைந்ததால் இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி முதல் தொடர்ந்து விசாரித்து வந்த நிலையில், அக்டோபர் 18-ஆம் தேதிக்குள் விசாரணை முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த 18-ம் தேதி உத்தரவிட்டது. இந்நிலையில் 40 நாட்களாக நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணை இன்று நிறைவு செய்யப்பட்டது. மேலும், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி அறிவிக்காமல் உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.