புதுதில்லி:
புனரமைப்புப் பணி என்ற பெயரில், ஜாலியன் வாலாபாக் தியாகிகளின் நினைவிடத்தைஒன்றிய பாஜக அரசு மலினப்படுத்தி விட்டதாகபல்வேறு தரப்பிலும் தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் ரௌலட்அடக்குமுறைச் சட்டத்திற்கு எதிராக, 1919-ஆம்ஆண்டு, பஞ்சாப் மாநிலம் ஜாலியன் வாலாபாக்கில் போராடிய ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள், குழந்தைகள் மீது, ஜெனரல்டயர் என்ற வெள்ளை அதிகாரி 1650 ரவுண்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்தினான்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் ஆயிரக்கணக்கானோர் செத்து மடிந்தனர். அரசாங்கத்தின் கணக்கே 379 பேர் ஆவர். மைதானத்தின் கிணற்றுக்குள் இருந்து மட்டும் 120 உடல்கள்மீட்கப்பட்டன. பல ஆயிரம் பேர் காயம் அடைந்தனர். இப்படி விடுதலைப் போராட்டத்திற்காகமக்களின் குருதி ஆறாக பாய்ந்த இடம் ஜாலியன் வாலாபாக். இந்நிலையில்தான், நரேந்திர மோடிதலைமையிலான ஒன்றிய பாஜக அரசு, ஜாலியன் வாலாபாக் படுகொலை நினைவிடத்தை சீரமைத்து, அழகுபடுத்தியிருக்கிறது. இரவுநேரங்களில் கண்கவர் வண்ண விளக்குகளால் ஒளிரும் வண்ணம் மாற்றியிருக்கிறது.இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
ஜாலியன் வாலாபாக் நுழைவுவாயில் மற்றும் வெளியேறும் இடங்கள் மாற்றப்பட்டு,பிரதான நினைவிடத்தைச் சுற்றி ஒரு தாமரைக்குளம் கட்டப்பட்டுள்ளது. கண்மூடித்தனமாக சுடப்பட்ட துப்பாக்கி தோட்டாக்களில் இருந்து தப்பிக்க மக்கள் குதித்த புகழ்பெற்ற ‘ஷாஹிதி கு’ அல்லது தியாகிகள் கிணறு, இப்போது ஒரு கண்ணாடி மூடியால் அடைக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டிலிருந்து மக்கள் தப்ப முடியாதபடி அடைக்கப்பட்ட குறுகிய பாதை மாற்றப்பட்டு பளபளப்பான புதியதளம் அமைக்கப்பட்டுள்ளது.ஜாலியன் வாலாபாக் தியாகிகள் நினைவிடத்தை புனரமைக்கிறோம் என்ற பெயரில்,வெறும் கவர்ச்சி நோக்கிலும், கார்ப்பரேட் வணிகமய நோக்கிலும் மோடி அரசு செயல்பட்டுள்ளது. நினைவுச் சின்னத்தின் பாரம் பரிய மதிப்பீடுகள் அனைத்தை சீரழித்து விட்டது என்று வரலாற்று ஆய்வாளர்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.வரலாற்று நிகழ்விடங்களை சீரமைப்பதுஎன்பது அவை எப்படி இருந்ததோ, அதன் எந்த தோற்றமும் மாறாமல் அப்படியே சீரமைப்பதுதான் அந்த இடத்தின் முக்கியத்துவத்தைத் தக்கவைக்கும். வரலாற்று நிகழ்வுகள் நடைபெற்ற இடத்திற்குச் சென்றால் அதுஅந்தக்கால வரலாற்று நிகழ்வை பார்வையாளர்களுக்கு கடத்தும் வகையில் இருக்க வேண்டும். பல ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஓவியங்கள் எல்லாம் அப்படியே தான்பாதுகாக்கப்படுகின்றன. பாதி அழிந்திருக்கிறது என்பதற்காக அவைகள் புதிதாக வரையப்படுவதில்லை. அப்படி வரைந்தால் அது வரலாற்றை சிதைத்துவிடும். இந்த தவறுதான் ஜாலியன் வாலாபாக் விஷயத்தில் நடந்திருக்கிறது என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.
ஜாலியன் வாலாபாக் செல்லும் குறுகிய வழியில் உள்ள சுவற்றில் தற்போது சிற்பங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன. சுவற்றில் குண்டுகள் பட்ட இடங்கள் அதன் தனித்தன்மையை இழந்திருக்கின்றன. ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த மொத்த இடமும் சீரமைப்பிற்குப் பிறகு மாறிப்போயிருக்கிறது. இங்கு மிகப்பெரிய படுகொலை நடந்தஉணர்வையே அந்த இடம் பிரதிபலிக்கவில்லை என்று கூறியுள்ள அவர்கள், “ஒரு பெரும் துயரம் நடைபெற்ற இடத்தை வண்ணவிளக்குகளை ஒளிரச்செய்து கொண்டாடுவது சரிதானா?” என்ற கேள்விகளையும் எழுப்பியுள்ளனர்.உங்களுக்கு வரலாறு தெரியாது என்றால், உங்களுக்கு எதுவும் தெரியாது; தான் மரத்தின் ஒரு பகுதிதான் என்று தெரியாத இலையைப் போன்றவர்கள் நீங்கள் என்ற பிரபல எழுத்தாளர் மைக்கேல் க்ரிக்டனின் கூற்றையும் அவர்கள் மோடி அரசுக்கு நினைவுபடுத்தியுள்ளனர்.