புதுதில்லி:
வரும் மே 26 அன்று கருப்புக்கொடி ஏற்ற வேண்டும் என்றும், அன்றைய தினத்தை கருப்பு தினமாக அனுசரித்திட வேண்டும் என்றும் ‘சம்யுக்த கிசான் மோர்ச்சா’ என்னும் அனைத்து விவசாய சங்கங்களின் முன்னணி விடுத்துள்ள அறைகூவலுக்கு இடதுசாரிக் கட்சிகள், திமுக உட்பட நாட்டின் பிரதான எதிர்க்கட்சிகள் பன்னிரண்டும் ஆதரவினை அளித்துள்ளன.
வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த ஆறு மாதங்களாக நடைபெற்றுவரும் அனைத்து விவசாயிகள் முன்னணி தங்களின் வீரஞ்செறிந்த அமைதியான விவசாயப் போராட்டம் தொடங்கி வரும் மே 26 அன்று ஆறு மாதங்கள் நிறைவடைகின்றன. இதனைக் குறித்திடும்விதத்தில் அன்றைய தினம் நாடு முழுதும் எதிர்ப்புதினம் அனுசரித்திட வேண்டும் என்று சம்யுக்த கிசான் மோர்ச்சா அறைகூவல்விடுத்தது. இதற்கு 12 பிரதான எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரி வித்துள்ளன.
இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் து.ராஜா, இந்திய தேசியக் காங்கிரஸ்தலைவர் சோனியா காந்தி, திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே,திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்குவங்க முதல்வரு மான மம்தா பானர்ஜி, ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் எச்.டி.தேவ கவுடா, தேசியவாதக் காங்கிரஸ் தலைவர் சரத் பவார், ஜம்மு-காஷ்மீர் மக்கள் கூட்டணி தலைவர் ஃபரூக் அப்துல்லா, சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகிய பன்னிரண்டு பேரும் கையெழுத்திட்டு ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:
கடந்த ஆறு மாதங்களாக வீரஞ்செறிந்தமுறையில் அமைதியாக நடைபெற்றுவரும் விவசாயிகள் போராட்டத்தின் ஆறு மாதங்கள் நிறைவடைவதைக் குறிக்கும் விதத்தில் வரும் மே 26 அன்றுநாடுதழுவிய அளவில் எதிர்ப்புதினம் அனுசரித்திடுமாறு சம்யுக்த கிசான் மோர்ச்சா என்னும் அனைத்து விவசாயிகள் சங்க முன்னணி விடுத்துள்ள அறைகூவலுக்கு நாங்கள் எங்கள் ஆதரவை தெரிவித்துக் கொள்கிறோம். 2021 மே 12 அன்று நாங்கள் கூட்டாக பிரதமர் மோடிக்குஒரு கடிதம் எழுதியிருந்தோம். அந்தக்கடிதத்தில், “கொரோனா வைரஸ் பெருந்தொற்றில் பலியாகியிருக்கும் நமக்கு, உணவு அளித்திடும் உழவர் பெருமக்கள் (நம் அன்னதாதாக்கள்) பல லட்சக்கணக்கானவர்களைப் பாதுகாத்திட, நிறைவேற்றப்பட்டுள்ள வேளாண் சட்டங்களை ரத்து செய்திட வேண்டும்” என்றும் “அப்போதுதான் அவர்களால் இந்திய மக்களுக்கு உணவு அளித்திட உணவு உற்பத்தியைத் தொடர்ந்திட முடியும்” என்றும் கூறியிருந்தோம்.
வேளாண் சட்டங்கள் உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் சுவாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் சி2 + 50 சதவீத உயர்வுடன் குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணயம் செய்வதை சட்டப்பூர்வமானதாக மாற்றிட வேண்டும் என்றும் நாங்கள் கோரி வருகிறோம். இந்த அடிப்படையில் மத்திய அரசாங்கம் தன் பிடிவாதத்தைக் கைவிட்டு, போராடும்அனைத்து விவசாய முன்னணி தலைவர்களுடன் உடனடியாகப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கிடவேண்டும். இவ்வாறு அவர்கள் தங்கள் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்கள். (ந.நி.)
