புதுதில்லி:
மோடி அரசு, பெரும் முதலாளிகள் ஆதாயம் பெறும் வகையில் பொதுத்துறைகளை தனியாருக்கு தாரை வார்க்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக நாடு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட வழித்தடங்களில் ரயில் போக்குவரத்தை தனியார்மயமாக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், சுற்றுலா சார்ந்த ரயில் பெட்டிகளை தனியாருக்கு குத்தகைக்கு வழங்கவும், விற்கவும் ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. கலாச்சாரம், மதம் மற்றும் இன்ன பிற சுற்றுலா வகைகளுக்கு ரயில்களை தனியார் துறையினர் இயக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக தனியார் துறையினருக்கு ரயில் பெட்டிகளை குத்தகைக்கு விடவும், விற்பனை செய்யவும் பரிசீலிக்கப்படுகிறது.
இதுதொடர்பான கொள்கையை யும், திட்டத்தின் விதிமுறைகளையும், நிபந்தனைகளையும் முடிவு செய்வதற்கு செயல் இயக்குநர் அளவிலான உயர்மட்டக்குழுவை ரயில்வே அமைத்துள்ளது என்று ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த திட்டத்தின்கீழ் செயல்பட விருப்பம் உள்ளவர்கள் குறைந்த பட்சம் 16 ரயில்பெட்டிகளை வாங்கவோ, குத்தகைக்கு எடுக்கவோ வேண்டும் என்றும் பயண வழிகள், பயணத்திட்டம், கட்டணம் போன்ற வற்றைநிர்ணயித்துக்கொள்ள அனு மதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.