india

img

கிரிக்கெட் ரசிகர்களுக்கு மட்டும் எதற்காக தடை.... கும்பமேளாவால் கொரோனா பரவாதா...? திக்விஜய் சிங் அதிரடி கேள்வி

போபால்:
இந்தியாவில் தடுப்பூசி போடும் பணி இரண்டாம் கட்டத்தை எட்டியிருந்தாலும் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. கடந்த 6 நாட்களில் மட்டும் கொரோனா தொற்றால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் 2 லட்சத்து 23 ஆயிரத்து 432 பேர்களாக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 131 பேர் பலியாகியுள்ளனர். 

இதையடுத்து, கொரோனா பாதிப்புக்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி மாநில முதல்வர்களுடன் காணொலிமுறையில் ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார்.குஜராத்தில் கொரோனா தொற்றுப் பரவலைக் காரணம் காட்டி, அகமதாபாத்தில் நடைபெறவுள்ள இந்திய - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. இதேபோல வேறுபல நிகழ்வுகளுக்கும் தடை விதிப்பது குறித்து தீவிர யோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆனால், இவ்வளவு களேபரங்களுக்கு இடையேயும், உத்தரகண்ட் மாநில கும்பமேளா மட்டும் எந்த தடையும் இல்லாமல் நடந்து வருகின்றது. தினமும் பல லட்சம் பேர், ஒரே இடத்தில் கூடி புனித நீராடி வருகின்றனர். இதுபற்றி அங்குள்ள பாஜக முதல்வருக்கு எந்த பதைபதைப்பும் ஏற்படவில்லை.மாறாக, “உத்தரகண்ட் கும்பமேளாவுக்கு பக்தர்கள் வராதீர்கள் என்று நான் தடுக்கமாட்டேன். அதேபோல கும்பமேளாவில் கலந்துகொள்ள கொரோனா பரிசோதனை சான்றிதழும் கேட்கமாட்டேன். இதுவரை 32 லட்சம் முதல் 33 லட்சம் பேர் புனித நீராடலுக்கு வந்து சென்றுள்ளனர். அடுத்து 3 புனித நீராடல்களில் மேலும் பல லட்சம் பேர் கூட உள்ளனர்” என்று அம்மாநில முதல்வர் தீரத் சிங் ராவத் ஆணவத்துடன் பேட்டி அளித்துள்ளார். இது விவாதங்களை கிளப்பியுள்ளது.குறிப்பாக- பாஜக ஆட்சியாளர்களின் முன்னுக்குப் பின் முரணான இந்த நிலைபாட்டை மத்தியப்பிரதேச முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான திக் விஜய் சிங் காட்டமாக விமர்சித்துள்ளார்.இதுகுறித்து டுவிட்டரில் பதிவு ஒன்றைஅவர் வெளியிட்டுள்ளார். அதில், “கொரோனா தொற்றுப் பரவும் அச்சத்தால் கிரிக்கெட் ரசிகர்களுக்கு போட்டியை நேரில் காணத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், லட்சக்கணக்காண மக்கள் குவியும் உத்தரகண்ட் கும்பமேளா நிகழ்ச்சிக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். நன்றி..!” என குறிப்பிட்டுள்ளார்.