*************
மோடி பதவியேற்ற கருப்பு நாள் ..... தமிழகத்தில் வெற்றிகரமாக்கிட மார்க்சிஸ்ட் கட்சி அழைப்பு
புதுதில்லியில் ஆறு மாதங்களாக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, நாடு முழுவதும் மே 26 அன்று கருப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. மேலும் இதை தமிழகத்திலும் வெற்றிகரமாக நடத்திட பொதுமக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
மத்திய பாஜக அரசால் நிறைவேற்றப்பட்டுள்ள விவசாயிகளுக்கு விரோதமான மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தி கடந்த ஆறு மாத காலமாக விவசாயிகள் புதுதில்லியில் திரண்டு போராடி வருகின்றனர். உலகத்தில் இப்படியொரு ஒரு தொடர்ச்சியான போராட்டம் இதுவரை நடைபெற்றதில்லை. வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டத்தை மிகவும் அமைதியான முறையில் விவசாயிகள் நடத்தி வருகின்றனர்.ஆனால், மத்திய பாஜக அரசு போராடி வரும் விவசாயிகளின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி இப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக, பிடிவாதப் போக்கை கடைபிடித்து வருவது வன்மையான கண்டனத்திற்குரியது.இன்னொரு பக்கம், நரேந்திர மோடி ஆட்சியில் இந்திய நாட்டின் 130 கோடி மக்களும் சொல்லொணா கொடுமைகளுக்கு ஆளாகி வருவதோடு. கொரோனா நோய் கொடுமைகளாலும் தவித்து வருகின்றனர், இரண்டரை கோடி மக்கள் கொரோனா நோய்த் தொற்றுக்கு பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இறப்பு விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுதவிர, ஆக்சிஜன் பற்றாக்குறையால் மூச்சுத் திணறி அன்றாடம் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் மடிந்து வருகின்றனர். தடுப்பூசி பற்றாக்குறை, மருத்துவ படுக்கை வசதியின்மை போன்ற கொடுமைகளால் இந்திய நாட்டு மக்கள் தவித்து வருகின்றனர்.
அனைத்தையும் விட இறந்தவர்களை எரிப்பதற்கு கூட வழியில்லாமல் கங்கை ஆற்றில் பிணங்களை தூக்கி வீசும் அவல நிலைமை மோடி ஆட்சியில் ஏற்பட்டுள்ளது. பல நகரங்களில் இறப்பவர்களை அடக்கம் செய்ய மூன்று நாட்கள் வரை காத்துக் கிடக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. மோடி பதவியேற்று ஆட்சிக்கு வந்த இந்த ஏழு ஆண்டுகளில் இந்தியா அனைத்து அம்சங்களிலும் படுதோல்வியடைந்துள்ளது.இந்திய நாட்டு மக்களுக்கு உணவு அளித்து வரும் விவசாயிகள் ஆறு மாதம் போராடியும் அவர்களது பிரச்சனைகளை தீர்க்க தவறிய மோடி அரசை கண்டித்தும், மோடி பதவியேற்று ஏழு ஆண்டுகள் நிறைவு பெறும் தினமான மே 26 அன்று நாடு முழுவதும் “கருப்பு தினம்” கடைபிடிக்க விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு அறைகூவல் விடுத்துள்ளது. இதற்கு திமுக, காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ உள்பட பிரதானமான 12 எதிர்க்கட்சிகள் ஆதரவினை தெரிவித்துள்ளன.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து தற்போது ஊரடங்கு அறிவிக்கப் பட்டுள்ள நிலையில், அதற்கு பாதகமில்லாத வகையில், 2021 மே 26 ஆம் தேதி விவசாயிகள் போராட்டத்திற்கு தங்களது ஆதரவை வெளிப்படுத்தும் விதமாகவும், மோடி அரசுக்கு கண்டனத்தை தெரிவிக்கும் வகையிலும் பொதுமக்கள் அனைவரும் தங்களின் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி, கருப்பு தினத்தை வெற்றிகரமாக்கிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் தமிழக மக்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.
மத்திய அரசு விவசாயிகள் சங்க பிரதிநிதிகளை அழைத்துப் பேசி மூன்று வேளாண் விரோத சட்டங்களையும் திரும்பப் பெறுவதுடன், வேளாண் விளைபொருட்களுக்கு தீர்மானிக்கப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் சட்டம் இயற்றவும், மின்சார திருத்த மசோதா 2021ஐ திரும்ப பெறவும் முன்வர வேண்டுமென மத்திய அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.