india

img

அரசின் அலட்சியத்தால் ஆதார் கிடைக்காமல் போராடும் இரட்டையர்கள்!

மகாராஷ்டிரா- ஆதார் அட்டை கிடைக்காததால் இரட்டையர்களின் வாழ்க்கையே கேள்விக்குறியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் சாங்லி மாவட்டத்தைச் சேர்ந்த இரட்டைச் சகோதரர்கள் நிலேஷ் மற்றும் யோகேஷ் ஆகியோருக்கு ஆதார் அட்டை புதுப்பிக்கப்படாததால், கல்வி, அரசு நலத்திட்டங்கள், வேலைவாய்ப்பு என எல்லாவற்றிலும் பிரச்சனைகளைச் சந்தித்து வருகின்றனர்.
கடந்த 8 ஆண்டுகளாக இவர்கள் மட்டுமின்றி இவர்களது பெற்றோரும் ஆதார் அட்டை பெறுவதற்காக அரசு அலுவலகங்களுக்கு அலைந்து வருகின்றனர்.
நிலேஷ் பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். யோகேஷ் 12ஆம் வகுப்பு முடித்துவிட்டு ஐடிஐ (ITI) படித்து வருகிறார்
நிலேஷ், யோகேஷ் இருவருக்குமே சிறு வயதில் ஆதார் அட்டை வழங்கப்பட்டிருக்கிறது. ஐந்தாம் வகுப்பு படிக்கையில், ​​ஆதாரை புதுப்பித்த போது சிக்கல் ஏற்பட்டது. முறையாக விண்ணப்பித்தாலும் நிராகரிக்கப்பட்டது. அதன்பிறகு நூற்றுக்கணக்கான முறை விண்ணப்பித்தும் பலன் கிடைக்கவில்லை.
யோகேஷ், நிலேஷ் ஆகிய இருவரின் கை ரேகையும், கருவிழியும் ஒரே மாதிரியாக இருந்ததே ஆதாரில் ஏற்பட்ட சிக்கலுக்குக் காரணம் என்று சில நாளிதழ்களில் செய்திகள் வெளியாகின.
ஆனால் இதுதான் காரணமா, அல்லது சரியான பிரச்சனை என்ன என்பதை அரசு அலுவலகம் கூறவில்லை என்று இரட்டைச் சகோதரர்களின் தந்தை கூறியுள்ளார்.
இதனால் அவர்களது பள்ளி, கல்லூரி வாழ்க்கையில் பல கஷ்டங்கள். சட்டத்தின் படி எங்கள் பிள்ளைகள் உண்மையில் இருக்கிறார்களா இல்லையா என்று யாரேனும் ஒருவர் ஆச்சரியப்படத் தான் செய்கிறார்கள் என்கிறார் இரட்டையர்களின் தாய்.கல்லூரிச் சேர்க்கை, கல்வி உதவித்தொகை, இட ஒதுக்கீடு, அரசுத் திட்டங்கள் மற்றும் வேலைகள் கிடைப்பதில் சிரமங்கள் இருப்பதாக யோகேஷ், நிலேஷ் ஆகியோர் சொல்கிறார்கள்.
ஆதார் அட்டை இல்லாமல் கல்வி உதவித்தொகை மற்றும் அரசின் திட்டங்களைப் பெற முடியாது. இதன் காரணமாக என்னால் உதவித்தொகைக்கான படிவத்தை நிரப்ப முடியவில்லை. ஐடிஐ (ITI) படிப்பிற்கான முழு கட்டணத்தையும் செலுத்த வேண்டியிருந்தது. என்று யோகேஷ் கூறுகிறார்.
பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், மொபைல் சிம் கார்டு போன்றவற்றைப் பெறுவதிலும், ஒரு வங்கிக் கணக்கு தொடங்குவதிலும் கூட தாங்கள் சிரமங்களை எதிர்கொள்வதாகச் சகோதரர்கள் கூறுகின்றனர்.
நிலேஷுக்கு 18 வயது பூர்த்தியான பிறகு, 15,000 ரூபாய் சம்பளத்தில் ஒரு வேலை கிடைத்தது. ஆனால் ஆதார் பிரச்சனை காரணமாக அந்த வேலையை இழந்ததாகக் கூறுகிறார் நிலேஷ்
காவல்துறையில் பணியில் சேரவேண்டும் என்ற இந்த இரட்டையர்களின் கனவு முறையாக ஆதார்கார்ட் கிடைக்காததால் சுக்குநூறானது என குடும்பமே மனமுடைந்துள்ளனர்.
தானாஜி மற்றும் அவரது மனைவி சவிதா இருவரும் திராட்சைத் தோட்டத்திற்கு வேலைக்குச் செல்கிறார்கள். ஆனால் தங்களது ஆதார் அட்டையிலும் ஏற்பட்டுள்ள சிக்கலால், அடிக்கடி ஊதியம் கிடைக்காமல் போகிறது.
அருகில் உள்ள அரசு அலுவலகம் முதல் மும்பை வரை சென்றும் எந்த பயனுமில்லை. 
இந்தியக் குடிமகன் ஒவ்வொருவரின் உரிமை என ஆதாரை ஒன்றிய அரசு விளம்பரம் செய்கிறது ஆனால் இதே ஆதாரால் இவர்களது வாழ்க்கையே கேள்விக்குறியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.