சென்னை
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளருமான கொடியேரி பாலகிருஷ்ணன் (68) சென்னையில் சனியன்று (அக்.1) காலமானார்.
புற்று நோயால் பாதிக்கப்பட்ட கொடியேரி பாலகிருஷ்ணன் ஆகஸ்ட் 28-ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.2006 முதல் 2011 வரை விஎஸ் அச்சுதானந்தன் அரசில் உள்துறை அமைச்சராகப் பணியாற்றிய கொடியேரி பாலகிருஷ்ணன், உடல்நலக் குறைவு காரணமாக ஆகஸ்ட் கடைசி வாரத்தில் கட்சியின் கேரள மாநிலச் செயலாளர் பதவியிலிருந்து விலகினார்.
வாழ்க்கை குறிப்பு
கொடியேரி பாலகிருஷ்ணன் 1953 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதி தலச்சேரியில் உள்ள கொடியேரியில் பிறந்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான கேரள மாணவர் அமைப்பின் மூலம் அரசியலுக்கு வந்தவர். 1980ல் இந்திய ஜனநாயக வாலிபர் சம்மேளனத்தின் (டிஒய்எப்ஐ) கண்ணூர் மாவட்டத் தலைவராக கொடியேரி பொறுப்பேற்றார்.
தலச்சேரி நாயகன்
கேரள சட்டப்பேரவைக்கு தலச்சேரி தொகுதியில் இருந்து 1982 முதல் 1991 வரையிலும், மீண்டும் 2001 முதல் 2016 வரையிலும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2001 முதல் 2006 வரையும் 2011 முதல் 2016 வரையும் கேரள சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராக இருந்தார். 2006 முதல் 2011 வரை வி.எஸ்.அச்சுதானந்தன் அமைச்சகத்தில் உள்துறை மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சராகப் பணியாற்றினார்.
மாநிலச்செயலாளர்
2015 ஆம் ஆண்டு ஆலப்புழாவில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் மாநிலச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2022 ஆகஸ்ட் வரை இந்த பொறுப்பில் அவர் இருந்தார். உடல் நலக்குறைவு காரணமாக அவர் தனது செயலாளர் பொறுப்பில் இருந்து விலகினார். கட்சியின் நாளிதழான தேசாபிமானி தலைமை ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
மறைந்த தோழர் கொடியேறி பாலகிருஷ்ணனுக்கு எஸ்.ஆர்.வினோதினி என்ற மனைவியும், பினாய் கொடியேரி, பினீஸ் கொடியேரி என்ற இரு மகன்களும் உள்ளனர்.
தமிழ்நாடு தலைவர்கள் விரைவு
தோழர் கொடியேறி பாலகிருஷ்ணன் மறைவு செய்தி அறிந்தவுடன் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மற்றும் மூத்த தலைவர்கள் சென்னை அப்பல்லோ மருத்துமவனைக்கு விரைந்தனர்.