லக்கிம்பூர் வன்முறையை கண்டித்து மகாராஷ்டிராவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இதனால் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதுடன், சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரியில் கடந்த வாரம் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அப்போது, அவ்வழியே காரில் வந்த ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா விவசாயிகள் மீது காரை ஏற்றியதில் 2 பேர் கொல்லப்பட்டனர். பின்னர் மாநில பாஜக அரசின் காவல்துறையினர் விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 4 விவசாயிகள் உட்பட 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஆசிஷ் மிஸ்ரா மீது உத்தரபிரதேச போலீஸார் கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
இந்நிலையில், இந்த வன்முறை சம்பவத்தை கண்டித்து மகாராஷ்டிராவில் இன்று ஆளும் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் சார்பில் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
மும்பை உள்பட மாநிலம் முழுவதும் நேற்று நள்ளிரவு முதலே முழு அடைப்பு கடைபிடிக்கப்படுகிறது. ஆம்புலன்ஸ் சேவை, மருந்து கடைகள், பால் சப்ளை போன்ற அத்தியாவசிய பணிகள் தவிர மற்றவை அனைத்தும் மூடப்பட்டுள்ளன.