india

img

மருத்துவமனை அனுப்புவதற்கு பதில் ஜாமீன் வழங்குங்கள்..... மும்பை உயர்நீதிமன்றத்தில் சமூக செயற்பாட்டாளர் ஸ்டான் சுவாமி உருக்கம்....

மும்பை:
‘உடல் நலிவுற்ற தன்னை மருத்துவமனை சிகிச்சைக்கு அனுப்பினால், ஒருவேளை நான் அங்கு இறந்துகூடபோகலாம்.. அதற்குப் பதில் இடைக் கால ஜாமீன் வழங்குங்கள்..’ என்று மனித உரிமைச் செயற்பாட்டாளர் ஸ்டான்சுவாமி மும்பை உயர் நீதிமன்றத்தில் உருக்கமான வேண்டுகோள் வைத்துள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்தவரான பாதிரியார் ஸ்டான் சுவாமி, ஜார்க் கண்ட் மாநிலத்தில் பழங்குடி மக்களின் நலனுக்கான பணிகளில் ஈடுபட்டுவந்தார். ஆனால், அவரை மகாராஷ்டிர மாநிலத்தில் 2018-ஆம் ஆண்டுநிகழ்ந்த பீமா கோரேகான் வன்முறை வழக்கில், மத்திய அரசின் விசாரணைஅமைப்பான ‘தேசிய புலனாய்வு முகமை’ (NIA) கைது செய்து சிறையில்அடைத்தது.

ஏற்கெனவே நடுக்குவாத (Parkinson) நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஸ்டான் சுவாமி, மும்பையின் டலோஜா சிறையில் கடும் சிரமங்களைஅனுபவித்தார். அவர் உணவை உறிஞ்சித்தான் குடிக்க முடியும் என்ற நிலையில், அதற்கான குவளைகூட (Sipper and Straw) வழங்கப்படவில்லை. இதனால், சிறையில் ஸ்டான் சுவாமியின் உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டதால், வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், பாதிரியார் ஸ்டான் சுவாமியின் உடல்நிலையை ஆய்வு செய்ய ஒரு மருத்துவர் குழுவை அமைக்க வேண்டும் என்றும் மும்பை ஜேஜே மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்ப வேண் டும் என்று உத்தரவிட்டது. 

இதனிடையே, ஸ்டான் சுவாமியைபரிசோதித்த ஜே.ஜே. மருத்துவமனைநிர்வாகம், தனது அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில், ‘ஸ்டான் சுவாமி இரு காதுகளிலும் தீவிர செவித்திறன் இழப்புக்கு ஆளாகியுள்ளார். அவரது உடல், கால்களில் நடுக்கம் ஏற்பட்டுள்ளது. எனவேவாக்கிங் ஸ்டிக் அல்லது சக்கர நாற் காலி வடிவில் அவருக்கு உதவி தேவைப்படுகிறது. ஆனாலும் அவரதுஇதய துடிப்பு விகிதம் சீராக உள்ளது’என்று கூறியிருந்தது.

அதைத்தொடர்ந்து, ஒட்டுமொத்தஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு ஸ்டான் சுவாமி பொது சிகிச்சைக்காக ஜே.ஜே. மருத்துவமனையில் சேர விரும்புகிறாரா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியது. அப்போது, ‘ஜே.ஜே. மருத்துவமனை எனக்கு என்ன மருந்துகளைத் தரும்..? நான் இரண்டு முறை அங்கு சென்றிருக்கிறேன்... அங்குள்ள அமைப்பு எனக்குத் தெரியும்... எனவே, நான் அங்கு செல்ல விரும்பவில்லை’ என்று தெரிவித்த ஸ்டான்சுவாமி, ‘ஒருவேளை அங்கு சென்றால்நான் மிகவும் கஷ்டப்படுவேன், இறக்கக் கூட நேரிடும். எனவே சிகிச்சைக்கு பதிலாக எனக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட வேண்டும்’ என்றுகுறிப்பிட்டார். 

அதற்கு, ‘நீதிமன்றம் உங்களை மருத்துவமனையில் அனுமதிப்பது குறித்துத்தான் விசாரிக்கிறது. ஜாமீன்மனு தொடர்பாக அல்ல’ என்று கூறியநீதிபதிகள் ‘ஸ்டான் சுவாமியின் பிரச்சனைகள் வயது தொடர்பானவை மட்டுமே என்று அவருக்குத் தெரிகிறது.அதனால்தான் அவர் இடைக்கால ஜாமீனுக்காக மட்டுமே அழுத்தம் கொடுக்கிறார்’ என்றும் குறிப்பிட்டனர். அத்துடன், ஸ்டான் சுவாமிக்கு சுகாதார வசதிகள் மற்றும் சிகிச்சைகள் வழங்குவது குறித்து ஜே.ஜே. மருத்துவமனை அளித்த அனைத்து பரிந்துரைகளையும் பின்பற்றுமாறு டலோஜா சிறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.