புதுதில்லி:
மிதமான கொரோனா பாதிப்பிலிருந்து பாதுகாக்க ஆயுஷ்-64 மற்றும் கபசுர குடிநீர் பயனுள்ளதாக இருந்தது என்று ஆயுஷ் இணையமைச்சர் மகேந்திரபாய் முன்ஞ்சபாரா தெரிவித்தார்.
மாநிலங்களவையில் அவர் அளித்த எழுத்துப்பூர்வ மான பதில் வருமாறு:
ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய மருந்துகள் நிறுவனம் (IMPCL), 18 ஆயுர்வேத தயாரிப்புகளுக்கு, WHO-GMP/COPP சான்றிதழுக்காக விண்ணப்பித்துள்ளது. இந்த விண்ணப்பத்தை இந்திய மருந்து தலைமைக் கட்டுப்பாட்டு அலுவலகம், மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு(CDSCO), உத்தரகண்ட் மாநில உரிமம் ஆணையம் அதிகாரிகள் கடந்த மார்ச் மாதத்தில் ஆய்வு செய்தனர். இந்த கூட்டு ஆய்வு குழுவின் முடிவுகள் ஐஎம்பிசிஎல் நிறுவனத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு WHO-GMP/COPP சான்றிதழை இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு உகந்த வழிகாட்டுதல்கள் மற்றும் விதிமுறைகளுடன் வழங்கலாம்.
மிதமான கொரோனா பாதிப்புக்கு ஆயுஷ்-64 மற்றும் கபசுர குடிநீர் பயனுள்ளதாக இருந்தது என அறிவியல் ஆய்வுகளில் தெரியவந்ததால், இரண்டாம் அலையின் போது, ஆயுஷ்-64, மற்றும் கபசுர குடிநீர் பயன்படுத்தப்பட்டன. உரிமம் பெற்ற ஆயுஷ்-64 தயாரிப்பாளர்களை அனுமதிக்கவும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அறிவுறுத்தப்பட்டன. ஆயுஷ் மருந்துகள் குறித்து 152 மையங்களில், 126 ஆராய்ச்சிகள் ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் உள்ள ஆராய்ச்சி அமைப்புகள் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.