india

img

3715 ரயில்களை உடனே இயக்குக.... விரைவு வண்டிகளில் பொதுப் பெட்டிகளை இணைத்திடுக.. ரயில்வே அமைச்சரிடம் சு.வெங்கடேசன், கலாநிதி வீராசாமி நேரில் வலியுறுத்தல்...

புதுதில்லி:
கொரோனா பொது முடக்கத்தைக் காரணம் காட்டி நிறுத்தப்பட்டுள்ள சாதாரண பயணிகள் இரயில்களை உடனே இயக்கிட வேண்டும் என இரயில்வே அமைச்சரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி ஆகியோர் நேரில் வலியுறுத்தினர். '

அவர்கள் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்விடம் அளித்த மனு விபரம் வருமாறு:பெரும் தொற்று ஏற்பட்டவுடன் அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கத்தை காரணம் காட்டி சாதாரண பயணி வண்டிகள் ரத்து செய்யப்பட்டன.2019-20 இல் 3,715 சாதாரண பயணி வண்டிகள் ஓடின. விரைவு வண்டிகளும் புறநகர் வண்டிகளும் ரத்து செய்யப்பட்ட போது அவையும் ரத்து செய்யப்பட்டன. அவற்றில்  200 கிலோ மீட்டருக்கு மேல் ஓடிய 500 வண்டிகள் விரைவு வண்டிகள் ஆக மாற்றப்பட்டன. ஆனால் விரைவு வண்டி களும் புறநகர் போக்குவரத்தும் அத்தியாவசிய பயணிகளுக்கும் திறந்துவிடப்பட்ட பின்னும் சாதாரண பயணிகள் வண்டிகள் இயக்கப்படாத நிலை நீடிக்கிறது. அதுமட்டு மல்ல, விரைவு வண்டிகளில் பொது பெட்டிகளும் இணைக்கப்படுவது இல்லை.
சாதாரண பயணி வண்டிகள் மொத்த  பயணிகளில் 22 சதமானம் ஆகும். இவர்கள் அனைவரும் பெரும்பாலும் கிராமப்புற மக்கள் ஆவர். கிராமங்களிலிருந்து ஒட்டிய நகரங்களுக்கு அவர்கள் அன்றாடம்தங்கள் பொருள்களை எடுத்துச்சென்று விற்பதற்கும் வேலை பார்ப்பதற்கும் நகரங்களுக்கு சென்று வரஇந்த சாதாரண வண்டிகள் மிகவும்பயன்பாடு உடையனவாக இருந்தன.இவர்களுக்கு சீசன் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டதால் மிகக் குறைந்த கட்டணத்தில் சென்று வருவது கிராமப்புற மக்களுக்கு மிகவும் சாத்தியமானதாக இருந்தது .மொத்த வருமானத்தில் ஆறு சதமானம் தான் இந்த பயணி வண்டிகளில் இருந்து வருமானம் என்ற போதிலும் சமூக கடமை ஆற்றும் நோக்கத்தோடு இந்த வண்டிகள் ஓட்டப்பட்டன.

பொது முடக்கம் படிப்படியாக விலக்கிக் கொள்ளப்பட்டு விரைவு வண்டிகளும் புறநகர வண்டிகளும் ஓரளவுக்கு இயக்க ஆரம்பிக்கப்பட்ட பின்னும் சாதாரண பயணி வண்டிகள் இயக்கப்படாதது கிராமப்புற மக்களுக்கு மிகவும் பாதகமாக அமைந்துள்ளது.விரைவு வண்டிகளையும் பெரும்பகுதி புறநகர வண்டிகளையும் இயக்கினாலும் சாதாரண பயணிவண்டிகளை இயக்காததன் உள்நோக்கம் என்ன? லாபம் வரும் வண்டிகளை மட்டும் ஓட்டிவிட்டு லாபம் வராத வண்டி களை ஓட்டக்கூடாது என்ற கொள்கையை ரயில்வே அமைச்சகம் எடுத்து உள்ளதா என்ற கேள்வி எழுகிறது. பெருந்தொற்று, சமூக இடைவெளியை கோருகிறது. இப்போது பேருந்துகள் கிராமப்புறங்களுக்கு இயக்கப்படுகின்றன. கிராமப்புறங்களில் இருந்து வருவதற்கு ரயில்வண்டிகள் இல்லாததால் பேருந்து கள் மிகவும் நெரிசலாக உள்ளன. இது சமூக இடைவெளியை மிகவும்பாதிக்கிறது.

எனவே சமூக இடைவெளியை உருவாக்க பேருந்துகளுடன்  சாதாரண பயணி வண்டிகளும் இயக்கப்பட்டால் பயணிகள்பரவலாக பயணிப்பது சாத்திய மாகும். சமூக இடைவெளியும் நிறைவேறும். எனவே இந்த காரணத்துக் காக பயணி வண்டிகளை இயக்கவில்லை என்று கூறுவது ஏற்புடையதல்ல. கிராமப்புற மக்களுக்கு இதுபாரபட்சம் காட்டுவதாகும். எனவே    கிராமப்புற மக்களுக்கு உதவிட சாதாரண பயணிகள்  இரயில்வண்டிகளை உடனே இயக்கிட வேண்டும். அத்துடன் சாதாரண மக்களுக்காக விரைவு வண்டிகளில் பொது பெட்டிகளை இணைக்கவும் வேண்டும்.இவ்வாறு அவர்கள் வலியுறுத்தி னர். இது சம்பந்தமாக விரைவில் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதி கூறினார்.

வந்தனா வீட்டிற்குச் செல்லுங்கள்
முன்னதாக ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூரை நேரில் சந்தித்த சு.வெங்கடேசன் எம்.பி.,பெண்கள் ஹாக்கி அணி இந்தியஇளம் பெண்களிடம் ஏற்படுத்தி யுள்ள நம்பிக்கையை மேலும் வலிமைப்படுத்த வீரர்களுக்கு விழாவும், தலா ரூ1 கோடி சிறப்பு பரிசும், வந்தனா வீட்டிற்கு நேரில் சென்று ஆதரவும் தெரிவிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.